இலங்கை பிரதான செய்திகள்

வட மாகாண விவசாயக் கண்காட்சியின் நான்காம் நாள் இன்று :


வட மாகாண விவசாயத் திணைக்களத்தால் நடாத்தப்படும் விவசாயக்  கண்காட்சி நான்காவது நாளாக யாழ்ப்பாணம் திருநெல்வேலி விவசாயத் திணைக்களத் தொகுதியில் இடம்பெற்று வருகிறது.   இவ் வட மாகாண விவசாயக் கண்காட்சியில் நேற்றைய மூன்றாவது நாள் வரையில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

‘காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய  சந்தையை நோக்கிய நிலைபேறான விவசாயம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்றுவரும் இம் மாபெரும் கண்காட்சி கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது.

இங்கு இலங்கையின் மண் வளம், பழப்பயிர்ச் செய்கை, காளான் வளர்ப்பு, நீர் முகாமைத்துவம், நிலத்தடி நீர் சேமிப்பு என்பன மாணவர்களின் ஞாபகத்தில் இருக்கக் கூடிய வகையில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வீட்டுத் தோட்டம், அலங்கார தாவரவளர்ப்பு, வலைவீடுகளில் பயிர்ச்செய்கை, மூலிகைப் பயிர்ச்செய்கை, விவசாய இயந்திர மயமாக்கல், அறுவடைக்கு பிந்திய நடவடிக்கை என பல்வேறு வகையான தகவல்கள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவைதவிர யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் புத்தாக்கங்கள், விவசாய ஆராய்ச்சி நிலையங்களின் ஆராய்சிகள், புதிய வெளியீடுகள், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் சேவைகள், விலங்குவளர்ப்பு முறைகள் விலங்கு நோய்கள், தடுப்பு முறைகள் என்பன வற்றுடன் காலநிலை அவதான நிலைய கருவிகள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வினியோக பகுதிகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இதே வேளை இக்கண்காட்சியால் பலாலி வீதி பாரிய வாகன நெரிசலுடன் காணப்படுவதுடன் வீதிப்போக்குவரத்தை ஒழுங்கு செய்ய அதிகளவான பொலிசார் அப்பிரதேசத்தில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *