இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. எதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள். 37 சாட்சியங்கள்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயலட் பார் தீர்ப்பாயம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் கூடியது.
எதிரிகள் முன்னிலை. 
 
அதன் போது எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஐந்தாவது எதிரி சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் முன்னிலையாகி இருந்தார். ஏனைய எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகவில்லை.
சட்டத்தரணிகள் முன்வரவில்லை.
அது தொடர்பில் நீதிபதிகள் எதிரிகளிடம் வினாவிய போது தமக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாக முன் வருகின்றார்கள் இல்லை என தெரிவித்தனர்.
எதிரிகளின் சட்டத்தரணி விலகினார். 
அதன் போது நீதிபதிகள் கடந்த காலங்களில் 4 ஆம்,  7ஆம் , மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கம இந்த தவணை ஏன் ஆஜராகவில்லை என  வினாவினார்கள். அதன் போது 4 எதிரியின் மனைவி , தாம் சட்டத்தரணியிடம் கேட்ட போது இந்த வழக்குக்கு வேறு சட்டத்தரணிகள் ஆஜராக முன் வரவில்லை. நான் தனியாக இந்த வழக்கிற்காக வாதாட முடியவில்லை என அவர் பின் நிற்கின்றார் என மன்றில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதிகள் எதிரிகளிடம் உங்களுக்கு அரச செலவில் மன்றினால் சட்டத்தரணியை ஒழுங்கமைத்து தரவா? என வினாவிய போது அதற்கு எதிரிகள் ஒன்பது பேரும் சம்மதித்தார்கள்.
 
15 நிமிடம் ஒத்திவைப்பு. 
அதனை அடுத்து பிரதி சொலிஸ்டார் ஜெனரல் குமார் இரட்ணம் , எதிரிகளுக்கான சட்டத்தரணிகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட கால அவகாசம் கொடுக்குமுகமாக நீதிமன்ற அமர்வுகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கபப்ட்டன.
எதிரிகள் தரப்பில் சட்டத்தரணிகள் முன்னிலை. 
அதன் பின்னர் மீண்டும் நீதிமன்ற அமர்வு ஆரம்பமான போது , 1ஆம் , 2ஆம் , 3ஆம், மற்றும் 5ஆம் எதிரிகள் சார்பில் தான் முன்னிலையாவதாக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் தெரிவித்தார். அதேவேளை 4ஆம் , 6ஆம் , 7ஆம் , 8ஆம் , மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் தான் முன்னிலையாவதாக சட்டத்தரணி எஸ். கேதீஸ்வரன் மன்றில் தெரிவித்தார். ஒன்பது எதிரிகளுக்கு அரச செலவில் சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தா மன்றினால் நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் சார்பில் சட்டத்தரணி ரஞ்சித்குமார் முன்னிலையாவதாக மன்றில் தெரிவித்தார்.
எதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள். 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மன்றில் ஆரம்பமானது, அதன் போது குற்றப்பத்திரிக்கை தனித்தனியாக எதிரிகள் ஒன்பது பேருக்கும் கையளிக்கப்பட்டது.  அதையடுத்து எதிரிகளுக்கு எதிராக கடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை , இக் குற்றங்களுக்கு திட்டம் தீட்டியமை , உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 41 குற்றங்கள் சுமத்தப்பட்டு எதிரிகளுக்கு திறந்த நீதிமன்றில் தமிழ் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டது. அதன் போது எதிரிகள் தம் மீதான 41 குற்றசாட்டையும் மறுத்து தாம் சுற்றவாளி என மறுரைத்தனர்.
கடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை உள்ளிட்ட குற்ற சாட்டுக்கள் 1ஆம் , 2ஆம் , 3ஆம் , 5ஆம் , மற்றும் 6ஆம் எதிரிகள் மீது சுமத்தப்பட்டன. ஏனைய 4ஆம் , 7ஆம் 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் மீது இக் குற்றத்திற்கு திட்டம் தீட்டியமை , குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளான.
சிங்கள மொழியில் உள்ள ஆவணங்கள் தமிழுக்கு மொழி பெயர்ப்பு. 
அதனை அடுத்து வழக்கேடுகளில் சில வாக்கு மூலங்கள் ஆவணங்கள் சிங்கள மொழியில் உள்ளது. அவற்றினை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து தர வேண்டும் என எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்தனர். அதனை அடுத்து சிங்கள மொழியில் உள்ள அனைத்து ஆவணங்கள் , வாக்கு மூலங்களையும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறும் அன்றைய தினத்திற்கு பின்னர் பதிவாளரிடம் சட்டத்தரணிகள் அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என மன்று அறிவுறுத்தியது.
சான்று பொருட்களை பாரப்படுத்த பணிப்பு. 
அதவேளை  மாணவி படுகொலை வழக்கு தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்று பொருட்களை மேல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு மன்று பணித்தது.
ஆறு நாட்களுக்கு தொடர் விசாரணை. 
வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் , 29ஆம் , 30ஆம் , 3ஆம் , 4ஆம் , மற்றும் 5ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடாத்தப்பட்டும் என மன்று அறிவித்தது.
37 சாட்சியங்கள். 
அதேவேளை குறித்த வழக்கின் ஒன்று தொடக்கம் 37 வரையிலான சாட்சியங்களை எதிர்வரும் 28ஆம் திகதி ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்பாக முன்னிலை ஆக வேண்டும் என சாட்சியங்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
 
5ஆவது சாட்சியத்தை மன்றில் முற்படுத்த உத்தரவு. 
இந்த வழக்கின் 5ஆவது சாட்சியமும் , அரச சாட்சியுமான  உதயசூரியன் சுரேஷ்கரன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அவரையும் 28ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு நீதிபதிகள் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு இட்டனர்.
 
எதிரிகளை யாழ்ப்பான சிறைக்கு மாற்ற கோரிக்கை. 
எதிரிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுநாதன் , தமது தரப்பினர் வவுனியா சிறைச்சாலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளமையால் விசாரணைக்கு தேவையான சில தகவல்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே அவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யுமாறு மன்றில் விண்ணப்பம் செய்தார்.
வழக்கு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு. 
அதற்கு நீதிபதிகள் , அரச சாட்சியான உதயசூரியன் சுரேஷ்கரன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அந்நேரத்தில் எதிரிகளையும் யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்க முடியாது 28ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது அது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
கண்ணீர் விட்டழுத தாய். 
மாணவி கொலை தொடர்பில் எதிரிகளுக்கு குற்றப்பத்திரிகை திறந்த மன்றில் வாசித்து காட்டிய வேளை திறந்த மன்றில் இருந்த மாணவியின் தாயார் கண்ணீர் விட்டழுதார்.
மாணவி குடும்பம் சார்பில் சட்டத்தரணி ஒருவரே முன்னிலை. 
யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்ப்பாண சட்டத்தரணிகள் மாணவியின் கொலைக்கு நீதிவேண்டி மாணவியின் குடும்பத்திற்கு சார்பாக நீதிமன்றில் முன்னிலை ஆவோம் என தெரிவித்து இருந்தனர்.
கடந்த 2 வருடகாலமாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சில சட்டத்தரணிகளே மாணவியின் குடும்பத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அந்நிலையில் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறைமையில் மாணவி கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மாணவியின் குடும்பம் சார்பில் சட்டத்தரணி பா. ரஞ்சித்குமார் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.
 Jun 12, 2017 @ 09:55

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறையிலான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கூடியது.

அதன் போது மாணவி படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கு தொடுனர்கள் சார்பில் ஆஜராகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி வழக்குறைஞர் எஸ்.குமாரரத்தினம் எதிரிகள் மேலான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் வழக்கின் 37 சாட்சிகளின் வாக்குமூல அறிக்கை மற்றும் சான்றுப்பொருட்களின் அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்தார்

கடத்தியமை வன்புணர்வு செய்தமை கொலை செய்தமை மற்றும் மேற்படி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய பிரதான குற்றங்கள் அடங்கிய 41 குற்றச்சாட்டுக்களும் மன்றில் எதிரிகளுக்கு வாசிக்கப்பட்டதுடன் சகல குற்றச்சாட்டுக்களையும் ஒன்பது எதிரிகளும் மறுப்பதாக மன்றில் தெரிவித்தனர்

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 28ஆம்,  29ஆம், 30ஆம்,  3ஆம் , 4ஆம் , மற்றும்  5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *