இலங்கை பிரதான செய்திகள்

யாழில். தொடரும் கைதுகள். நான்கு நாட்களில் 13 பேர் கைது. மூவருக்கு விளக்கமறியல்

arrest_CI

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கைது வேட்டையில் நான்கு நாட்களில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் ஆவா குழு தொடர்பில் கடந்த சில தினங்களாக கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சனிக்கிழமை முதல் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது வேட்டையை தொடர்ந்தனர்.

செவ்வாய்க்கிழமை வரையிலான நான்கு நாட்களில் 13 பேர் அவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளனர். செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்கள் ஆவார்கள்.

இதேவளை கைது செய்யப்பட்ட 13 பேரில் , சிவலிங்கம் கமலநாதன் , கொங்கதரன் பிருந்தாவன் , அன்டனிதாஸியஸ் அரவிந்தன் , ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் முற்படுத்தப் பட்டனர். அதனை தொடர்ந்து மூவரையும் எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.