இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – அடாத்தாக கடைகளை அமைக்கவில்லை- நீதவான் தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளோம்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடை தொகுதிகளை அப்போது அமைச்சராக இருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் அப்போது மாநகர சபை மேயராக இருந்த யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரே எமக்கு இந்த கடை தொகுதிகளை தந்தனர். நாம் அடாத்தாக இந்த இடத்தில் கடைகளை அமைக்கவில்லை. என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் 9 கடைகளை கொண்ட கடை தொகுதி யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவில் இன்றைய தினம் அகற்றப்பட்டது.
அது தொடர்பில் கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கும் போது ,

இந்த கடை தொகுதிகளை அப்போது அமைச்சராக இருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் அப்போது மாநகர சபை மேயராக இருந்த யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரே எமக்கு இந்த கடை தொகுதிகளை தந்தனர். நாம் அடாத்தாக இந்த இடத்தில் கடைகளை அமைக்கவில்லை.

இந்த கடை தொகுதிகளை மாநகர சபை அனுமதி பெற்றே நிரந்த கட்டடங்களாக அமைத்தோம். மாநகர சபையின் அனுமதியுடனையே மின்சாரம் பெற்றோம். இவற்றுக்காக பல இலட்ச ரூபாய்க்களை கடன்களாக வங்கி மற்றும் தனி நபர்களிடம் பெற்று உள்ளோம்.
கடந்த 7 வருடகாலமாக இந்த இடத்தில் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தோம். திடீரென நீதிமன்றில் எமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து , எமது கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
நாங்கள் இனி எங்கு சென்று வியாபாரம் நடத்துவது , இந்த கடையில் உள்ள பொருட்களை ஏற்றி சென்று இறக்க கூட இடமில்லாமல் இருக்கின்றோம். பொருட்களை ஏற்றும் செலவுக்கு கூட பணம் இல்லாத நிலையிலையே கடை உரிமையாளர்கள் இருக்கின்றோம்.
இரண்டு வரும் வாடகை செலுத்தினோம். 
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான கால பகுதி வரையில் மாநகர சபை எம்மிடம் இட வாடகை அறவிட்டது. அதன் பின்னர் கடை ஊழியர்களுக்கும் மாநகர சபை ஊழியர்களுக்கும் வாடகை கொடுக்கல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்கத்தை அடுத்து மாநகர சபை எம்மிடம் வாடகை அறவிடுவது இல்லை. இது தொடர்பில் நாம் மாநகர சபைக்கு நேரில் சென்று வாடகையை கொடுத்த போதிலும் , அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
டக்ளசிடம் அதிகாரமில்லையாம். 
தற்போது நீதிமன்றம் கடைகளை அகற்றுமாறு உத்தரவு இட்டதை அடுத்து அப்போதைய அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கே.என். டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இது தொடர்பில் முறையிட்டோம். தனது கையில் தற்போது அதிகாரமில்லை எனவும் , இது தொடர்பில் அதிகாரமுள்ளவர்களிடம் சென்று முறையிடுமாறும் எமக்கு கூறினார்.
நீதிமன்ற விடயத்தில் தலையிட முடியாது. என கைவிரித்த முதலமைச்சர். 
அதனை அடுத்து வடமாகாண முதலமைச்சரிடம் இது தொடர்பில் முறையிட்டோம். இது நீதிமன்றத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் இது தொடர்பில் தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என கூறினார்.
மேன் முறையீடு செய்துள்ளோம். 
அதனை அடுத்து நாம் தற்போது யாழ். நீதவான் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். குறித்த வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இயற்கை நீதிக்கு எதிரானது. 
 
அதேவேளை.  மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து எதிர்வரும் 18ஆம் திகதி ஆதரிப்பதற்காக திகதியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கிடையில் அவசரப்பட்டு யாழில் அப்பாவி 9 கடன்கார கடைக்காரர்களின் கடைகளை இடிப்பதென்பது இயற்கைநீதிக்கு எதிரானது என சட்டத்தரணி சுகாஸ் தனது முகநூலில் கருத்து வெளியிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கருத்து கூற முடியாது. – மாநகர ஆணையாளர். 
கடைகள் அகற்றப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளிடம் கருத்து கேட்ட போது , குறித்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எடுக்கப்படுவதனாலும் , வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில் உள்ளமையினால் அது தொடர்பில் கருத்து கூற முடியாது என கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்தார். 

யாழ்.நீதிமன்ற உத்தரவால் 9 கடைகள் அகற்றப்பட்டுள்ளது

Aug 16, 2017 @ 10:45

யாழ்.மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகளை கொண்ட கடை தொகுதி யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று புதன்கிழமை அகற்றப்பட்டுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடை தொகுதியே இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *