இந்தியா பிரதான செய்திகள்

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளது


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என தமிழக  முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார் இதனையடுத்து ஜெயலலிதா இல்லம் முன்பு காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை தலைமை செயலகத்தில்  இன்றையதினம்  திடீரென்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய   எடப்பாடி பழனிச்சாமி    ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக 6 முறை திறம்பட பணியாற்றி, தமிழ்நாட்டின் நலனுக்காக தன் இன்னுயிரை ஈந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட உன்னத தலைவராய், அவர் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.

இந்தநிலையில் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ , இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

ஜெயலலிதா அவர்களின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும், பொதுமக்கள் அறியும்  வண்ணம், அம்மா அவர்கள் சிறப்பாக வாழ்ந்த , சென்னை போயஸ் தோட்டத்தில், அமைந்துள்ள ‘வேதா நிலையம்’ அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.’ என்று தெரிவித்தார்

முதலமைச்சரின் இந்த  அறிவிப்பையடுத்து போயஸ் கார்டன் மீண்டும் காவல்துறை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஜெயலலிதா இல்லத்துக்கு உரிமை கொண்டாடி வேறு யாராவது வந்துவிடுவார்களோ என்ற அடிப்படையில் காவல்துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *