இலங்கை பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்:-

இலங்கைக் கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக, கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா,  ஜனாதிபதியால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா ஆகிய விருதுகளைப் பெற்ற கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடற்படையின் கிழக்கு கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரால் ட்ரவிஸ் சின்னய்யாவை கடற்படைத் தளபதியாக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ்; அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்னவின் பதவிக் காலத்தை மேலும் நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில் ட்ரவிஸ் சின்னய்யா இன்றைய தினம் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ட்ரவிஸ் சின்னய்யா பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

1982ஆம் ஆண்டு, கடற்படையில் இணைந்த இவர், புலிகளுக்கு எதிரான பல யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இலங்கை கடற்படையின் சிரேஷ்ட உறுப்பினரான  இவர், 21ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 கடந்த அரசாங்கத்தினால் சின்னய்யா அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதாகவும் இதனால் உயர் பதவிகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்தினால் தற்போதைய கடற்படை தளபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *