இலங்கை பிரதான செய்திகள்

புகையிரதக் கடவை விபத்துகளைத் தடுக்க வடமாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி. தவராசா :

வடக்கிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளினால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கு வடக்கு மாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மாகாண சபையில் பிரேரணை  முன்வைத்துள்ளார். அதற்கான திட்ட முன்மொழிவும் அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.
அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,

வடக்கிலுள்ள புகையிரதக் கடவைகளில் பல பாதுகாப்பற்றவையாகக் காணப்படுவதனால் தொடர்ச்சியான விபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

இவ் விபத்துகளைத் தடுப்பதற்காக அவ்வாறான பாதுகாப்பற்ற கடவைகள் இருக்கின்ற உள்ளூராட்சி சபைகள் தற்காலிக பாதுகாப்புத் தடைகளை ஏற்படுத்தி அவற்றைச் செயற்படுத்துவதற்கு ஒருவரைப் பிரதேச சபைச் செலவிலே நிரந்தரமாக நியமிப்பதுடன் அவ்வாறு நியமிக்கப்படுபவர் அண்மித்த புகையிரத நிலையங்களுடன் நேரடித் தொடர்புகளை மேற்கொள்வதன் மூலம் புகையிரதங்கள் வருகின்ற நேரத்தில் கடவைகளை மூடுவதற்கு ஏதுவாக ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் மற்றும் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணிகள், மின்சாரம், வீடமைப்பும் கட்டட நிர்மாணமும், தொழிற்துறை, சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகத் துறை அமைச்சு உள்ளூராட்சி சபைகளிற்குப் பணிப்புரை வழங்குவதோடு இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களத்துடன் இது தெடார்பாகத் தொடர்பு கொண்டு ஆவன செய்யவேண்டும் என இச் சபை கோருகின்றது.

இவ்வாறு கோரும் பிரேரணையினை எதிர்வரும் 24.08.2017 ம் திகதிய சபை நடவடிக்கையின் போது பிரஸ்தாபிக்கும் வண்ணம் எதிர்க்கட்சித் தலைவரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சித்தலைவரின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *