இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து – பிராந்திய சுகாதாரப் பணிமனை:-

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி  மாவட்ட பூச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகளால்     மாவட்டத்தில்  அதிதீவிரமாக டெங்குநோய்த் தாக்கம்  ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

தை மாதத்திலிருந்து இன்று வரையான (15.08.2017) 227 நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மொத்தம் 815 நோயளர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டது. இவர்களுள் 585 நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

585 கிளிநொச்சி மாவட்ட நோயாளர்களில் அனேகமானோர் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து டெங்குநோய் தொற்றிய நிலையில் கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சை பெற்றவர்களாவர். இவர்களுள் ஒருவர் டெங்குநோய் காரணமாக மரணித்துள்ளார்.

அதாவது சராசரி மூன்று டெங்குநோய்த் தொற்றுக்கு ஆளாகிய பொதுமக்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குத் தினமும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். புகையிரத நிலையங்கள் பேரூந்து நிலையங்கள் வைத்தியசாலைகள் உணவகங்கள் ஆகிய இடங்களை இவர்கள் பாவிக்கும்போது அவ்விடங்களில் டெங்கு நுளம்புகள் காணப்படுமாயின் அவை இவர்களது டெங்கு வைரசு கலந்த இரத்தத்தினை உறிஞ்சிக்கொள்ளலாம்.

இவ்வாறு வருபவர்களது டெங்கு வைரசு கலந்த இரத்தத்தினைக் கிளிநொச்சியில் காணப்படும் டெங்கு நுளம்புகள் உறிஞ்சுமாயின் அந்த நுளம்புகளினால் கடிக்கப்படும் அனைவரும் டெங்குநோயாளிகளாக நேரிடும். இதனால் கிளிநொச்சி மாவட்டத்தினுள்ளே டெங்கு காட்டுத் தீ போல அதிதீவிரமாகப் பரவத்தொடங்கும்.

இந்த அபாயநிலையைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 16,17,18 ஆகிய தினங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பொது இடங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் தத்தமது பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு இந்த உயிர்காப்புப் பணியில் ஈடுபட முன்வருமாறு வேண்டுகிறோம். கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிமனை பொதுச் சுகாதாரப் பிரிவினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *