இந்தியா பிரதான செய்திகள்

சிரேஸ்ட பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை:-


சிரேஸ்ட பத்திரிகையாளரான    கவுரி லங்கேஷ்  என்பவர் பெங்களுரில் உள்ள அவரது வீட்டில்வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

55வயதான  கவுரி லங்கேஷ்  பிரபல நாளிதழ்களில் பணியாற்றியவர்.  இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகின்ற  துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று மாலை  அவரது வீட்டில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பாளராகவும் ஊடகவியலாளராகும் அறியப்பட்ட கவுரி லங்கேஷ் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகவும், கலாச்சார அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும், பாரதீய ஜனதாவிற்கு எதிராகவும் எழுதியும் பேசியும் வந்தார். டெல்லி ஜே.என்.யூ போராட்டங்களில் பங்கு பெற்ற கவுரி அதற்காக திவீரமாக எழுதியும் வந்தார்.

கல்புர்க்கி கொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கவுரி

ராணா ஆயூப்பின் ‘குஜராத் கோப்புகள்” எனும் குஜராத் படுகொலைகள் பற்றிய ஆவணத்தை கன்னட மொழியில் வெளியிட்டவர் கவுரி லங்கேஷ். இந்நிலையில், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனி வீட்டில் இருந்த போது மர்ம இனம் தெரியாதவர்கள் கதவைத் தட்டியிருக்கிறார்கள். அவர் கதவைத்திறந்ததும் அவர் மீது சுட்டு விட்டு தப்பி  ஓடி உள்ளனர்.  துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கவுரி லங்கேஷின் உடல் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

பன்சாரே, கல்புர்க்கி, தபோல்கர் போன்ற சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் இப்போது கவுரி லங்கேஷும் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்து வந்த கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டுள்ளது ஊடக சுதந்திரத்திற்கும் சுதந்திரமான சிந்தனைக்கும் விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்!

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *