Home இலங்கை அரசுக்கு உறைக்குமா தமிழ் அரசியல் கைதிகளின் அவலம்? – செல்வரட்னம் சிறிதரன்:-

அரசுக்கு உறைக்குமா தமிழ் அரசியல் கைதிகளின் அவலம்? – செல்வரட்னம் சிறிதரன்:-

by admin


நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது முடிவின்றி நீண்டு சென்று கொண்டிருக்கின்றது. தேசிய பாதுகாப்புக்குக் குந்தகமான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே அதிகமாக அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இந்தக் கைதிகளின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர்க,ளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பானது பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்;தியே, அந்த அமைப்புக்கு எதிராக அரசாங்கத்தினால் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த இராணுவ நடவடிக்கை பின்னர் இரு நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற ஒரு பெரும் யுத்தமாகப் பின்னர் பரிணமித்திருந்ததை எல்லோரும் அறிவர்.
இந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது, விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலே போயிருக்கின்றது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தவர்கள் அனைவரும் – ஒரு நாள் இணைந்திருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இராணுவத்திடம் சரணடைய வேண்டும்.

அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக யுத்தம் முடிவடைந்து, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்தவர்கள் மத்தியில் ஒலிபெருக்கிகள் ஊடாக அறிவித்திருந்தது.

இந்த அறிவித்தலை ஏற்று ஆயிரக்கணக்கான போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் 11 ஆயிரம் பேர் இராணுவ புலனாய்வு விசாரணைகள் மற்றும் ஒரு சிலர் நீதிமன்ற விசாரணைகளின் இராணுவத்தினரால்; புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.

இவர்களி;ல் பெரும்பாலானாவர்கள் விடுதலைப்புலிகள் அமை;பில் முழுநேர உறுப்பினர்களாக இருந்தவர்கள். ஏனையோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் காவல்துறை மற்றும், பல்வேறு சமூகச் செயற்பாட்டு அமைப்புக்களிலும் பணி புரிந்தவர்களாவர்.

இவர்கள் இராணுவத்தின் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டபோதும்சரி, அதன் பின்னர் அவர்கள் வைபவ ரீதியான அரச நிகழ்வுகளில் ஜனாதிபதியினாலும், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், இராணுவ உயரதிகாரிகளினாலும் விடுதலை செய்யப்பட்டபோது, தென்னிலங்கையில் உள்ள எந்தவொரு பௌத்த சிங்கள தீவிரவாத அமைப்புக்களும் அல்லது அவற்றைச் சேர்ந்தவர்களும் எந்தவிதமான எதிர்ப்புகளையும் வெளியிடவில்லை.

ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அல்லது கடத்திச் செல்லப்பட்டு, உரிய விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன் வைக்கப்பட்டு வந்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் போக்கிலும் மாற்றமில்லை
தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் எத்தனையோ தடவைகள் உணவை ஒறுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தப் போராட்டங்களின்போது, தமிழ் அரசியல் தலைவர்களும், அதே போன்று சிறைச்சாலைகளுக்ககு பொறுப்பான அமைச்சர்களும், முக்கியஸ்தர்களும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு விரைவில்; முடிவு காணப்படும் என உறுதியளித்திருந்த போதிலும், பிரச்சினைக்கு இன்னுமே தீர்வு காணப்படவில்லை.

ஆ.ட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசாhங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மனிதாபிபமானத்துடன் நடந்து கொள்ளும் என பலரும் எதிர்பார்த்தார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றிப் பெருமிதத்தில் தலைகால் தெரியாத வகையில் திளைத்திருந்த முன்னைய அரசாங்கமே விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 11 ஆயிரம் பேரை புனர்வாழ்வுப் பயிற்சியளித்து விடுதலை செய்திருந்தது.

ஆனால் சிறைச்சாலைகளில் வாடிய தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அவர்களை வேண்டும் என்றே பழிவாங்குவதற்காகச் செயற்படுகின்றதோ என்று பலரும் சந்தேகிக்கும் வகையில் அவர்களை விடுதலை செய்வதாகப் போக்கு காட்டி பிரச்சினையை இழுத்தடித்துக் கொண்டிருந்தது.

முன்னைய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டிருந்தவர்களைப் போலவே மிகுந்த ஆர்வத்துடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அதனையொட்டி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சிறைச்சாலைகளுக்கு உள்ளே இருந்த நிலையிலும் பாடுபட்டார்கள்.

ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் ஊடாக உறுதியளித்திருந்தார்.

எழுத்து மூலமாக வழங்கப்பட்ட இந்த உறுதிமொழியும் காற்றில் பறக்கவிடப்பட்டு, கடந்த அரசாங்கத்தைப் போலவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் உறுதியான செயற்பாடு எதனையும் புதிய அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை.

மாறாக கண்துடைப்பு நடவடிக்கையாக சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்களே தவிர, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு முழுமையான ஒரு தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ இது வரையில் முன்வரவில்லை.

பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகள அமைப்பின் முழு நேர உறுப்பினர்களுக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்ட பின்னரும்கூட, பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற மனிதாபிமானச் சிந்தனை வரப்பெறாதவர்களாக புதிய அரசாங்கத்தின் தலைவர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவரக்ளை விடுதலை செய்வதன் மூலம் புதிய அரசாங்கத்திற்கு சிங்கள பௌத்த தீவிர அரசியல்வாதிகளினால், அரசியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று ஒரு நொண்டிச்சாட்டு முன்வைக்கப்படுவதைத் தவிர வேறு, தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் எதுவும் கூறப்படவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முற்றுமுழுதான செயற்பாடுகளைத் திரை மறைவில் மேற்கொண்டதுடன், தொடர்ந்து ஆதரவளித்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினாலும்கூட, தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கத்தை மனிதாபிமான ரீதியில் செயற்படுவதற்குத் தூண்ட முடியாமலும், அதற்குரிய அழுத்தத்தைக் கொடுத்து ஆக்கபூர்வமான செயல்வடிவத்தை ஏற்படுத்த முடியாமலும் இருப்பது மிகவும் கவலைக்குரியது. கவலைக்குரியது மட்டுமல்ல. கண்டனத்திற்கும் உரியதாகும்.
இப்போதும்கூட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மையான விடயங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் தொடர்பில் சரியான பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றார்கள்.

புதிய கோரிக்கைகள்

இந்தப் பின்னணியில்தான், தமிழ் அரசியல் கைதிகளும் அவர்களுடைய விடுதலைக்கான செயற்பாட்டாளர்களும் புதிதாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள்.

இந்தக் கோரிக்கைகளை அசாங்கம் நிறைவேற்றுவதற்குத் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரியிருக்கின்றார்கள்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கென புதிய மெகசின் சிறைச்சாலையில் தனியான மருத்துவமனை வசதி செய்யப்பட வேண்டும்

மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும்போது தமிழ் அரசியல் கைதிகளும் ஏனைய கைதிகளும் உடனடியாக, கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

சிறைக் கைதிகளுக்கு உரிய நோயாளர் பராமரிப்பு வசதிகளையும், சரியான வைத்திய வசதிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும்

– என்ற இந்த மூன்றுகோரிக்கைகளுமே இப்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

நோயாளர்களாக உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்லாமல் ஏனைய கைதிகளுக்கும் கூட சிறைச்சாலைகளில் உரிய மருத்துவ வசதிகள் அளிக்கப்படுவதில்லை என்றும், அவர்களைப் பராமரிக்கின்ற அல்லது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்ற சிறைச்சாலை மருத்துவர்கள் அவர்களுக்கு மேல் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கும் போது, அத்தகைய சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்றும், அவ்வாறு சிகிச்சை அளிப்பதற்காக நோயாளிகளான கைதிகளை தேசிய வைத்தியசாலைக்கோ அல்லது அருகில் உள்ள பொது மருத்துவமனைகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகள் அனுப்பி வைப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு உரிய மேல் சிகிச்சை வழங்கப்படாத காரணத்தினாலேயே பல தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்லாமல் ஏனைய பல கைதிகளும் மனிதாபிமானமற்ற முறையில் மரணமடைய நேர்ந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் மனித உரிமை அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

சிறைச்சாலை அதிகாரிகள் மீது இவ்வாறான குற்றச்சாட்டு:க்கள் பகிரங்கமாக முன் வைக்கப்படுதவற்கு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நோயாளியாகிய தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவராகிய 43 வயதுடைய வேலாயுதம் வரதராஜன் என்ற கைதி மீது வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற தாக்குதல்களும், அவ்வாறு தாக்கியதுடன் அவரை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுமே காரணமாகியிருக்கின்றன.

நடந்ததென்ன?

புதிய மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேலாயுதம் வரதராஜன் கடந்த 17 ஆம் திகதி வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகி ஐந்து நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்து அவருடைய உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அந்த சிறைச்சாலை அதிகாரிகள் அவரை 22 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு அவருடைய நோய்வாய்ப்பட்ட நிலையையும் கவனத்திற் கொள்ளாமல் அவரை அங்கிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சித்திரவதை செய்யும் நோக்கத்தில் தாக்கியிருக்கின்றார்.

மனிதாபிமானமற்ற இந்தச் செயல் குறித்து அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ நிர்மலநாதன் சிறைச்சாலைகள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

அதேவேளை இந்த கைதி மீதான தாக்குதல் குறித்து அறிந்த மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் 24 ஆம் திகதி திங்கட்கிழமை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார்கள்.

அந்த அறிக்கையில் வரதராஜனுக்கு என்ன நடந்தது, அந்த அரசியல் கைதி என்ன வகையில் நடத்தப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் தெளிவாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

வேலாயுதம் வரதராஜன் தண்டனை பெற்று, அதற்கெதிராக மேன் முறையீடு செய்துள்ள ஓர் அரசியல் கைதியாவார். அவருடைய மேன்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கின்றது. அவர் ஓர் இருதய நோயாளி. அது மட்டுமல்லாமல் உயர் குருதி அமுக்கத்தினாலும் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியாவார்.

மகஸின் சிறைச்சாலையில் நோய்வாய்ப்படுகின்ற கைதிகளை அங்குள்ள அதிகாரிகள் சிகிச்சைக்காக வெளியில் அனுப்புவதற்கு விரும்புவதில்லை.

மகஸின் சிறைச்சாலை கைதிகளுக்கும் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கும் என வெலிக்கடை சிறைச்சாலையிலேயே கைதிகளுக்கான சிறைச்சாலை மருத்துவ மனை செயற்பட்டு வருகின்றது. மகஸின் சிறையில் நோய்வாய்ப்படுகின்ற நோயாளிகள் முதலில் வெலிக்கடை சிறைச்சாலைக்கே அனுப்பப்பட வேண்டும்.

அவசிமேற்படகின்ற போது, அங்குள்ள வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைவாக அவர்கள் மேல் சிகிச்சைக்காக கொழும்பு பொரல்லையில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இதுதான் சிறைச்சாலை திணைக்களத்தின் நடைமுறை.
இந்த நடைமுறைக்கு அமைவாக மகஸின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் நோயாளிகளாகின்ற கைதிகள் விடயத்தில் நடந்து கொள்வதில்லை.

நோய்வாய்ப்படுகின்ற கைதிகளை மகஸின் சிறைச்சாலையிலேயே வைத்திருப்பதில் அங்குள்ள அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதே நடைமுறையாக இருந்து வருகின்றது.

மகஸினில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் செல்கின்ற கைதிகள் அங்கு பெரும் கஸ்டங்களை அனுபவிக்க வேண்டும். சித்திரவதைகளுக்கும் சிறை அதிகாரிகளின் கொடுமைகளுக்கும் ஆளாக நேரிடும் என்பது தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்லாமல் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கின்ற ஏனைய கைதிகளினதும் நீண்ட கால அனுபவமாகும்.

வைரஸ் காய்ச்சலினால் ஐந்து நாட்களாக அவதிப்பட்ட போதிலும், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் நிலைமையை நன்கு அறிந்திருந்த வரதராஜன் அங்கு செல்வதற்கு விரும்பவில்லை.

ஆயினும் அவரக்கு நோய் கடுமையாக இருந்ததனால் 22 ஆம் திகதி அதிகாரிகள் அவரை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பியிருந்தனர். அன்று காலை 9 மணிக்கு அங்கு சென்றடைந்த அவருக்கு சிகிச்சையளித்து, மருந்து கொடுக்கப்பட்டு வைத்தியசாலை விடுதியில் உள்ள படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். காய்ச்சலின் தாக்கம் காரணமாக அசைய முடியாத நிலையில் அவர் செயலிழந்து படுக்கையில் ஓய்ந்து கிடந்தார்.

சிறைக்கூட்டு வாசம்

அன்று நண்பகல் 12.30 மணியில் இருந்து 1.30 வரையிலான நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் நோயாளர்களின் தொகையை சரிபார்த்து எண்ணிக்கை எடுத்த போது, அங்கு வருகை தந்த சமன் என்ற சிறைச்சாலை அதிகாரி, வரதராஜனை அங்கிருந்து கடுங்குற்றம் இழைத்தவர்கள், மற்றும் நீண்டகால தண்டனை அனுபவிக்கின்ற தண்டனைக் கைதிகளை அடைத்து வைக்கின்ற கூட்டுக்குள் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கின்றார்.

ஆயினும் தான் அங்கு செல்லவில்லை என்றும் தன்னை வைத்தியரே சிகிச்சைக்காக நோயாளர் விடுதியில் சாதாரண சிறைக் கைதிகள் உள்ள இடத்தில் இருக்கச் செய்திருக்கின்றார் என்று வரதராஜன் அந்த அதிகாரியிடம் கூறியிருக்கின்றார்.

அதனைக் கேட்டு ஆத்திரமுற்ற அந்த அதிகாரி தான் சொன்னதையே செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், நோயின் கடுமை காரணமாக அசையக் கூட முடியாதிருந்த வரதராஜனை மோசமான வார்த்தைகளினால் சிங்களத்தில் மிக அசிங்கமாகத் திட்டியதுடன், முழங்காலில் இருக்குமாறு நிர்ப்பந்தித்து, அவருடைய தோளில் குண்டாந்தடியினால் தாக்கியிருக்கின்றார். சிறைச்சாலைக்குப் பொறுப்பான அதிகாரி வரும் வரையில் அவரை, அந்த அதிகாரி முழங்காலில் இருக்கச் செய்திருக்கின்றார்.

அங்கு வந்த பொறுப்பதிகாரியும் வரதராஜனின் நிலைமையைக் கவனத்திற் கொள்ளாமல் அவரை சிறைக்கூட்டுக்குள் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கின்றார்.

அதற்கு அவர் வைத்தியரின் கவனிப்பில் இருப்பதாகத் தெரிவித்த வரதராஜனை மோசமான சிங்கள வார்த்தைகளில் திட்டியதுடன், பலவந்தமாக அவரை சிறைக்கூட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கின்றார்.

நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வரதராஜனுக்கு அந்த சிறைக்கூட்டில் கட்டிலோ விரிப்போ எதுவும் வழங்கப்படவில்லை. வெறும் கட்டாந்தரையில் அந்த அதிகாரிகள் அவரைக் கிடக்கச் செய்திருந்தார்கள்.
அந்த சிறைக்கூட்டில் போடப்பட்டிருந்த அவருக்கு அன்று பகலும், இரவும் எந்தவிதமான மருந்தும் வழங்கப்படவில்லை.

மறுநாள் அவரைப் பார்வையிட்ட பெண் வைத்தியரிடம் கெஞ்சிக் கூத்தாடிய வரதராஜன் மீண்டும் மகஸின் சிறைச்சாலைக்கே திரும்பியிjருந்தார். அவரை அந்த நிலையில் மகஸின் சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று அந்த வைத்தியர் கூறிய போதிலும், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளின் கொடுமையைத் தன்னால் தாங்க முடியாது. தனக்கு என்ன நேர்ந்தாலும், அதற்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததன் பின்னர், அவருடைய இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு அந்த வைத்தியர் வரதராஜனை மகஸின் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்திருந்தால் தனது உயிருக்கே ஆபத்து நேரிட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே வதராஜன் மகஸின் சிறைக்குத் திரும்பிச் சென்றுள்ளார். மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தினரின் விசாரணைகளில் பல சிறைக்கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதனாலும், அவர்களுக்கு உரிய வைத்திய வசதிகள் அளிக்கப்படாத காரணத்தினாலும் மரணத்தைத் தழுவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.

வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவ மனைக்குப் பொறுப்பான அதிகாரியின் உத்தரவுகளையும், செயற்பாடுகளையும் மகஸின் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியினால்கூட மீற முடியாதாம்.

அந்த மருத்துவ மனைக்குப் பொறுப்பான அதிகாரியின் அதிகாரம் அங்கு கொடிகட்டிப் பறக்கின்றது என்பதும் இந்த மனித உரிமை அமைப்பின் சிறைச்சாலை விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அரசும் நீதித்துறையும் கவனம் செலுத்த வேண்டும்

நாட்டில் நல்லாட்சியை நிறுவி, ஜனநாயகத்திற்குப் புத்துயிர் அளித்துள்ள மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்லாமல் ஏனைய கைதிகளும் மனிதாபிமானமற்ற முiநியல் நடத்தப்படுகின்ற நடைமுறைக்கு முற்றுப்புள்ளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனவிரோதப் போக்குடன் செயற்படுகின்ற சிறைச்சாலை அதிகாரிகளின் கொடுமைகளுக்கு தமிழ் அரசியல் கைதிகள் பலர் ஆளாகியிருக்கின்றனர். அவர்களின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் சித்திரவதைகளினால் அவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருகின்றார்கள். அதற்கு சாட்சியாக தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன், டெல்றொக்சன் போன்றோரின் மரணங்களும், அந்த மரணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட (கேலிக்கூத்தான) மரண விசாரணைகளும் அவற்றின் முடிவுகளும் ஏற்கனவே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மீது பல்வேறு சந்தர்ப்பங்கிளல் நடத்தப்பட்ட தாக்குதல்களும், பின்னர் சிங்களக் கைதிகள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல்களும் இலங்கை சிறைச்சாலை அதிகாரிகளின் கடமை உணர்வையும், கடமை நேர்மைத் தன்மையையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலையில் இப்போது வேலாயுதம் வரதராஜன் என்ற தண்டனை பெற்று அதற்கு எதிராக மேன்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் உள்ள தமிழ் அரசியல் கைதிக்கு நேர்ந்துள்ள நிலைமையை அரசும் நீதிமன்றங்களும் கவனத்திற் கொள்ள வேண்டும். சிறைச்சாலையில் உள்ளவர்களைப் பாதுகாப்பதே சிறைச்சாலை அதிகாரிகளின் கடமையாகும்.

அவர்களைத் தண்டிப்பதற்கோ, அவர்களைத் தாக்குவதற்கோ, அவர்களை சித்திரவதை செய்வதற்கோ, மனிதாபிமானமற்ற முறையில் அவர்களை நடத்துவதற்கோ அவர்களுக்கு எவரும் அதிகாரமளிக்கவில்லை.

இதனை நீதித்துறையும் அரச துறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புரிய வைத்து சிறைக்கைதிகளுக்கு நியாயத்தையும் நீதியையும் வழங்க முன்வர வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More