இலங்கை பிரதான செய்திகள்

தொடரும் சட்டவிரோத கைதுகள் – துன்னாலை மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமராட்சி பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மனிதாபிமானமற்ற கைதுகளை தடுத்து நிறுத்த கோரி யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டு உள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவகத்தில் இன்று புதன்கிழமை மதியம் 12.30 ,மணியளவில் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் துன்னாலை பகுதி மக்கள் மகஜரை கையளித்தனர்.

வடமராட்சி பகுதிகளில் கடந்த 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலான கால பகுதியில் அதிகாலை வேளைகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

ஆதனைத் தொடர்ந்து இதுவரை 42 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 24 பேர் துன்னாலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில் ,
வடமராட்சி பகுதிகளில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் கைதுகள் நடைபெற்று வருகின்றன. வேலைக்கு சென்று வருபவர்கள் வேலை நிமர்த்தம் வடமராட்சி பகுதிகளில் தங்கி உள்ள பிற பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

துன்னாலை இளைஞன் ஒருவர் மீது போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் உயிரிழந்து இருந்தார். அந்த சம்பவத்தினை தொடர்ந்து துன்னாலை பகுதிகளில் வீதிகளில் ரயர் கொழுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை , போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை , பொலிஸ் காவலரணை தாக்கியமை , பொலிஸ் வாகனத்தை தாக்கி சேதம் விளைவித்தமை , உள்ளிட்ட குற்ற சாட்டுக்களை முன் வைத்தே இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலர் வெளியிடங்களுக்கு தப்பி சென்று உள்ள நிலையில் சம்பவ தினத்தில் ஊரில் இல்லாத இளைஞர்கள் , போராட்டத்திற்கு செல்லாதவர்கள் என ஊரில் உள்ள பெரும்பாலான இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறன சட்டவிரோத கைதுகள் , மனிதாபிமானமற்ற கைதுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரியே மனித உரிமை ஆணைக்குழுவில் மகஜர் கையளித்தோம் என தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *