இலங்கை பிரதான செய்திகள்

மொழியுரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞன் – முறைப்பாட்டை ஏற்க மறுத்த காவற்துறை:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

மொழியுரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ள முடியாது என கோப்பாய் காவல் நிலைய காவற்துறையினர் முறைப்பாட்டினை ஏற்காது முறைப்பாட்டாளரை திருப்பி அனுப்பி உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

திருநெல்வேலி சந்தியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கடமையில் இருந்த கோப்பாய் காவல் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீதியில் சென்ற இளைஞர் ஒருவரை மறித்து சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று சிங்கள மொழியில் ஏசியுள்ளார்.

குறித்த இளைஞர் தனக்கு சிங்கள மொழி தெரியாது எனவும் , நீங்கள் கூறுவதனை தன்னால் புரிந்து கொள்ள முடியாது உள்ளது. எனவும் குறித்த காவல்நிலைய அதிகாரிக்கு தமிழ் மொழியில் கூறியுள்ளார்.

அதனை அடுத்து மேலும் சிங்களத்தில் பேசிய அதிகாரி, சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக காவற்துறை உத்தியோகத்ரால் வழங்கப்படும் அனுமதி பத்திரத்தில் சிங்கள மொழியில் எழுதி கொடுத்துள்ளார்.

அதன் போதும் குறித்த இளைஞன் தனக்கு சிங்கள மொழி தெரியாது. இதில் என்ன எழுதி உள்ளது என்பதனையும் விளங்கி கொள்ள முடியாது என கூறியுள்ளார். அதற்கு காவற்துறை அதிகாரி ” உஷாவே உஷாவே ” ” கோட்ஸ் கோட்ஸ்” என கூறி குறித்த பத்திரத்தில் எழுதி இருந்த திகதியை சுட்டிகாட்டியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த இளைஞன், கோப்பாய் காவல் நிலையத்திற்கு சென்று பத்திரத்தில் எழுதியுள்ளது என்ன என்பதனை தன்னால் விளங்கி கொள்ள முடியாதுள்ளது எனவும், அது தொடர்பில் தனது மொழி உரிமை மீறப்பட்டு உள்ளமை தொடர்பில் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய போவதாக கூறியுள்ளார்.

அதன் போது முறைப்பாட்டு பதிவாளராக இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர், இளைஞனுக்கு சிங்கள மொழியில் பத்திரம் எழுதி வழங்கிய பொலிஸ் அதிகாரியை அழைத்து அது தொடர்பில் கூறியுள்ளார்.

அதற்கு குறித்த அதிகாரி,  இளைஞன் சந்தியில் இருந்த வீதி சமிக்சையினை மீறி சென்ற குற்றமே எழுதி உள்ளதாகவும் , எது என்றாலும் அது தொடர்பில் நீதிமன்றில் கதைத்து கொள்ளுமாறும் சிங்களத்தில் கூறினார். அதனை தமிழ் காவற்துறை உத்தியோகஸ்தர் தமிழ் மொழி பெயர்த்து கூறினார். அதன் போது தான் அக் குற்றத்தை புரியவில்லை எனவும் , தான் வீதியினை கடக்கும் போது பச்சை விளக்கே ஒளிர்ந்து கொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். அதற்கு காவற்துறை அதிகாரி எது என்றாலும் நீதிமன்றில் கதைத்து கொள்ளுமாறு சிங்களத்தில் கூறியுள்ளார்.

அதற்கு சம்மதித்த இளைஞன் தனது மொழி உரிமை மீறப்பட்டமை தொடர்பில் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாதா என வினாவியுள்ளார் அதற்கு கோப்பாய் காவற்துறை தங்களுடைய காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகச்தருக்கு எதிராக தங்களுடைய காவற்துறை  நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாது எனவும் ,

அவ்வாறு முறைப்பாடு செய்ய விரும்பின் மனித உரிமை ஆணைக்குழுவிடமோ அல்லது யாழ்.பிராந்திய சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகரிடமோ முறைப்பாடு செய்யுமாறு கூறி முறைப்பாட்டாளரை கோப்பாய் காவற்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *