இலங்கை பிரதான செய்திகள்

விஜயன் இலங்கைக்கு விசா வாங்கிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானத்திலா வந்தார்? – மனோ கணேசன்

mano

விஜய இளவரசன், தனது நண்பர்களுடன் இலங்கை தீவின் மேற்கு கரையில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. அவர்கள் வெளியில் இருந்து இந்த நாட்டுக்கு படகில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் என்ன விசா வாங்கிக்கொண்டா வந்தார்கள்? படகில் வராமல், அவர்கள் என்ன, ஸ்ரீலங்கன் விமானத்திலா வந்தார்கள்? அவர்கள் வெளியில் இருந்து வந்தார்கள் என்று மஹாவம்சம் சொல்லுகிறது. விஜயனின், குவேணியுடனான திருமணம் பற்றியும், பின்னர் பாண்டிய நாட்டு இளவரசியுடனான திருமணம் பற்றியும் மகாவம்சம் கூறுகிறது.

விஜயனின் வருகையை நினைவுகூர்ந்து இலங்கை அரசாங்க தபால் திணைக்களம் ஒரு முத்திரையை வெளியிட்டது. அந்த முத்திரையின் பெறுமதி மூன்று சதம். அந்த முத்திரை, பத்து வருடங்களுக்கு பிறகு திடீரென அது வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஒருபுறம் மகாவம்சத்தை புகழ்கிறீர்கள். மறுபுறத்தில் அதையே மறுக்கிறீர்கள்.

நாங்கள் மட்டுமே இங்கே ஆதிமுதல் இருந்தோம். நீங்கள் எல்லோரும் வெளியில் இருந்து வந்தீர்கள் என தமிழ், முஸ்லிம் இன மக்களை பார்த்து எடுத்ததுக்கெல்லாம், சிங்கள மக்களை சார்ந்த ஒரு சிறு பிரிவினர் கூறுகிறார்கள். குறிப்பாக பொதுபல சேனா பொது செயலர் ஞானசார தேரர் தமிழர்களை இந்தியாவுக்கு போக சொல்கிறார். மட்டக்களப்பில் ஒரு தேரரும், இங்கே கொழும்பு மாவட்ட இரத்மலானையில் ஒரு தேரரும் தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசி, தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இது அடிப்படைவாத சிந்தனையாகும். தமிழரை இந்தியாவுக்கும், முஸ்லிம்களை அராபியாவுக்கும் போக சொல்லுகிறார்கள். இது இந்நாட்டிலே தேசிய சகவாழ்வுக்கு தடையாக இருக்கும் பிரதானமான ஒருபக்க காரணமாக அமைந்துள்ளது. நாங்கள் ஓட மாட்டோம். போக மாட்டோம். இது எங்கள் நாடு.

அடுத்த பக்க பிரதான காரணங்களும் உள்ளன. பல இனங்கள் வாழும் இந்நாட்டில் இன்று முடிவுக்கு வந்துவிட்ட தமிழீழ வாதத்தையும், ஆயுத போராட்டத்தையும், இன்னமும் வலியுறுத்தியபடியே வாழ முனையும் ஒரு சிறு பிரிவு தமிழர்களிடையே நிலவும் அடிப்படைவாதமும், மத்திய கிழக்கு அரபு நாடுகளில் நிலவும் பழமைவாத சட்ட திட்டங்களுடன், பல இனங்கள் வாழும் இந்நாட்டிலும் வாழ முனையும் ஒரு சிறு பிரிவு முஸ்லிம்களிடையே இருக்கும் அடிப்படைவாதமும் தேசிய சகவாழ்வுக்கு தடையாக இருக்கின்ற அடுத்த பக்க பிரதான காரணங்கள்.

இந்த நாட்டிலே இனங்கள் மத்தியில் சகவாழ்வு நிலை பெற வேண்டுமானால், இந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத சிந்தனைகள் மாறவேண்டும் என்பதை தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் இந்த சபையிலே, நான் மிகவும் பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வரவு செலவு திட்ட ஒதுக்கீடு குழுநிலை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறினார்.

அமைச்சர் மனோ கணேசன் தனது உரையில் மேலும் கூறியதாவது,

நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினர் இடையே சகவாழ்வை உறுதி படுத்துவதும், இந்நாட்டின் மும்மொழி கொள்கையை அமுல் செய்வதும்,    ஜனாதிபதி அவர்களால் எனது அமைச்சுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் ஆகும். இந்நோக்கங்களை நிறைவேற்ற எனது அமைச்சில் இன்று, அரசகரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரசு சார்பற்ற அமைப்புகளின் செயலகம் ஆகிய நிறுவனங்களையும், தேசிய சகவாழ்வு பிரிவு, மொழிக்கொள்கை தெளிவுப்படுத்தல் பிரிவு ஆகிய உள்ளக பிரிவுகளையும் கொண்டுள்ளது.

இந்த ஆறு நிறுவனங்களை கொண்ட பெரிய ஒரு அமைச்சு இது. இங்கே எனது அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு போதுமானது அல்ல என கூறப்பட்டது. அது உண்மைதான் இதை நான் பகிரங்கமாக கூறியுள்ளேன். அது சரி வரும் என்ற உறுதி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பார்ப்போம். சரி வராவிட்டால் நான் பிச்சை எடுத்தாவது என் கொள்கைகளை முன்னெடுப்பேன்.

நான் என் அமைச்சை, இன்றிலிருந்து ஒரு வருடமும், மூன்று மாதங்களுக்கும் முன் பொறுப்பேற்ற போது இந்த அமைச்சுக்கு அரசியல் வழிகாட்டி இருக்கவில்லை. எமது நூறு நாள் ஆட்சியில் இந்த அமைச்சு அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சுடன் இணைக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஒரு அமைச்சர் தனியாக இருக்கவில்லை. எனவே எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து கட்டி எழுப்ப வேண்டிய சவாலை நான் சந்தித்தேன். அமைச்சின் உள்ளக அதிகாரிகளையும், வெளிக்கள அதிகாரிகளையும் எனது அமைச்சின் நோக்கை புரிந்துகொள்ளும் வண்ணம் மாற்றி அமைப்பதில் இன்று நான் வெற்றி கண்டுள்ளதாக நினைக்கின்றேன். இந்த நாட்டின் மொழிப்பிரச்சினைக்கு 60 வருட வரலாறும், இனப்பிரச்சினைக்கு சுதந்திரம் கிடைத்த நாள்  முதல் கடந்த 68 வருட வரலாறும் உள்ளது. எனவே இவற்றை ஒரே வருடத்தில் தீர்த்திட முடியாது.

இன்று நான் எனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அமைச்சின் நோக்கங்களை நாம் தீர்மானித்துள்ளோம். இதை செய்வதற்கு இந்த நாட்டில் நிலவும் இனவாத நோயை நாம் சரியாக அடையாளம் கண்டுள்ளோம். இனி அந்த நோயுக்கு மருந்து தேடுவதுதான் எஞ்சி இருகிறது. இது ஒரு முன்னேற்றகரமான வளர்ச்சி என நினைக்கின்றேன்.

“இலங்கையர் என்பது எம் அடையாளம்: பன்மைதன்மை எம் சக்தி” என்பது எனது அமைச்சின் சகவாழ்வு கொள்கை. “மும்மொழி கொள்கை அமுலாக்கல், அரசியல் தீர்வுக்கு, தேசிய சகவாழ்வுக்கு முன்னோடி” என்பது எனது அமைச்சின் மொழி அமுலாக்கல் கொள்கை. நாம் எதிர்கொள்ளும் தேசிய இனப்பிரச்சினை நாம் நினைக்கும் அளவுக்கு சிக்கலானது இல்லை. அந்த பேய் நாம் நினைக்கும் அளவுக்கு இருண்ட பேய் இல்லை. தேசிய இனப்பிரச்சினையில், மொழி பிரச்சினை 51 விகிதம் ஆகும்.  இந்த 51 விகிதத்தை தீர்ப்பதற்கான முழு ஒத்தாசைகளையும் எனக்கு தாருங்கள். நான் அதை தீர்த்து விட்டு மிகுதி 49 விகிதத்தை உங்களுக்கு தருகிறேன் என ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நான் கூறியுள்ளேன்.

தேசிய இனப்பிரச்சினை முழுமையாக மொழி பிரச்சினை அல்ல. அப்படி நான் சொல்ல வரவில்லை. அப்படி சொன்னால் அது பொய். தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையாக அதிகார பகிர்வு அவசியம். அந்த அதிகார பகிர்வு, 13ம் திருத்தமா, 13 ப்ளஸா, சமஷ்டியா, கொன்பெடரலா என்பவற்றை பேச்சுவார்த்தைகளின் போது பார்த்துக்கொள்வோம். திட்டவட்டமாக அதிகாரம் பகிரப்பட வேண்டும். எனினும் மொழி பிரச்சினையும் இங்கே முக்கிய இடம் பெற்றுள்ளது.

மொழிக்கொள்கை அமுலாக்கல் இலேசான விடயம் அல்ல. அரச ஊழியர்கள் பெரும்பான்மையோர்  தமிழையும், சிங்களத்தையும் படிக்க ஆர்வம் காட்டவில்லை. சட்டம் போட்டும் அவர்களை மாற்ற முடியவில்லை. இந்நாட்டு அரசு ஊழியர்கள் ஒருநாள் இருமொழிகளையும் படித்து, இந்நாட்டு அரசு அலுவலகங்கள் இருமொழி அலுவலங்களாக மாறும் என்று கனவு கண்டு கொண்டு இருக்க என்னால் இருக்க முடியாது. ஆகவே, கணிசமான தொழில்ரீதியான தமிழ்-சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை  நான் நாடு முழுக்க நியமிக்க உள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரம் தயார்.

இன்னொரு அமைச்சரவை பத்திரம் இப்போது குழுநிலையில் உள்ளது. அதன்மூலம் அரசு சேவைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் இருமொழி ஆற்றல் கொண்டவராக இருப்பாராயின் அவருக்கு மேலதிகமாக நான்கு புள்ளிகள் நேர்முக பரீட்சையில் வழங்கப்படும். இதன்மூலம் ஒருமொழி ஆற்றல் கொண்டவரை விட இருமொழி ஆற்றல் கொண்டவருக்கு அரசு தொழில் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே இருமொழியில் கற்கும் ஆர்வமும் அதிகரிக்கும்.

நண்பர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் தமிழ் தெரிந்தவர்களை அமைச்சு பணியில் நியமிக்கும்படி எனக்கு ஆலோசனை கூறினார். அவருக்கு நன்றி. ஆனால், அவர் இந்த அமைச்சு பதவியில் இருந்த போது என்ன செய்தார்? மாவட்ட மட்டத்தில் 29 ஒருமைப்பாட்டு அதிகாரிகளை நியமித்தார். அதில் 4 தமிழரும், 7 முஸ்லிகளும்தான் இருந்தார்கள். மிகுதி 18 சிங்களவர்களுக்கும் தமிழ் தெரியாது. பிரதேச செயலகங்கள் தோறும் 188 ஒருமைப்பாட்டு உதவியாளர்களை நியமித்தார். அதில் 7 தமிழரும், 13 முஸ்லிமம்களும்தான் இருந்தார்கள். மிகுதி 168 சிங்களவர்களுக்கும் தமிழ் தெரியாது. இந்நிலையில் எப்படி தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாக அவர்கள் கண்காணிப்பு வேலைகளை மாவட்ட, பிரதேச மட்டங்களில் செய்யமுடியும் எனக்கேட்கிறேன்?

இன்று நான் இந்த என் அமைச்சுக்கான ஆள் சேர்ப்பு விதிகளை மாற்றியுள்ளேன். ஒருமைப்பாட்டு உதவியாளர்களை சேர்க்கும் போது அவர்களுக்கு தமிழ், சிங்களம் ஆகிய இருமொழி அறிவு அவசியம் என நான் மாற்றியுள்ளேன். விரைவில் இருமொழி அறிவு கொண்ட உதவியாளர்களை நான் பணிக்கு உள்வாங்குவேன். ஏற்கனவே இருக்கும் இந்த ஒருமொழி உதவியாளர்களை வேறு ஒரு அமைச்சுக்கு மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். பிறகு அந்த வெற்றிடங்களையும் இருமொழி ஆட்கள் மூலம் நிரப்புவேன்.

தமிழ் தெரியாமல், பலர் அரசு தொழில் வேண்டி பணியில் சேர்ந்துவிட்டு தமிழை கொலை செய்கிறார்கள். இது ஒரு தேச துரோகம். இதை இனி அனுமதிக்க முடியாது. இப்போது சபைக்கு தலைமை தாங்கும் ஆசனத்தில் என் கட்சி எம்பி வேலுகுமார் இருக்கிறார். அவர் கண்டி மாவட்ட எம்பி. இப்போது சமூகஊடகங்களில் ஒரு செய்தி பரவலாக அடிப்படுகிறது. கண்டிக்கு போகும் பஸ்ஸில், கண்டி என்ற பெயரில் முதல் எழுத்தாக “க” என்பதுக்கு பதில் “கு” என எழுதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை வேலுகுமாரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தமிழ் தெரியாதவர்கள் தமிழை அமுல் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டால், இதுதான் நடக்கும்.

தம் தாய் மொழியில், “நமோ, நமோ, தாயே” என தேசிய கீதத்தை பாடவே இந்த நாட்டு தமிழர்களை 67 வருடங்கள் காத்திருக்க வைத்த  நாடு இது என்பதை நான் மறக்க மாட்டேன். தமிழில் பாடும் போதுதான் தமிழருக்கு இந்த நம் நாடு என்ற உணர்வு வருகிறது. அந்த கீதத்தில் நாம் ஈழத்தை  பாடவில்லை. இலங்கையை தான் பாடுகிறோம். கடந்த சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வைக்கும் முடிவை அமைச்சரவை உப குழுவில் எடுக்க நான் கடுமையாக உழைத்தேன். அதில் எனக்கு எதிரணியில் இருந்தபடி எம்பீக்கள் சுமந்திரனும், வாசுதேவாவும் ஒத்துழைப்பு வகித்தார்கள். அதை இங்கே சொல்லியாக வேண்டும். அதன்மூலம் பெரும் எதிர்ப்பு சிங்கள மக்கள் மத்தியில் எழும் என எங்கள் அரசுக்கு உள்ளேயே பலர் நினைத்தார்கள். ஆனால், சிங்கள மக்கள் அதை புரிந்துக்கொண்டு ஆதரித்தார்கள். அதன்பிறகு அந்த வெற்றிக்கு பலர் உரிமை கோரினார்கள். ஆனால், அதற்கு பின்னால் நாமே இருந்தோம்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *