இலங்கை பிரதான செய்திகள்

கருணாவும் பிள்ளையானும் மீண்டும் இணைய மாட்டார்கள்…

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதன் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன், வி.கமலதாஸ் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து வௌியிடுகையில்,

தமது கட்சி ஏனைய பல கட்சிகளுடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் எந்தவொரு கட்சியினருடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவுள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடன் இச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பேசப்பட்ட விடயம் குறித்து இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதில்லை என்றும், இருப்பினும் இரு கட்சிகளுக்குமிடையில் நல்லெண்ணத்தைப் பேணிக் கொண்டு செயற்படுவதெனவும் முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply