இலங்கை பிரதான செய்திகள்

ஆனைவிழுந்தான்குளம் பாடசாலையினை வளம் கொண்ட பாடசாலையாக மாற்றுமாறு பெற்றோர் கோரிக்கை


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான்குளம் பாடசாலையினை வளம் கொண்ட பாடசாலையாக மாற்றுமாறு பெற்றோர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு தென்னிலங்கையில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென உருவாக்கப்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் தற்போது ஐந்நூறு குடும்பங்கள் வாழ்கின்றனர். அவசரமாக அமைக்கப்பட்ட இப்பாடசாலையில் பல வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.

மாணவர்கள் பாடசாலையில் அழகியல் உணர்வுடன் கற்கக் கூடிய சூழல் இல்லை எனத் தெரிவிக்கும் பெற்றோர் மழை காலங்களில் பாடசாலையினைச் சூழ வெள்ளம் தேங்கி நிற்பதாகவும் பாடசாலையின் அத்திவாரம் தாழ்வாக அமைக்கப்பட்டதன் காரணமாக மாணவர்கள் வெள்ளத்தினைக் கடந்தே பாடசாலைக்குச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ஆனைவிழுந்தான் கிராமத்திற்கு வருகை தந்த போது பெற்றோர்களினால் பாடசாலை வரை பஸ் சேவைகள் நடாத்தப்பட வேண்டும் எனவும்  பாடசாலைக்கு ஏனைய பாடசாலைகளுக்கு அமைக்கப்படுகின்ற போன்ற கட்டட அமைப்புகளை அமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.  மாணவர்கள் சிறந்த கட்டடத்தில் இருக்கும்போதுதான் கல்விக்கான சூழல் உருவாகும் எனவும் பெற்றோர்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும்  இதுவரை கிராமத்திற்கான பஸ் சேவைகளும் இடம் பெறவில்லை என்பதுடன்  பாடசாலைக்குரிய புதிய கட்டட அமைப்புகளும் இடம் பெறவில்லை என  பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும்  மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பாடசாலையில் புதிய நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *