இலங்கை பிரதான செய்திகள்

பல்கலை மாணவர்கள் மரணம் வடக்கு மக்கள் குழப்பமடைய வேண்டாம்- டி.எம். சுவாமிநாதன் :

dm-suwaminathan
குளோபல் தமிழ் செய்தியாளர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் உடன் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடபகுதி மக்கள் குழப்பமடைய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு பல்கலைக்கழக மாணவர்கள்  யாழ்.நகரை அண்மித்த கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் மோட்டார்சைக்கிளில் சென்றவேளை விபத்துக்குள்ளாகி மரணமானதாக கூறப்பட்ட போதும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த சமயத்தில் தன்னிடம் இவ்விடயம் தொடர்பில் கவனத்தில் கொண்டுவரப்பட்டிருந்ததாக கூறிய அவர் நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அதற்கமைவாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலான ஐந்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு தற்காலிகமாக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த இரு இளம் பல்கலை மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக கூறிய சுவாமிநாதன்  பக்கச்சார்பற்ற வகையில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  வடபகுதி மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *