இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்ப்பணத்தில் நடைபெறுமா ? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மயூரப்பிரியன்.

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டு  2 வருடங்கள் கடந்த நிலையில் மாணவி படுகொலை வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணம் தான் என்ன என்பது புரியவில்லை.
கடந்த இரண்டு வருடகாலமாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாராணை நடைபெற்று வந்தது.
மாணவி படுகொலைக்கு பின்னர் குடாநாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து சந்தேக நபர்களை யாழ்ப்பான சிறையில் தடுத்து வைப்பது பாதுகாப்பில்லை என அவர்கள் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.
கடந்த இரண்டு வருட காலமாக வவுனியா சிறைசாலையில் இருந்து சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
வழக்கு தவனைகளின் போது அனுராதபுர சிறைச்சாலை வாகனத்தில் அனுராதபுர சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அதிகாலை 2 மணியளவில் அங்கிருந்து வவுனியா சிறைசாலைக்கு செல்வார்கள். அங்கு அதிகாலை 4 மணியளவில் சந்தேக நபர்களை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளிடம் பொறுப்பேற்று யாழ்ப்பாணம் நோக்கி புறப்படுவார்கள்.
அதன் போது சிறைச்சாலை வாகனத்திற்கு பாதுகாப்பாக வவுனியாவை சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் வருவார்கள். கிளிநொச்சி மாவட்ட எல்லையில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் விசேட அதிரடி படையினர் சிறைசாலை வாகனத்திற்கான பாதுகாப்பை பொறுப்பேற்று அவர்கள் பின்னர் அழைத்து வருவார்கள். யாழ்ப்பான பொலிஸ் விசேட அதிரடி படையினர் பளைக்கு சென்று கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடி படையினரிடம் இருந்து சிறைச்சாலை வாகனத்திற்கான பாதுகாப்பை பொறுப்பெடுத்து யாழ்.ஊர்காவற்துறை வரையில் அவர்களின் பாதுகாப்பில் சந்தேக நபர்கள் அழைத்து வரப்படுவார்கள். அதன் போது இரண்டு பேருந்துக்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொலிசாரும் பாதுகாப்புக்காக வருவார்கள்.
நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னரும் இவ்வாறே சந்தேக நபர்கள் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல படுவார்கள்.
இவ்வாறு சந்தேக நபர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவதற்கும் நீதிமன்ற சூழலில் பெருமளவான போலீசாரை பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தவும் என ஒவ்வொரு வழக்கு தவணைக்கும் பெருமளவில் செலவு செய்யப்பட்டது.
இவ்வளவு செலவுகள், கஷ்டங்கள் மத்தியில் கடந்த 2 வருடமாக ஊர்காவற்துறையில் வழக்கினை நடத்தி சென்று விட்டு தற்போது கொழும்புக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் ? என கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அது மட்டுமன்றி  பாதிக்கப்பட்டவர்கள் , சாட்சியங்கள், எதிரிகள் , ஆகியோர்  தமிழ் மொழி பேசுவோர் . யாழ்.மாவட்டத்தை சேர்ந்தோர். மற்றும் குற்றம் நடந்த இடமும் யாழ்.மாவட்டம்.
இந்த நிலையில் குறித்த வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டால் அங்கு  பாதிக்கப்பட்டவர்கள் , சாட்சியங்கள் , சென்று வருவதில் பெரும் இடர்களை எதிர்நோக்க வேண்டும். பொருளாதார ரீதியில் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டும்.
மொழி பிரச்சனையை சமாளிக்க வேண்டி ஏற்படும். சாட்சியங்கள் நீண்ட தூரம் பயணம் செய்து சாட்சியம் அளிக்கும் போது , பயண களைப்புகள் மன சோர்வு காரணமாக தெளிவாக சாட்சியம் அளிக்க முடியாமை , மொழி ரீதியில் மற்றும் புரிதல் என்பவற்றில் ஏற்படும்  சிக்கல் பிரச்சனையாக தோன்றும்.
கொழும்பில் நடைபெற்றால்  வழக்கேடுகள் முழுவதும் சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டும். அதற்கு கால தாமதம் ஏற்படலாம். (தற்போதே இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. )
கொழும்பில் வழக்கு விசாரணை நடைபெற்றால் சிங்கள மொழி பேசும் நீதிபதிகள் , சிங்கள மொழி பேசும் அரச சட்டவாதி , சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலை ஆக போவதும் சிங்கள மொழி பேசும் சட்டத்தரணிகள் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் , சாட்சியங்கள் , எதிரிகள் தமிழ் மொழி பேசுபவர்கள். இவ்வாறான பிரச்சனைகளை கடந்து குறித்த வழக்கை கொழும்பில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் ஏன் யோசனை செய்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குறித்த வழக்கை கொழும்புக்கு மாற்றம் செய்யாது யாழ்ப்பாணத்தில் நடத்துமாறு கோரி போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டும் , பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

மாணவி கொலை வழக்கை கொழும்புக்கு மாற்ற வேண்டாம் யாழ்ப்பணத்தில் நடாத்துமாறு கோரி   கடந்த 11 ஆம் திகதி புங்குடுதீவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். 15 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும் புங்குடுதீவு மக்கள் ஈடுபட்டனர்.  நேற்றைய தினம் யாழ்.பல்கலைகழக மாணவர்களும் மாணவி படுகொலை வழக்கை யாழ்ப்பணத்தில் நடாத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவளை மாணவியின் வழக்கை யாழ்ப்பணத்தில் நடாத்த வேண்டும் என கோரி மாணவியின் தாயார் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போராட்டங்கள் , கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு மாணவி படுகொலை வழக்கு யாழ்ப்பாணத்தில் நடாத்த தீர்மானிக்கப்படுமா ?

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *