இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

rain_3058922f_3062965f

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை பிந்தியுள்ளபோதும் வரட்சி மற்றும்  வெம்மையால் அவதிப்பட்ட மக்களுக்கு மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக ஊடங்கள் தெரிவிக்கின்றன.  வழமைபோன்று வடகிழக்கு பருவ மழை ஒக்டோபர் 3ஆம் வாரத்தில் தொடங்க வேண்டும், ஆனால் அதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாததால் சற்றே தாமதமடைந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஈரப்பதம் நிறைந்த கிழக்கு திசைக் காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் மழை பெய்துள்ளது. இதன் மூலம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.  சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது தொடங்கியுள்ள மிதமான மழை அடுத்த 48 மணி நேரத்திற்கும் பெய்யும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தொழுதூர், வலங்கைமானில் தலா 6 செமீ மழையும் பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   மேலும் சென்னை, ஜெயங்கொண்டம், முசிறி, மயிலாடுதுறை, வேதாராண்யம், கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு சராசரி மழை அளவான 44 செமீ வரை இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *