இலங்கை பிரதான செய்திகள்

தன்னுடைய விகாரைக்கு வரவில்லை என மைத்திரிபாலவையும் கெட்ட வார்த்தைகளால் சுமணரத்ன தேரர் ஏசினார் – வியாழேந்திரன் :

15055782_188453938225315_5781443736676358854_n
குளோபல் தமிழ் செய்தியாளர்

சோபித தேரர் மறைந்த போது சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் தமிழ் மக்களும் கண்ணீர் விட்டார்கள் என்று தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் சோபித தேரர்கள் வாழ்ந்த நாட்டில்தான் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்களும் வாழ்வதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிராம சேவையாளர் ஒருவரை தவறான வார்த்தைகள் மூலம் பேசியதன் ஊடாக பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள மட்டக்களப்பில் தங்கியுள்ள  சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதேச செயலாளரை ஒரு பெண் என்றும் பார்க்காமல் மிக கூடாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இலங்கையில் அதிக  கெட்ட வார்த்தைகள் பேசியவர் யார் என்று பட்டியல் படுத்தினால் அதில் சுமணரத்ன தேரரே முதல் இடத்தை வகிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது முதல் சம்பவமில்லை என்று தெரிவித்த அவர், இதற்கு முன்னர் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.

இதற்கு முன்னர் பெண் பொலிஸார் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவரை  தாக்கியதாகவும்   அவர் குறிப்பிட்டார்.  இதேவேளை தன்னுடைய விகாரைக்கு வரவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக்கூட மிகக் கெட்ட வார்த்தைகளால் குறித்த தேரர் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பின்னரும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைதுசெய்யவில்லை. இதேவேளை கடந்த சில தினங்களின் மட்டக்களப்பு பதுளை வீதியில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் செங்கலடி பங்குடாவெளியில்  அத்துமீறி நுழைந்து சிலையை வைக்க முயன்றதாகவும் அங்கும் மக்களை நோக்கியும் பொலிஸை நோக்கியும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் கூறினார்.

குறித்த பிக்கு, குறித்த தனியார் காணியில் புதிய கட்டங்களை நடுவதற்கோ, கூட்டம் நடத்தவோ, சின்னங்களை நிறுவவோ, மரங்களை நடவோ, தடை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் அந்தக் குற்றச்சாட்டில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவை அவர் மதிக்கவில்லை என்றும் கூறினார்.

நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் காலத்தில் இவ்வாறு தேரர் நடப்பது மிகவும் கவலைக்குரியது என்று தெரிவித்த அவர்,மட்டக்களப்பு மாவட்டத்தில் குழப்பம் விளைவிக்கும் குறித்த தேரரை அங்கிருந்து வெளியேற்ற  பௌத்த பீடங்களைச் சேர்ந்த மதகுருமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் மேலும் அங்கு தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *