இந்தியா பிரதான செய்திகள்

சென்னையில் வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட 90 கோடி ரூபாய், 100 கிலோ தங்கம்

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 90 கோடி ரூபாய் அளவுக்குப் பணமும் 100 கிலோ அளவுக்குத் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ருபாய் நோட்டுகள் (கோப்புப்படம்)

சென்னையில் தியாகராய நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவருடைய கூட்டாளியான ஸ்ரீநிவாச ரெட்டி, பிரேம் ஆகியோருக்குச் சொந்தமான 8 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.

கைப்பற்றப்பட்ட 90 கோடி ரூபாய் பணத்தில், 80 கோடி ரூபாய் அளவுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளும் மீதமுள்ள பத்து கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகளுமாக கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ அளவிலான தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் அறையில் இருந்து மட்டும் 70 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இவர்களில் பிரேம் என்பவர் செல்லாமல் ஆக்கப்பட்ட நோட்டுகளுக்குப் பதிலாக தங்கத்தை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. அவரைப் பின்தொடர்ந்தே சேகர் ரெட்டி, ஸ்ரீநிவாச ரெட்டி ஆகியோர் வருமான வரித்துறையின் கண்காணிப்பிற்குள் வந்தனர்.

புதிய 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்வளவு பணம் புதிய ரூபாய் நோட்டுகளாக எப்படி கிடைத்தது என்ற விசாரணையிலும் வருமானவரித்துறை இறங்கியிருக்கிறது

BBC

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *