இலங்கை பிரதான செய்திகள்

ஜெயலலிதாவுக்கான இரங்கல்கள் – அரசியல் வானில் பிரகாசித்த வால் வெள்ளி மறைந்து விட்டது:

img_4983

வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார். மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்றைய தினம் வடமாகாண பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது மறைந்த தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் நாட்டு அரசியலில் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் நேற்று காலமானது எம் எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வால் வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று பிரகாசமாகி நின்று பின்னர் திடீரென மறைந்து விட்டது.

அண்மையிலே வட இந்திய பெண் ஊடகவியலாளர் சிமி ஃகரைவால் என்பவருக்கு செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் ஆங்கிலத்தில் அளித்த ஒரு பேட்டி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. அதைக் கேட்கும் போதுதான் சூழலானது எவ்வாறு ஒரு மனிதரை முழுமையாக மாற்றக்கூடிய வலு உடையது என்பதை அறியக் கூடியதாக இருந்தது.

மிக மெல்லிய சுபாவங் கொண்ட, கல்வியில் அதிகம் சிரத்தை கொண்ட, செழிப்பான ஒரு மென்மையான சூழலில் வளர்ந்த ஒருவர் எவ்வாறு பலவிதமான முரட்டுச் சூழல்களை எதிர்நோக்க வேண்டி வந்ததால் சாது மிரண்டது போன்று மிகவும் திடமான இரும்புப் பெண்மணியாக அவர் மாற வேண்டி வந்தது என்பதை அறியக் கூடியதாக இருந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியல் வானில் மின்னிய போது அது அவருக்குப் பெருமை சேர்த்தாலும் அவருக்குப் பாரிய இடர்களையும் இன்னல்களையும் அரசியலில் ஏற்படுத்தவில்லை. ஆனால் செல்வி ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார் என்பது அவரின் திடசங்கற்பத்தையும் உழைப்பையும் விடாமுயற்சியையும் கெட்டித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது.

அண்மையில் அவரின் அழைப்பின் பேரில் அவரைச் சென்று சந்திப்பதற்காக நடடிவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். விரைவில் குணமடைந்து வருவார் என எதிர்பார்த்திருந்தோம். காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டு போய் விட்டான்.

‘அம்மா’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவர் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது பாரதநாட்டு அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆட்சி காலத்தில் தமிழ் நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது.

தமிழின் மீதும் தமிழ் மக்கள் வாழ்வின் மீதும் தமிழ் மக்கள் எதிர்காலம் மீதும் அவர் மிக்க பற்றுறுதி கொண்டிருந்தார். கரிசனையுடன் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார்.

தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியற் தலைவரை இழந்து விட்டது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதை விட எம்மால் அவர் சார்பாக வேறு எதையும் இத்தருணத்தில் செய்ய முடியாதிருக்கின்றது என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. எம் மக்களினது ஒன்று பட்ட சோகத்தினையும் மனச் சுமையினையும் தமிழ் நாட்டு மக்களுடன் இத் தருணத்தில் பகிர்ந்து கொள்கின்றோம். என தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதல்வருக்கு த.தே.ம.முன்னணி இரங்கல்
kajan-at-indian-onsulate-1pathmini-at-indian-onsulate-2

நேற்றய தினம் மறைந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் செய்தியை பதிவு செய்திருந்தனர்.


கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உபதலைவி திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் துணைத் தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் செய்தியை பதிவு செய்திருந்தனர்

இலங்கை சிறுபான்மை மக்களின் தீர்வுக்காய் குரல் கொடுத்த கடல் கடந்த குரல் ஒன்று மௌனித்து விட்டது-கிழக்கு               கிழக்கு  முதலமைச்சர்

இந்திய  அரசியல்  தளத்தில் இந்திரா காந்திக்குப் பின்னர் ஆளுமை மிக்க  பெண்  தலைவியாக  பரிணமித்து  தமிழக மக்களின் மனதில் தனியிடம் பிடித்துள்ள மறைந்த தமிழக முதல்வர் செல்வி  ஜெயலதா ஜெயராமின் இழப்பு  முழு தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

 

செல்வி ஜெயல்லிதா  தமது   அதிகாரத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல்  மக்கள்  நலனுக்காக  இரும்புப்பெண்ணாக  இருந்து   பல்வேறு  சவால்களை வெற்றிகொண்டு  பல பெண்கள்  அரசியலில் நுழைவதற்கு  முன்னுதாரணமாக திகழ்நதார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

 

அவர் மீது  தாக்குதல் நடத்தப்பட்டபோதும்,சிறையில் அடைத்தபோதும் அடுக்கடுக்காய் வழக்குகள்தொடர்ந்த  போதும் தனிப்   பெண்ணாக இருந்து  அத்தனையையும்  எதிர்கொண்ட தைரியம்  தமிழக  அரசியலின் சரித்திர   நாயகியாக  மறைந்த  முதல்வர் ஜெயல்லிதாவை  பறை சாற்றி நிற்கின்றது.

இலங்கையின்  சிறுபான்மை  மக்களுக்கு  பல்வேறு நெருக்கடியான  சூழ்நிலைகள்  வந்தபோது   அவர்களுக்கு ஆதரவாக  குரல் கொடுத்த்தோடு மட்டுமல்லாமல்  யுத்த்த்தால்   பாதிக்கப்பட்டு  பலர் தமிழகம்  சென்ற போது   அவர்களுக்கு   நேசக் கரம்  நீட்டி  தஞ்சமளித்த  நன்றியை   இலங்கைத்  தமிழர்கள் இன்றும்நெஞ்சில்  சுமந்தவர்களாகவே உள்ளனர்.

இலங்கையில்  போர்  உக்கிரமடைந்திருந்த  காலகட்டத்தில்  மக்கள்   மடிவதைக்  கண்ட  அவர்  யுத்த்ம்  உடனடியாக  நிறுத்தப்பட  வேண்டும் என  பல  தடவைகள்  பகிரங்கமாக குரல்  எழுப்பியிருந்தார்  என்பதையும்  சுட்டிக்காட்டியாகவேண்டும்.

  இது வரை   ஐந்து   தடவைகள்  தமிழகத்தின்   முதலமைச்சர்  அரியணையை  அலங்கரித்த செல்வி ஜெயல்லிதா  இலங்கையில்  சிறுபான்மையினருக்கு  நியாயமான  தீர்வொன்று கிடைக்க வேண்டும்  என பல  தடவைகள் வலியுறுத்தியிருந்துடன்   இந்திய  மத்திய  அரசுக்கு  அழுத்தங்களை பிர யோகத்திருந்தமையும் மறுக்க முடியாது.

ஆகவே  மறைந்த    தமிழக  முதல்வர்    ஜெயல்லிதாவின்  இழப்பு  தமிழக  மக்களுக்கு  மாத்திரமன்றி  இலங்கை சிறுபான்மையினருக்கும்   ஈடு செய்ய முடியாத  இழப்பாக   அமைந்துள்ளது  என்பதை   கூறியாகவேண்டும்.  தற்போது  சோகத்தில்  ஆழ்ந்துள்ள   தமிழக  மக்களின்  துயரில்   இலங்கை  சிறுபான்மை   மக்களும்  பங்கேற்றுள்ளனர் என்ற செய்தியை   தமிழக  மக்களுடன்  பகிர்ந்து கொள்கின்றேன்.

                                                                        கிழக்கு மாகாண முதலமைச்சர்

                                                                                          ஹாபிஸ் நசீர் அஹமட்

தமிழக முதல்வரின் மறைவை கேட்டு, அதிர்ச்சியில் உறைந்தோம். துயரத்தை வெளிப்படுத்த வார்த்தையில்லை – ஈபிஆர்எல்எவ் 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைகிறோம். துயரத்தை வெளிப்படுத்த வார்த்தையில்லை என தமிழக முதல்வர் மறைவு குறித்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களால் அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்ட தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழககத்தின் பொதுச்செயலாளருமான மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். அவற்றை தனித்து நின்று சமாளித்த அவரது நெஞ்சுரம் எம்மைப் பிரமிக்க வைக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் அவரது ஆளுமைமிக்க தலைமையினால் திறம்பட நடத்திச் சென்றார்.
தமிழகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதுடன் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல நலத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்றும், தனி ஈழமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், இறுதிப் போரின்போது நடைபெற்ற சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானங்களை நிறைவேற்றியதை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
ஈழ மக்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று அவர் மனதார விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டு உழைத்தார். தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு பிரஜாஉரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்தார் .அவர்களது பிள்ளைகளான எமது மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்கு தொடர்ந்தும் அனுமதி அளித்ததுடன் இந்திய தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் ஈழத்து ஏதிலிகளுக்கும் வழங்குமாறு பணித்தார்.
மாண்புமிகு முதல்வரின் பிரிவு அனைத்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் தமிழகத்து உறவுகளுடன் ஈழத் தமிழ் மக்களாகிய நாமும் எமது துயரங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் ஈழத் தமிழ் மக்களும் அன்னாரின் மறைவிற்கு எமது இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார். அமரர் ஜெயலலிதா தமிழக மக்களை மிகவும் நேசித்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களும் ஜெயலலிதாவின் உறவினர்களுக்கும் இரங்கல் வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஜெயலலிதாவிற்கு இரங்கல்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர். ஆறு தடவைகள் தமிழக மாநிலத்தின் முதலமைச்சராக கடமையாற்றிய ஜெயலலிதா, நேற்றிரவு காலமானார்.

இவரது மறைவிற்கு மயைலகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இரங்கல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, இரங்கல் பதாகைகளை காட்சிப்படுத்தியும் தமது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்திக்காக பிரார்த்தனைகள் வழிபாடுகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்திய தமிழ் சமூகத்தின் இதயங்களை ஜெயலலிதா வென்றிருந்தார் – மஹிந்த ராஜபக்ஸ
இந்திய தமிழ் சமூகத்தின் இதயங்களை ஜெயலலிதா வென்றிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவினை ஒட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கும் ஜெயலலிதாவின் உறவினர்களுக்கம் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தின் பின்னரான இலங்iகியன் நிலைமைகளை நேரில் கண்டறிந்துகொள்ள இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *