இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

துரும்புச் சீட்டு – செல்வரட்னம் சிறிதரன்:-


இலங்கையின் அனைத்துலக முதலீட்டாளர்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள சீனாவுடனான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் உறவு குறித்து சர்வதேச நாடுகள் மி;குந்த கவனம் செலுத்தியிருக்கின்றன.
தென்னாசிய பிராந்தியத்தில் பொருளாதார ரீதியில் முதன்மை நிலைக்கு முன்னேறியுள்ள சீனா ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நேரடியான போட்டியில் இறங்கியிருக்கின்றது. இதுவே சர்வதேச நாடுகளின் சீனா இலங்கையில் கொண்டுள்ள முதலீட்டு நடவடிக்கைகள் மீதான அக்கறைக்கான முக்கிய காரணம் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீனா தனது அயராத முயற்சியினாலும், திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கைகளைப் பின்புலமாகக் கொண்ட வர்த்தகச் செயற்பாடுகளினாலும், ஆசிய பிராந்தியத்தில் வர்த்தக நடவடிக்கைககளில் முதன்மை இடம் வகித்த ஜப்பானை பின்னால் தள்ளி முன்னோக்கி நகர்ந்திருக்கின்றது.

சீனா தனது பொருளாதாரச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் அதேவேளை, இந்தப் பிராந்தியத்தில் வல்லமை பொருந்திய ஓர் அரசாhகப் பரிணமிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதன் முத்துமாலை திட்டம் அதனோடு இணைந்த அதன் பட்டுப்பாதைத் திட்டம் என்பன இந்த முயற்சிகளின் முக்கிய மைல்கற்களாக நோக்கப்படுகின்றன.

மும்முனைப் போட்டி

ஜப்பானுடனும், அமெரிக்காவுடனும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் சீனா போட்டியிட்டு வருகின்றது. அதேவேளை, தென்னாசிய பிராந்தியத்தின் கடல் வழி வல்லமையை அதிகரித்து, இலங்கையின் தலைநகர் கொழும்பு துறைமுக நகரிலும், தென்கோடியில் அம்பாந்தோட்டை முறைமுகத்திலும் ஆழக் கால் பதிப்பதற்கு மேற்கொண்டுள்ள வர்த்தக ரீதியான ஒப்பந்த நடவடிக்கைகளின் மூலம் இராணுவ ரீதியாக இந்தியாவுடன் போட்டியிடுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றார்கள்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாகவே எல்லைப்புறத்தில் பகைமை நீடித்திருக்கின்றது. இந்தப் பகைமையானது எல்லைக்கான சண்டைகளாக, மோதல்களாக, எல்லைசார்ந்த யுத்தமாக அவ்வப்போது வெடித்திருக்கின்றன. ஆனால் எல்லைப்புறத்தில் ஏற்பட்டுள்ள பிணக்குகளை இரு தரப்பினராலும் அரசியல் ரீதியாக முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. இதனால் எல்லைப்புறப் பகைமை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்த எல்லைப்புறப் பகைமையின் பின்னணியிலேயே இலங்கையில் சீனா மேற்கொள்கின்ற அபரிமிதமான பொருளாதார முதலீட்டு நடவடிக்கைகள் இந்தியாவுடனான பாதுகாப்பு ரீதியிலான – இராணுவ நலன் சார்ந்த போட்டியாக நோக்கப்படுகின்றது.

ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளும் இராணுவ நலன் சார்ந்த நடவடிக்கைகளும் முன்னேற்றமடைவதை அமெரிக்காவும், அமெரிக்காவின் நேச சக்திகளும் விரும்பவில்லை. ஆயினும் சீனாவின் நடவடிக்கைகளை அந்த நாடுகளினால் நேரடியாகக் கட்டுப்படுத்துவதும் இயலாத காரியமாகவே தென்படுகின்றது.

இலங்கை சீனாவுடன் நீண்ட காலமாகவே கலாசார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தொடர்புகளைப் பேணி வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற முப்பது வருடகால ஆயுத முரண்பாட்டு நிலைமையின்போது, இலங்கை அரசுக்கு சீனா இராணுவ உதவிகளை வழங்கியிருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பல வழிகளில் உறுதுணையாகச் செயற்பட்டிருந்தது. அதில் குறிப்பாக இராணுவ ரீதியிலான உதவி முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

அரசுமீதான அதிருப்தி

விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியாக முறியடிப்பதற்கு அமெரிக்காவும், இந்தியாவும்கூட பேருதவி புரிந்திருந்தாலும்கூட, யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த உறவு மேலும் நெருக்கமடைந்திருந்தது.

அதேநேரத்தில் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றுடன், ஜனநாயகத்தைத் துச்சமாக மதித்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடைப்பிடித்த சர்வாதிகாரப் போக்கு காரணமாக ஓர் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா மற்றம் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் துணைபோயிருந்தன.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் உருவாகிய நல்லாட்சி அரசாங்கமானது, படிப்படியாக நல்லாட்சிப் போக்கிலிருந்து நழுவி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போக்கில் காலடி எடுத்து வைத்திருப்பதைக் காண முடிகின்றது.

யுத்தத்தினால் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிலைகுலைந்துள்ள நாட்டை முன்னேற்றுவதற்காக, குறிப்பாக பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்காக சீனாவின் பொருளாதார உதவிகளை நாடியிருப்பது, இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் அதிருப்தியையே ஏற்படுத்தியிருக்கின்றது.

யுத்தம் காரணமாக பேரழிவைச் சந்தித்துள்ள ஒரு நாடு, தனது இறைமையின் அடிப்படையில் தனது முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏனைய நாடுகள் எழுந்தமானமாக தடைசெய்யவோ அல்லது, அதன் செயற்பாடுகளில் நேரடியாகத் தலையீடு செய்யவோ முடியாது. அவ்வாறு செயற்படுவதை ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக ஏனைய உலக நாடுகளினால்; நோக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது.

ஆனாலும் தமது பொருளாதார நடவடிக்கைகளிலும், தமது பாதுகாப்பு குறித்த நலன்களிலும் இறைமையுள்ள ஓர் அரசாங்கமாக இருந்தாலும், மற்றுமொரு நாட்டின் செயற்பாடுகள் பாதிப்பு எற்படுத்துவதை எந்த நாடுகளும் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பதில்லை.

முரணான செயற்பாடுகள்

இத்தகைய ஒரு பின்னணியிலேயே இலங்கை மீதான நெருக்குதல்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக யுத்தமோதல்களின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றுக்குப் பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிலுவையாகக் கொண்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மீது இந்த நெருக்குதல்கள் மேலோங்கியிருக்கின்றன.

பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவேற்றப் போவதில்லை என யுத்தத்தில் வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நேரடியாகவே தெரிவித்திருந்தது. ஆனால், யுத்த வெற்றி வீரனாகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்சவை அரியணையில் இருந்து வீழ்த்தி, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பொறுப்பு கூறுவதற்கான ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி ஆதரித்திருந்தது.

மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு 30ஃ1 இலக்கப் பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுவதாக மனமுவந்து ஏற்று ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால் அளிக்கப்பட்ட ஒப்புதலுக்கு அமைய நல்லிணக்கச் செயற்பாடுகளையும் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளையோ உளப்பூர்வமாக மேற்கொள்ளவில்லை. மாறாக காரியங்களை இழுத்தடித்துச் செல்வதிலேயே கூடிய கவனம் செலுத்தியிருந்தது.

அத்துடன் ஐநா மனித உரிமைப் பேரiயின் பிரேரணையின்படி, சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாக உறுதியளித்ததன் பின்னர், வெளியார் எவருக்குமே இடம்கிடையாது விசாரணைப் பொறிமுறையில் உள்ளுர் நீதிபதிகளே இடம்பெற்றிருப்பார்கள், வேண்டுமென்றால் வெளிநாட்டவர்களின் ஆலோசனைகளை மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என அளிக்கப்பட்ட ஒப்புதலுக்கு முரணான வகையில் கருத்து வெளியிட்டு, அதன்படியே காரியங்கள் முன்னெடுக்கப்படும் என்பதையும் உறுதியாகக் கூறியிருக்கின்றது.

அவ்வாறிருந்த போதிலும், 2016 ஆம் ஆண்டிலும் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு ஐநா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் தவறியிருந்தது. ஆயினும் தனக்கு கால அவகாசம் போதாது என தெரிவித்த காரணத்தை ஏற்று, அரசாங்கம் கோரியவாறே பிரேணையை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை ஐநா மனித உரிமைப் பேரவை வழங்கியிருந்தது.

பின்னணியில் அமெரிக்கா

இந்த கால அவகாசமானது, ஐநா மனித உரிமைப் பேரவையினால் மட்டும் வழங்கப்படவில்லை. இதன் பின்னணியில் அமெரிக்கா செயற்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கத்திற்கு இவ்வாறு கால அவகாசம் வழங்கப்படுவதை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆயினும் அந்த மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து, இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் மக்கள் சார்பிலான ஒப்புதலை அமெரிக்கா பெற்றிருந்தது என்பது விசேடமாக சுட்டிக்காட்டத் தகுந்தது.

இவ்வாறு அமெரிக்காவிடம் கால அவகாசம் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு, உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

அது மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குக்கூட தெரியாமல் இந்த விடயம் மறைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் வெளியிட்ட தகவலையடுத்தே இது வெளிச்சத்திற்கு வந்தது என்பதும், அதன்பின்பே கூட்டமைப்பின் மக்கள் பிரநிதிகள் அடங்கிய உயர் கூட்டத்தில் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இந்தப் பிரேரணைகள் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினாலோ அல்லது அதன் அலுவலக அதிகாரிகளினாலோ கொண்டு வரப்படவில்லை. இந்தப் பிரேரணைகளை முழு மூச்சாக இருந்து அமெரிக்காவே மனித உரிமைப் பேரவையில் கொண்டு வந்திருந்தது.

எனவே, இலங்கையில் இடம்பெற்ற யுத்த மோதல்களின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டிருந்தன, அத்துடன் போர்க்குற்றச் செயற்பாடுகளும் இடம்பெற்றிருந்தன என்று ஐநா தெரிவித்திருந்தாலும்கூட, ஐநா மனித உரிமைப் பேரவையில் அவை தொடர்பில் பிரேரணைகளை சர்வதேச சக்தியாகிய அமெரிக்காவே கொண்டு வந்திருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்கு, இலங்கை அரசாங்கத்திற்குப் பல வழிகளிலும் உதவியிருந்த சர்வதேச நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். அதே அமெரிக்காதான் விடுதலைப்புலிகளுடனான இராணுவ மோதல்களின்போது அரச படைகள் மனித உரிமைகளையும் சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளையும் மீறியிருந்தன என குற்றம் சுமத்தி இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்து ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளைக் கொண்டு வந்திருந்தது.

இந்த வகையில் ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களின் ஊடாகவும், ஐநா மனித உரிமை ஆணையாளரினாலும் மனித உரிமை மீறலுக்கான பொறுப்பு கூறலில் இலங்கை அரசாங்கத்திற்கு எழுந்துள்ள நெருக்கடிகளானது, சர்வதேசத்தினாலேயே – சர்வதேச நாடுகளினாலேயே கொடுக்கப்படுகின்றன என்பது நிரூபணமாகின்றது.

மனித உரிமை ஆணையாளரின் எச்சரிக்கை

இந்தப் பின்னணியிலேயே, செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ராட் ஹுசைன் உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறும் விடயத்தில் காலத்தை இழுத்தடிக்காமல் துரிதமாகவும் நம்பகமாகவும் செயற்பட வேண்டும் இல்லையேல் சர்வதேச தீர்ப்பாயத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்படும் என சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளுக்குரிய பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படுவது, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், காணாமல் போனோருக்கான அலுவலகத்தைச் செயற்படுத்துதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள தமது காணிகளுக்காகவும:;, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதற்காகவும் போராடி வருகின்ற தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளார்என் என்பதையும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறும் விடயத்தில் ஐநா மனித உரிமை ஆணையாளரினால், இதுகால வரையிலும் இல்லாத வகையில் அழுத்தமாகவும் எச்சரிக்கை விடுக்கும் தொனியிலும் இப்போது கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் இந்தக் கூற்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய மனங்களைச் சற்று ஆசுவாசப்படுத்துவதாகவும், அதேவேளை, சிங்களத் திவிர அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச போன்றவர்களை சீற்றமடையச் செய்வதாகவும் அமைந்துள்ளது.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் எச்சரிக்கைக் கூற்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரவேற்றிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அது குறித்து அதிருப்திபயடைந்திருக்கின்றது. வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவிடயம் தொடர்பில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ராட் ஹுசைனை சந்தித்து நிலைமைகளை விளக்குவார் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யதார்தத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய நிலைப்பாட்டில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

இருந்த போதிலும், ஒரு நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் அவருடைய கூற்றுக்களும், அவர் பக்க நியாயங்களும் மனித உரிமை ஆiணாயாளரினால் கவனத்திற் கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறும் உரிமை மீறல் விடயங்களில் பொறப்பு கூறும்படியும் வலியுறுத்துகின்ற ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும், மனித உரிமைப் பேரவையும் இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களே, அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கின்றதே என்ற முழுமையான ஆதங்கத்தில்தான் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்ற முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல.

ஐநாவையும், சர்வதேச நாடுகளையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில், அவர்களுக்காகச் செயற்பட வேண்டிய நிலைமைக்குத் தமிழர் தரப்பில் சர்வதேச மட்டத்தில் வலிமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. சரவ்தேச வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் ஒரு துரும்பாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதே யதார்த்தம்.

தமிழ் மக்களுக்காக சர்வதேசமும், ஐநாவும் அக்கறைகொண்டு செயற்படுகின்றன என செய்யப்படுகின்ற பிரசாரமும், தமிழ் மக்களுக்காக அல்லது தமிழ் மக்களின் சார்பில் சர்வதேசம் செயற்படுகின்றது என்றும் அந்த வகையில் தமிழ் மக்களுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் சர்வதேசம் ஆதரவாக இருக்கின்றது என்றும் செய்யப்படுகின்ற அரசியல் ரீதியான பிரசாரங்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.

உரிமைகளுக்காகவும், உரிமை மறுப்புக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரே விடாப்பிடியாகக் குரல்கொடுக்க வேண்டும். தொடர்ச்சியாகப் போராட வேண்டும். அதனைவிடுத்து, தங்களுக்காக பிறர் செயற்படுகின்றார்கள், அவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள் என்று வெற்றுப் பிரசாரம் செய்வதிலும், வெறும் தேர்தல் அரசியலுக்காக மக்களைத் திசை திருப்புவதிலும் பயனேதும் ஏற்படப் போவதில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *