இலங்கை பிரதான செய்திகள்

சிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறுபிள்ளைகளிடம் யாரை போல வர வேண்டும் என கேட்டால், காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூறமாட்டார்கள். தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை பாடிய மறத்தி இறுவட்டு வெளியீடும், கௌரவிப்பு விழாவும்  யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வாழ்க்கையில் எமக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அதனை அடைவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது குறுகிய கால குறிக்கோளை அடைந்துவிட்டால் போதுமென்று ஓய்ந்துவிடாது அந் நிலையில் இருந்து அடுத்தபடியை நோக்கி முன்னேற முயற்சிக்க வேண்டும். இவ்வாறான தொடர் முயற்சிகள் பல வெற்றிகளை எமக்கு அளிக்கும்.

யாரைப்போல வர ஆசைப்படுகின்றீர்கள் என்று நான் சிறுபிள்ளைகளிடம் கேட்பதுண்டு. காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூறமாட்டார்கள். தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள்.

க.பொ.த சாதாரண தரத்தில் கூட முறையாக தேர்ச்சி அடையாத பலர் அரச வேலைகளைத் தேடிவருகின்றார்கள். கல்வியின் முக்கியத்துவம் அவர்களால் உணரப்படுவதில்லை. எவ்வழியிலாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணந்தான் அவர்களுக்கிடையே மேலோங்கியிருப்பதை நான் காண்கின்றேன்.

வாழ்க்கையில் இலக்கற்று வாழ்கின்றார்கள். அவர்கள் கூட முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. எமது பெண்கள் பல தொழில்களில் தம்மை ஈடுபடுத்த முன்வரவேண்டும். தாதியர் தொழில், காவல்த்துறை, உணவகத்துறை, சுற்றுலாத்துறை  போன்றவற்றில் தகுதி பொருந்திய பெண்களுக்கு இப்பொழுதும் வெற்றிடங்கள் பல உண்டு  என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *