இலங்கை பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம் -நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம். இருந்தாலும் முதலமைச்சரின் அமைச்சு உட்பட ஐந்து அமைச்ச்சுக்கள் மீதும், அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஊடக பேச்சாளர் கே. சயந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
வடக்கு மாகாணசபையிலே ஏற்பட்டிருந்த நெருக்கடிநிலை குறித்து தன்னுடைய கவனத்தையும் ஆலோசனைகளையும் வழங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்  கௌரவ இரா.சம்பந்தன் (எதிர்க்கட்சித் தலைவர்) அவர்களுக்கு நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்து நிற்கின்றார்கள்.
 நீண்டகாலமாக வடக்கு மாகாணசபையில் ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகளுக்கு எதிராக நீதியான, சுயாதீனமான சட்டபூர்வமான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று நாம் தொடர்ந்தும் கட்சிபேதமின்றி ஒரே அணியாக நின்று குரல் கொடுத்து வருகிறோம்.

அதனடிப்படையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமும் வடக்கு மாகாண ஆளுனரிடம் கையளிக்கப்பட்டது, மாண்புமிகு இரா சம்பந்தன் அவர்களின் அறிவுரைகளையேற்று தன்னுடைய இயற்கை நீதிக்குப் புறம்பான விடயங்களைத் திருத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இணங்கியிருப்பது நீதிக்கான எமது தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் நோக்குகின்றோம்.

மாண்புமிகு இரா.சம்பந்தன் அவர்களுக்கும், கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையிலான கடிதத் தொடர்பாடல்களை அவதானிக்கின்றபோது ஒருவித இணக்கப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையினை இப்போது அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம்.

இவ்விடயத்தில் கட்சிபேதங்களுக்கு அப்பால் நீதிக்காக குரல்கொடுக்கவும்; துணிந்து செயற்படவும்; முன்வந்த அனைத்து மாகாணசபை உறுப்பினர்களோடும் இதுவிடயமாகக் கலந்துரையாடி நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இறுதித் தீர்மானத்தை விரைவில் வெளியிடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வடக்கு மாகாணசபையின் ஐந்து அமைச்ச்சுக்கள் மீதும் அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகளை முன்னெடுக்கப்படும் என்பதும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *