இலங்கை பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – புங்குடுதீவு மாணவி கொலைவழக்கின் விசாரணை அதிகாரியை தீர்த்துக்கட்ட சிறையில் திட்டமாம்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வழக்கின் பிரதான விசாரணை அதிகாரியை படுகொலை செய்வதற்கு சிறைசாலையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

புங்குடுதீவு மாணவி படுகொலை, கடற்படையினரால் மாணவர்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் பிரதான விசாரணை அதிகாரியான குற்ற தடுப்பு பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பில் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணையை மேற்கொண்ட குற்றபுலனாய்வு பிரிவினர் , கடத்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்களும் திருகோணமலை கடற்படை இரகசிய வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டமையை கண்டறிந்தனர்.

அது தொடர்பில் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா தலைமையிலான குழுவினர், கடற்படை அதிகாரி தசநாயக்க உள்ளிட்ட கடற்படையினரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சாட்சியாளர் ஒருவர் பிறிதொரு வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். அதன் போது சுகவீனமுற்ற நிலையில் , சிறை சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அந்நேரம் 11 தமிழர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் ஒருவரான பிரசன்ன விக்ரமசூரிய என்பவர் நிஷாந்த சில்வா இருக்கும் வரையில் நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. வெளியில் உள்ளவர்களை வைத்து நிஷாந்த சில்வாவை தீர்த்துக்கட்ட வேண்டியது தான் என சக பாடி ஒருவருக்கு கூறியதை , மாணவி கொலை வழக்கின் சாட்சியாளர் கேட்டுள்ளார்.

அதன் பின்னர் மாணவி கொலை வழக்கின் சாட்சியாளர் விளக்கமறியல் காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.

பின்னர் மாணவி கொலைவழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கான அழைப்பனையினை வழங்க என சாட்சியாளர் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்கு சென்று நீதிமன்ற அழைப்பனையினை , தன்னை குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா என அறிமுகம் செய்து கொண்டு வழங்கியுள்ளார்.

அதன் போது நீங்கள் தான் 11 தமிழர்கள் கடத்தல் தொடர்பிலான வழக்கினையும் விசாரணை செய்யும் அதிகாரியா ? என மாணவி கொலை வழக்கு சாட்சியாளர் வினாவியுள்ளார். அதற்கு அவர் ஆம் என பதிலளித்து உள்ளார்.

அதன் பின்னர் சிறைசாலை வைத்திய சாலையில் நிஷாந்த டி சில்வாவை தீர்த்துக்கட்டுவது தொடர்பில் போடப்பட்ட திட்டம் தொடர்பில் மாணவி கொலை வழக்கு சாட்சியாளர் கூறியுள்ளார். அத்துடன் அது தொடர்பில் குற்றபுலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் ஒன்றினையும் வழக்கியுள்ளார்.

அந்நிலையில் , கடந்த வியாழக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் 11 தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன் போது குற்றபுலனாய்வு துறையினர் கொலை சதித்திட்டம் தொடர்பில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனை அடுத்து அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *