இந்தியா பிரதான செய்திகள்

ஜெ மறைவு: அசாதாரண வேகத்தில் நடந்த ஆட்சி மாற்றம் எழுப்பும் கேள்விகள்! முரளீதரன் காசி விஸ்வநாதன்

j1

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் ஐந்தாம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் காலமான பிறகு, புதிய முதலமைச்சரின் பதவியேற்பு என்பது மிக விரைவாகவும்அமைதியாகவும் நடந்தேறியதும், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அவரது சடலத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்ததும் தமிழக அரசியல் அரங்கில் பலத்த கேள்விகளையும் சலசலப்புகளையும் உருவாக்கியிருக்கிறது.

டிசம்பர் 4ஆம் தேதியன்றே முதல்வரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அன்று இரவே அப்பலோ மருத்துவமனைக்கு வந்தார் சசிகலாவின் அண்ணன் வி. திவாகரன். இதற்கு அடுத்த நாளான டிசம்பர் 5ஆம் தேதி அப்பலோ மருத்துவமனையிலேயே அமைந்திருக்கும் கூட்ட அரங்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து அக்கட்சியின் சார்பில் எந்தவித அறிக்கையோ, விளக்கமோ அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் என்னவிதமான வாக்குறுதிகள் வாங்கப்பட்டன, என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்பவை குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில், அன்று மாலை 6 மணியளவில் மீண்டும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்குமென தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான் அன்று இரவு 11. 30 மணிக்கு ஜெயலலிதா காலமானதாக நள்ளிரவு 12.20 மணியளவில் அப்பலோ மருத்துவமனை ஒரு அறிக்கை மூலம் அறிவித்தது.

அதுவரை மருத்துவமனையில் இருந்த மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர். பிறகு சசிகலாவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அண்ணா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்

அதிகாலை 1. 30 மணியளவில் ஆளுனர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வில் தமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் முழு அமைச்சரவையுடன் பதவியேற்றார்.

இதற்கு முன்பாக, சி.என். அண்ணாதுரை, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரும் தமிழக முதல்வர்களாகப் பதவியிலிருக்கும்போதே உயிரிழந்திருக்கின்றனர். அந்த இரண்டு தருணங்களிலுமே இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டார். அண்ணாதுரை பிப்ரவரி 3, 1969ல் உயிரிழந்த நிலையில், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 9ஆம் தேதியன்று, முறைப்படி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதில் மு.கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

1987 டிசம்பரில் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் காலமான போதும், இடைக்கால முதலமைச்சராக நெடுஞ்செழியனுக்கு ஆளுனர் குரானா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விவரங்கள் வெளிவராத சட்டமன்ற உறுப்பினர் கூட்டம்

ppஆனால், ஜெயலலிதா உயிரிழந்த பிறகு டிசம்பர் ஆறாம் தேதி அதிகாலை 1.50 மணியளவில் ஆளுனர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஓ. பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக கடிதம் அளித்ததையேற்று அவருக்கு முதல்வராகப் பதவியேற்பு செய்யவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது, முதல்வர் பதவிக்கு வேறு யாருடைய பெயரும் பரிசீலிக்கப்பட்டதா என்ற விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

 

modiஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட நடராஜனுடன் பேசிய மோடி

மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டதும் அவரது உடல் அருகே முந்தைய காலகட்டங்களில் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் பலரும் நின்றிருந்தனர்.

சசிகலாவின் கணவரான எம். நடராஜன் அருகிலேயே இருந்தார். பிரதமர் நரேந்திர மோதி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது நடராஜனிடமும் சில வினாடிகள் பேசியது பலருக்கும் ஆச்சரியமளித்தது.

அதேபோல, ஜெயலலிதாவின் உடலுக்குப் பின்பாக சசிகலாவின் அண்ணன் மகனான டிவி மகாதேவன் நின்றுகொண்டிருந்தார்.

இது தவிர, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, அவரது பிள்ளைகளான விவேக், பிரியா, சசிகலாவின் அண்ணன் மகன் சுந்தரவதனத்தின் மகள் பிரபா, அவரது கணவர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்டவர்களையும் பிரதானமாக அங்கே காணமுடிந்தது.

இவர்களில் பலரும் பல்வேறு காலகட்டங்களில் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 டிசம்பரில் தனக்கு எதிராக சசிகலாவின் குடும்பத்தினர் சில முயற்சிகளில் ஈடுபடுவதாகக் கருதிய ஜெயலலிதா அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.

சசிகலாவை கட்சியிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு அவரது அண்ணன் திவாகரன் கைதுசெய்யப்பட்டார். வி. மகாதேவனது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.

sasi

ஆனால் பின்னர் சசிகலா தனது தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்தார்.

 

இதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே சசிகலாவின் கணவர் நடராஜன் அதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். வழக்குகள் தொடரப்பட்டு, அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் மீதெல்லாம்கூட வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் சசிகலாவின் உறவினர்கள் தென்பட்டது கட்சிக்கு உள்ளும் வெளியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிடம் பேசிய சசிகலாவின் நடராஜன், எம்.ஜி.ஆர். இறந்த பிறகு யார் என்பதை முடிவுசெய்யும் இடத்தில் தாங்கள் இருந்ததாகவும் அந்தத் தகுதி ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்று கண்டறிந்ததாகவும் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆரின் கடைசி தொண்டன் இருக்கும் வரை கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவின் சட்டமன்றத் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் தலைமைப் பதவி குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில், சசிகலாவின் கணவரான நடராஜன் தெரிவித்த இந்தக் கருத்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

sasi1

அதிமுகவை கட்டுப்பாட்டில் வைக்க பாஜக விரும்புமா ?

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை, சசிகலா தனியாக எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்றதில்லை. ஆனால், மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு அஞ்சலி செலுத்த சசிகலா நேரில் வந்தார். ஆனால், இதனை வைத்து மட்டும் சசிகலா கட்சியின் முகமாக மாறுவார் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

“தற்போதைய சூழலில் கட்சிக்குள் சசிகலாவின் ஆதிக்கத்திற்கு எந்த சவாலும் கிடையாது. தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தன்னை கட்சிக்குள் உறுதிப்படுத்திக்கொள்ள முயல்வாரா என்பது பதில் இல்லாத கேள்வி” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி.

மாநிலங்களவையில் அதிமுகவுக்கு உள்ள 13 இடங்களின் ஆதரவு ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எப்போதும் தேவைப்படும். அதனால், அதிமுகவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க மத்தியில் ஆளும் பா.ஜகவும் தொடர்ந்து முயற்சி செய்யும்.

modi1இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 50 இடங்களை வைத்திருப்பதோடு சட்டமன்றத்தில் 134 இடங்களுடன் ஆட்சியிலும் இருக்கும் அதிமுகவை இப்போதைக்குக் கட்டுப்படுத்துவது யார் என்பது இதுவரை தெளிவாகவில்லை. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு போன்றவை எப்போது கூடும் என்ற அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு யார் வாரிசு, அதிமுகவை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை.

நன்றி -பிபிசி

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *