இந்தியா பிரதான செய்திகள்

2இணைப்பு – ஒக்கி புயலால் மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் மீட்பு: 198 தமிழக மீனவர்கள் 18 படகுகளுடன் லட்சத்தீவு அருகே மீட்பு:-

ஒக்கி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்கி புயல் தாக்கியபோது கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் ஏராளமான மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் புயலில் சிக்கி மாயமானதாக அவர்களின் உறவினர்கள்  முறையிட்டு இருந்தனர்.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழகம் மற்றும் கேரளா மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மீனவர்களை தேடும் பணியில் மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்ய தயார் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒக்கி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என முதல் அமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநில கடல் பகுதியில் 66 கேரள படகுகள் மற்றும் 2 தமிழக படகுகளுடன் 952 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். மேலும், பருவநிலை சரியானதும் மீனவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கடலில் மாயமான 198 தமிழக மீனவர்கள் 18 படகுகளுடன் லட்சத்தீவு அருகே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், தமிழகம் மற்றும் கேரளம் கடல் பகுதியில் கப்பல்களும், விமானங்களும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்

குமரி மாவட்டத்தில்   காணாமல் போயுள்ள  101 மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது –

08: 43Am


இந்தியாவின் குமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்று காணாமல் போயுள்ள  101 மீனவர்களை கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மூலமாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகினக்றது.  குமரி மாவட்டத்தில் புயல் காரணமாக கடலிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதுடன்   கடலில் ராட்சத அலைகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த புயலில் சிக்கி காணாமல் போயிருந்த  312 மீனவர்கள்   படிப்படியாக மீட்கப்பட்டுள்ளனர்.  எனினும் 101 மீனவர்களை மட்டும் இன்னும் மீட்க முடியவில்லை எனவும் தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில்  இன்றும் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது.   இதனால் கடற்கரை கிராமங்களில் சாலைகளும் கடல் நீரால் அரிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர் பகுதியை சேர்ந்த மக்கள  பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குமரிமாவட்டத்தில் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply