இலங்கை பிரதான செய்திகள்

வரலாற்றுப் பாடநூல்களில் தமிழர் வரலாறுகள் புறக்கணிக்கப்படுகின்றன – டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம்.

எமது நாட்டின் தமிழ் மூலப்  பாடநூல்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக வரலாற்றுப் பாட நூல்களில் கடந்த காலங்களிலிருந்து தமிழர் வரலாறானது தொடர்ந்தும் திரிபுபடுத்தல்களுக்கும், மூடிமறைப்புக்களுக்கும், புறக்கணிப் புக்களுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலைமைகள் அகற்றப்பட்டு நாட்டின் உண்மையான வரலாற்றை எமது மாணாக்கருக்கு கற்பிக்க வேண்டியது முக்கியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர்    டக்ளஸ் தேவானந்தா   தெரிவித்துள்ளார்.

தமிழ் மூல வரலாற்றுப் பாடநூல்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்ரம சிங்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க கல்வி அமைச்சர் வெ. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்; புத்தகங்களில் உள்ள குறைபாடுகளையும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளையும் துறைசார்ந்த தமிழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைக்கொண்டமைந்த குழு ஒன்றின் ஆலோசனைகள், பரிந்துறைகளை என்பவற்றைத் திரட்டித் தயாரிக்கப்பட்ட ஆவனச் சுருக்கத்தை இணைப்பாக அக்கடிதத்துடன் அனுப்பிவைத்துள்ளார்.

தமிழ் மாணவர்களுக்கான வரலாற்றுப் பாட நூல்களில் சிங்கள பௌத்த மக்களின் வரலாறு தொடர்பான விடயங்களே மிகக் கூடுதலான அளவில்  இணைக்கப்பட்டிருக்கின்றன. உரியவாறு இடம் கொடுக்கப்படவில்லை. மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எமது வரலாற்று நிகழ்வுகளுக்குக்கூட முக்கியத்துவம் வழங்காது புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயர் விழுமியங்களை முன்னெடுக்கின்ற காலகட்டத்தில் இந்நாட்டினுடைய வரலாறு பிழையாகவும் திரிபுபடுத்தப்பட்டும் மறைக்கப்பட்டும் உள்ள நிலைமைகள் சீர்செய்யப்படுமாகவிருந்தால் மாணவர்கள் நாட்டின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாகக் கற்பதுடன் உண்மைத்தன்மையையும் அறிந்து கொள்வார்கள் எனவும் டக்ளஸ் தேவானந்தா   அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *