இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு2 -வடக்கு விட்டுக்கொடுத்தால், தெற்கு அடிமைபடுத்த முனைகிறது. – சி.வி.

uk-ministerகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

எமது நாட்டில் போர்க்குற்றம் இழைக்கப்படும் போது சட்டமாக இருக்கவில்லை. எனவே எங்களுடைய நாட்டு சட்டத்திற்குள் போர்க் குற்ற சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும் பொது நலவாய நாடுகளிற்கான அமைச்சர் பரோனெஸ் அனெலி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,ஜெனிவாவில் அடுத்த வருட மார்ச் மாதம் வரவேண்டிய செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வந்தார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போதே பல கடிதங்களை எழுதியிருதேன். அந்த கடிதங்களில் கூறிய விடயங்கள் தற்போது நடைமுறையில் நடைபெறுவதனை இப்போது எடுத்து காட்டியிருந்தேன்.அதாவது வெளிநாட்டு ஈடுபாட்டுடன் இந்த போர் விசாரணை நடைபெறாவிட்டால் நீதியை பெற்றுக்கொள்ள முடியாமல் செல்லும் என கூறியிருந்தேன். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களில் வெளிநாட்டு உள்ளீடுகளை அரசு கொண்டுவருவதாக தெரியவில்லை.
வெளிநாட்டு உள்ளீடுகள் வராவிட்டால் எங்களுக்கு நீதி கிடைக்காது என்பது நிச்சயம். இதனைவிட போர்க் குற்ற சட்டமானது எமது சட்டத்திற்குள் கொண்டுவரப்படல் வேண்டும்.பலநாடுகளில் இருக்கும் சட்டமாக இருந்தாலும், எமது நாட்டில் போர்க்குற்றம் இழைக்கப்படும் போது சட்டமாக இருக்கவில்லை. எனவே எங்களுடைய நாட்டு சட்டத்திற்குள் போர்க் குற்ற சட்டம் உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இது சம்பந்தமாக அரசு தரப்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனை அவருக்கு வலியுறுத்தி இருந்தேன்.அதன் பின்னர் பெண்கள் சம்பந்தமான விடயங்களையும் குறிப்பிட்டிருந்தேன். விதவைகள் எத்தனை பேர்,  அவர்களுடைய பாதுகாப்பு, அவர்கள் தொடர்பான செயற்திட்டங்கள் மேற்கொள்ள கூடிய அவசியங்களை எடுத்து கூறினேன்.
செயற்திட்டங்கள் எவ்வாறான வகையில் அமைய வேண்டும் என எம்மிடம் கோரி அந்த செயற்திட்டங்களை எம்மிடம் தந்தால் அதற்கான நிதியுதவிகளை வளங்குவதாவும் கூறினார். யுத்தம் முடிந்து எட்டுவருடங்கலாகும் நிலையில் தொடர்ந்தும் ஒரு இலட்சத்துக்கு அதிகமான இராணுவம் இருப்பது எந்தளவிற்கு எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதனை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.
எனினும் சமாதானம் நோக்கி செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதற்கு நான், நாங்கள் விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் முன்வாந்தால் கூட பலவிதங்களில் எங்களை அடிமைப்படுத்தும் விதத்தில் தான் சில சில நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். தெற்கில் எடுக்கப்படும் முடிவுகள் எங்கள் தனித்துவத்தையும் உரிமைகளையும் புறக்கணிப்பதாக இருப்பதனையும் நான் எடுத்து கூறினேன் என மேலும் தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் குறித்த  அறிக்கை தருமாறு பிரித்தானிய அமைச்சர் கோரிக்கை

Nov 7, 2016 @ 15:27

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள் மற்றும் கணவனை இழந்தோருக்கு  எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்ற  என்பது குறித்து  அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பார்னோஸ் அனேலி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து  உரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், த.குருகுலராசா மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரித்தானிய அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்

Nov 3, 2016 @ 13:02

baroness-anelay

எதிர்வரும் வாரம் இலங்கைக்கு  வர உள்ள பிரித்தானிய அமைச்சர் பார்னோஸ் அனேலி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார் என    இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்தை மேம்படுத்துதல், மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊழல் மோசடிகளை ஒழித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியன குறித்து வலியுறுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களை அனேலி சந்திக்க உள்ளார் எனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் இந்த விஜயத்தின் போது வலியுறுத்தப்பட உள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால்நிலை சமத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும்  அவர் வலியுறுத்த உள்ளார் எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *