இலங்கை பிரதான செய்திகள்

ஐதேகவுடன் பேச்சு ஆரம்பம் – உரிய புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம் – மனோ கணேசன்

எதிர்வரும் ஜனவரியில் நாடெங்கும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாயுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலக்ராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார் மற்றும் சண். பிரபாகரன் ஆகியோர் அடங்குகின்றனர்.
நுவரேலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளே தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் அனேகமான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட நாம் முடிவு செய்துள்ளோம்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் தலைமை கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்சுகள் நடைபெறுகின்றன. கடந்தகால தேர்தல்களில் ஐதேகவின் தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்த ஒருசில இடங்களில் அதே உறுப்பினர்கள் போட்டியிட உடன்படும் அதேவேளை ஏனைய தமிழ் பெரும்பான்மை வட்டாரங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களே போட்டியிடவேண்டும் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடாகும்.
கூட்டு சேர்ந்து போட்டியிடுவதில் உரிய புரிந்துணர்வு இல்லையெனில் நாடெங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து களமிறங்கவும் தயங்காது. காலத்தின் தேவை கருதி ஐதேகவுடன் கூட்டாக போட்டியிட்டாலும் அல்லது தனித்து எங்கள் சின்னத்தில் போட்டியிட்டாலும் எங்கள் தனித்துவம் எப்போதும் தலை நிமிர்ந்து நிற்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த அரசாங்கம் பல கட்சிகள் அடங்கிய அரசாங்கமாகும். தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு, பின் கூட்டு சேர்ந்து செயற்படுவதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஆகவே எல்லா சாத்தியங்களையும் நாம் ஆராய்கிறோம். இந்த நாட்டில் தமிழ் மக்களை நோக்கி துன்பங்கள், சவால்கள், பயமுறுத்தல்கள் வரும்போது அவற்றை நாமே அரசாங்கத்தில் இருந்தபடி எதிர்கொள்கிறோம். அரசாங்கத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும், எங்களிடம்தான் தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு பதில்களை கேட்கிறார்கள். எங்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி நிதானமாக சவால்களை வெற்றிகொள்கிறோம். எங்கள் குரல் நாடெங்கும் ஒலிக்கிறது. கடந்த இரண்டு வருடங்கள் என்ற மிக குறுகிய காலத்திலேயே நாம் பல சவால்களை தீர்த்தும், பல தீர்வுகளுக்கான அடிப்படைகளை ஏற்படுத்தியும் உள்ளோம். எனவே எங்கள் வாக்குகள் அதிகரிக்கும் போது, எங்கள் பலமும் அதிகரிக்கும். எங்கள் பலம் அதிகரிக்கும் போது, எங்கள் சாதனைகளும் அதிகரிக்கும். இதை தமிழ் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு சவால்கள் வரும்போது சும்மா இருந்தவர்கள், கடந்த பல்லாண்டுகளாக கோமாவில் இருந்தவர்கள், இன்னமும் மகிந்த ராஜபக்சவின் கொடுங்கோல் கொடியையும், கோடிகளையும்  தூக்கி  பிடித்துக்கொண்டு இருப்பவர்கள்,  எங்களை அழிக்க வேண்டும் என்ற ஒரே அற்ப நோக்கத்துக்காக அரசியல் செய்பவர்கள், தேர்தல் காலங்களில் மட்டும் ஓடோடி வந்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க முடியாது. இனிமேல் தமிழ் மக்கள் மத்தியில் சுயலாப வயிற்றுப்பாட்டு அரசியலுக்கு இடமில்லை. அதற்கு நாம் இடம் கொடுக்கவும் மாட்டோம். மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் என்பதை  நாம் நிரூபிப்போம்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *