இலங்கை பிரதான செய்திகள்

2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனம் – விவசாயிகளுக்கு விசேட திட்டங்கள்

தேசிய உணவு உற்பத்தி புரட்சியை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விவசாய தொழிற்துறை பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   தெரிவித்தார்.

இன்று   கெக்கிராவ திப்படுவெள நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற தேசிய உணவு உற்பத்திப் புரட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.    இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை விரிவாக முன்னெடுக்கும்வகையில் 2018 ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

தென்னை முக்கோண வலயம் உட்பட ஏக்கர் கணக்கான தென்னங்காணிகள் வீடமைப்புத் திட்டங்களாக மாற்றப்பட்டுள்ள காரணத்தினால் தென்னை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு வீடமைப்பு தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வறுமையை ஒழித்து நாட்டை மீண்டும் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிக் கொண்டு செல்லும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரசியல், இனம், சமயம் மற்றும் கலாசார பேதங்களின்றி நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கத்திற்கெதிராக ஊர்வலம் செல்லும் அனைவரிடமும் அந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டை விரும்பும் உண்மையான பிரஜைகளாக இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு தான் அழைப்பு விடுப்பதாகவும்   குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் விவசாயிகளை கடன்சுமையிலிருந்து விடுவித்து அவர்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் சமூக அங்கீகாரத்துடன்கூடிய சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தேவையான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு நாட்டின் விவசாயத்துறைக்குத் தேவையான வசதிகள் மற்றும் வளங்களைப் பெற்றுக்கொடுத்து உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் என்றவகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *