இலங்கை பிரதான செய்திகள்

யாழில்.மூத்த ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்:-

யாழில்.மூத்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய தாக்குதலாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் , நிகழ்வில் பங்கேற்ற பிரபலங்கள் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் யாழ்.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மறைந்த கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போது , மூத்த ஊடகவியலாளர் நா.பரமேஸ்வரன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து , யாழ்.ஊடக அமையம் கண்டன அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 
 
யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரான ந.பரமேஸ்வரன் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (03.09) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை யாழ்.ஊடக மையம் வன்மையாக கண்டிக்கின்றது.
மறைந்த கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் மற்றும் கட்சி பிரமுகரான கௌரிகாந்தன் ஆகிய இருவராலும் தான் தாக்கப்பட்டுள்ளதாக ந.பரமேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுமார் 32 வருடத்திற்கு மேலாக யாழப்பாண ஊடகத்துறையினில் பங்காற்றி வந்துள்ள பரமேஸ்வரன் ரொய்ட்டேர்ஸ்,பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினில் பணியாற்றியிருந்தார்.அத்துடன்; ஊடக அடக்குமுறை உச்சமடைந்திருந்த காலப்பகுதியினில் தனது பணியினை சீர்பட அவர் முன்னெடுத்துமிருந்தார்.
தனது மனதிற்கு நியாயமெனப்பட்டதை நேர்படப்பேசவும் அதனை எழுதவும் ந.பரமேஸ்வரன் என்றுமே பின்னின்றதில்லை.
ஊடகவியலாளர்கள் தாங்கள் சொல்வதை கேட்டு எழுதும் கிளிப்பிள்ளைகளாக இருக்கவேண்டுமென்ற விருப்பம் அண்மைக்காலமாக தமிழ் அரசியல் தலைமைகளிடத்தே அதிகரித்துவருகின்றது.இதனால் கேள்வி கேட்பவர்கள் விருப்பத்திற்குரியவர்களாக அவர்களிற்கு இல்லாதிருக்கும் சூழலும் அதிகரித்துவருகின்றது.
இந்நிலையினில் தனது சமூகம் சார்ந்த உணர்வுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களெவரும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்காமை தொடர்பினில் நிகழ்வினில் பங்கெடுத்தவர்களிடையே துண்டுபிரசுரம் மூலம் அவர் விழிப்புணர்வை முன்னெடுக்க முற்பட்டுள்ளார்.
கேள்விகள் மூலம் தனது விடையினை பெறமுடியாத சூழலினில் அகிம்சை வழி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புக்களின் மூலம் பதிலை பெற்றுக்கொள்வது பரவலாக முன்னெடுக்கப்படும் உத்தியாகும்.அதற்கான பதில் பிரமுகர்களது உரைகளின் போது நிகழ்வினில் வழங்கப்படுவதும் சாதாரணமானதே.
முன்னரும் அரச கட்சியொன்றால் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களை ஏமாற்றி முன்னெடுக்கப்பட்ட சதியை இதே உத்தியுடன் ந.பரமேஸ்வரன் அம்பலப்படுத்தியுள்ளார்.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் பங்கெடுத்திருந்த  இந்நிகழ்வினில் ந.பரமேஸ்வரன் தாக்கப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பு அவர்கள் அனைவரிற்கும்; உள்ளதென்பதை ஊடக அமையம் சுட்டிக்காட்டவிரும்புகின்றது.
வடக்கினில் அரச இயந்திரத்தினாலும்,துணை ஆயுதக்குழுக்களாலும் முன்னெடுக்கப்பட்ட ஊடக படுகொலைகள்,ஆட்கடத்தல்கள்,காணாமல் போதல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பினில் இன்றுவரை நீதி கிட்டியிருக்கவில்லை.
தற்போதைய வன்முறைகளும் ஊடக சுதந்திரம் மேம்பட்டுவிட்டதான கருத்தை கேள்விக்குள்ளாக்குவதாகவே உள்ளது.
தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த மீண்டும் வலியுறுத்துவதுடன் இதற்கான பொறுப்புக்கூறலை பங்கெடுத்த பிரபலங்கள் ஊடகங்கள் முன்னராக வைக்கவும் யாழ்.ஊடக அமையம் கோருகின்றது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *