இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையிலிருந்து சிசுக்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையிலிருந்து சிசுக்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறக்கும் ஆயிரக் கணக்கான சிசுக்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வளர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1980 ஆம் ஆண்டுகளில்  போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11,000 சிசுக்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்குலக நாடுகளுக்கு பிள்ளைகளை விற்பனை செய்யும் நோக்கில் சில இடங்களில் குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாகவும், இதனை பிள்ளைப் பண்ணைகள் என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் வெளியிட்ட ஆவணமொன்றில் இந்த சட்டவிரோத சிசு கடத்தல்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெரும் எண்ணிக்கையிலான சிசுக்கள் இவ்வாறு தத்தெடுத்து வளர்க்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தத்தெடுக்கப்பட்ட சிசுக்கள் தொடர்பான மரபணு தகவல்கள் தரவுத் தளமொன்றில் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் நெதர்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டினருக்கு மாத்திரம் சுமார் 4 ஆயிரம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் குழந்தைகள் விற்பனையாகியுள்ளதாக விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் சிசுக்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் விவகாரத்துடன்  அரசாங்கத்திற்கு தொடர்பு கிடையாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *