Home இலங்கை கறுப்பு ஜுலை கலவரத்தின் பின்னணி – கறுப்பு ஜுலை கலவரம் பாகம் – 02 – பி.மாணிக்கவாசகம்..

கறுப்பு ஜுலை கலவரத்தின் பின்னணி – கறுப்பு ஜுலை கலவரம் பாகம் – 02 – பி.மாணிக்கவாசகம்..

by admin

அது ஒரு வித்தியாசமான அரசியல் சூழல். தனிநாட்டுக்காகப் போராடப் புறப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மாவட்ட சபையை ஏற்றுக் கொள்ளத் தயாராகி இருந்த தருணம் அது.

தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி இருந்தது. தனிநாட்டை அடைவதற்கான முதல் படியாகவோ என்னவோ மாவட்ட மட்டத்தில் அதிகாரப் பரவலாக்கலுக்கான மாவட்ட சபை முறைமைக்கு தமிழ்த் தலைவர்கள் இணங்கி இருந்தனர். கூட்டணிக்கும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த ஓர் உடன்பாட்டுக்கமைய மாவட்ட அபிவிருத்தி சபைகளை அதிகாரப் பரவலாக்கலுக்காக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

மாவட்ட சபை என்பது கிட்டத்தட்ட நகரசபையைப் போன்றதோர் உள்ளுராட்சி நிர்வாக அலகு. சுயாட்சியிலான அரசியல் உரிமைகளுக்காக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வென்றிருந்த கூட்டணியை ஜே.ஆர்.ஜயவர்தன ஏதோ ஒரு வகையில் ஒப்புக்கொள்ளச் செய்திருந்தார்.

தனிநாட்டைப் பெற்றுக் கொடுப்போம் என்பதற்காகத் தமிழ் மக்கள் கூட்டணிக்கு வாக்களித்திருந்தார்கள். தமிழ்த் தரப்பின் இந்த நிலைப்பாட்டுக்காக ஆயுதமேந்திப் போராடுவதற்கு இளைஞர்கள் அப்போது போராட்ட களத்தில் குதித்திருந்தார்கள். அத்தகைய ஒரு நிலையில்தான் மாவட்ட சபைகளின் மூலம் அரசியல் தீர்வு என்ற அரசாங்கத்தின் நரித்தனமான நகர்வை தமிழ்த் தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இதனையடுத்து மாவட்ட சபை தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்ட கூட்டணித் தலைவர்களின் முடிவு மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு வகையில் இது ஓர் அரசியல் சீற்றமாகவும் அமைந்திருந்தது.

அத்தகையதோர் அரசியல் சூழலில் முக்கியமான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அது அரசியல் ரீதியானது அல்ல. நிர்வாக ரீதியானது. ஆனால் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

அப்போதைய ஜனாதிபதியின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், பிரபல சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் ஆகிய இருவரும் சிறந்த சிவில் நிர்வாக சேவையாளராகிய தேவநேசன் நேசையாவுடன் நடத்திய சந்திப்பு அது.

மறைமுக நிலையில் அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு. அதில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பிலான விடயங்கள் குறித்து பேசப்பட்டது. தமிழ் அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க முக்கிய விடயங்களும் அதில் அடங்கி இருந்தன எனலாம். .

மாவட்ட சபைகளை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கும் கூட்டணிக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதையடுத்து, கூட்டணியின் வேண்டுகோளுக்கிணங்க தேவநேசன் நேசையாவை யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக நியமித்து, மாவட்ட சபையின் நிர்வாகத்தை நாட்டின் ஏனைய சபைகளுக்கு முன்மாதிரியாகச் செயற்படச் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது.

இரகசியத் திட்டம்

அன்றைய அரசியல் சூழலில் வரப்போகின்ற அதிகாரப் பகிர்வு என்பது மாவட்ட மட்டத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செயற்பட்ட மாவட்ட அமைச்சரின் கைகளையே பலப்படுத்துவதாகவே அமையும். அமைச்சர் என்ற வகையில் அவர் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியதில்லை. ஜனாதிபதிக்கு பொறுப்பு கூறுபவராகவே அவர் இருந்தார். எனவே இந்த அதிகாரப் பகிர்வு என்பது தமிழ் மக்களைப் பொறுத்த அளவில் அர்த்தமற்றதாகவே இருக்கும் என்ற கருத்து இந்தப் பேச்சுக்களின்போது நிலவியது.

ஆனால் தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஆணையைப் பெற்றுள்ள பொதுத் தேர்தலின் பின்னரான அரசியல் போக்கில் தமிழ்த் தரப்புக்கும் சிங்களத் தரப்புக்கும் இடையில் அதிகார பகிர்வு அல்லது அரசியல் தீர்வு சார்ந்ததோர் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டிய அவசியம் அன்றைய அரசியல் சூழலில் எழுந்திருந்தது. இதனை அப்போதைய அரச உயர் மட்டம் மிகத் தீவிரமாக உணர்ந்திருந்தது.

தனிநாட்டுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டு தமிழ் அரசியல் தரப்பு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதேவேளை, அந்தத் தனிநாட்டுக்காகத் தமிழ் இளைஞர்கள் இரகசியமாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். அதற்கு எதிரான ஒரு நிலைமையும் அன்றைய அரசியல் களத்தில் உருவாகி இருந்ததாகக் அப்போது கருதப்பட்டது.

அதன்படி, குறிப்பாக அடையாளம் தெரியாத தரப்பு ஒன்றினால் இனப்படுகொலை சார்ந்த வன்முறை நிலைமையொன்றுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, அரச தலைவருக்குக் கிடைத்திருந்த தகவலையடுத்து, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த அதிகாரப் பகிர்வு உடன்பாடும், அதனைச் செற்படுத்த வேண்டியதும் அவசியம். அது மிகவும் அவசரமானது என அரச உயர் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, யாழ் மாவட்ட சபையைக் கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்றுச் செயற்படுவதற்கு தேவநேசன் நேசையா தெரிவு செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் அந்தச் சந்திப்பு நடைபெற்றிருந்தது. நிலைமைகளின் அவசியத்தை உணர்ந்து அவரும் அதற்கு உடன்பட்டிருந்தார்.

அரசுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்தச் சந்திப்பின் பின்னர் மாவட்ட சபைத் தேர்தலுக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் இடம்பெறத் தொடங்கி இருந்தன.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கான பயிற்சிகள், கடமைகளுக்கான நியதிகள் பற்றிய தெளிவூட்டல்கள் என்பன தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வழமையாக நடைபெறுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் காரியங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் சில துன்பகரமான சம்பவங்கள் நடந்தேறின.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் சீற்றமும்

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரசார நடவடிக்கைகள் சூடு பிடித்திருந்தன. இந்தத் தேர்தலில் எப்படியாவது ஐக்கிய தேசிய கட்சி வெற்றி அடைய வேண்டும். அதுவும் அமோக வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் ஜனாதிபதி ஜயவர்தன மிகவும் குறியாக இருந்தார்.

அந்த நேரத்தில் யாழ் அரசியல் வட்டாரங்களில் முக்கியமானவராகத் திகழ்ந்த அ.தியாகராஜாவை ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பாளராக நிறுத்தி இருந்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 1970 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தொகுதியில் தமிழரசுக் கட்சியின் அன்றைய அரசியல் தளபதியாகத் திகழ்ந்த அ.அமிர்தலிங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்ட தியாகராஜா வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருந்தார்.

நாடாளுமன்றத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒத்துழைத்த அவர் 1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக, தமிழ்த்தரப்பு அரசியல் நிலைப்பாட்டுக்கு முரணான வகையில், வாக்களித்திருந்தார். இத்தகைய அரசியல் பின்னணியைக் கொண்ட தியாகராஜா ஐக்கிய தேசிய கட்சியை யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதை தமிழ் இளைஞர்கள் விரும்பவில்லை.

இது குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட சபைத் தேர்தல் நெருங்கியிருந்த தருணம் அவர் ஆயுதந் தாங்கிய இளைஞர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தேர்தல் காலத்துக் கொலை யாழ்ப்பாணத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனையடுத்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் 1981 மே மாதம் 31 ஆம் திகதி மாலை யாழ் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொலிசார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பொலிசார் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.

ஏற்கனவே ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்களை அடக்கி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக விசேட இராணுவ படை அணியொன்று அனுப்பப்பட்டு யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்தலில் வெற்றிபெற்று யாழ்ப்பாணத்தில் நிலைபெறுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அடுத்ததாக பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழப்புக்கள் நேர்கின்றன என்ற ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த யாழ் நிலைமைகள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவை கோபமுறச் செய்திருந்தது.

யாழ்ப்பாணம் எரிந்தது

இத்தகைய பின்னணியில்தான் மே மாதம் 31 ஆம் திகதி நாச்சிமார் கோவிலடி கூட்டத்தில் பொலிசார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, அந்தப் பிரதேசத்தில் கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. வர்த்தக நிலையங்கள் வீடுகள் என்பவற்றில் தீவைப்புச் சம்பவமும் இடம்பெற்றது.

யாழ் தேர்தல் நிலைமைகளையொட்டி விசேடமாக அனுப்பப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பொலிசாரும் அவர்களுடன் வருகை தந்திருந்தவர்களும் நடத்திய வெறியாட்டத்தில் தமிழ் மக்களின் கல்வி, கலாசார, பண்பாட்டு நிலையமாகிய யாழ் நூலகம் அன்று நள்ளிரவளவில் எரியூட்டி அழிக்கப்பட்டது.

நூலகச் சூழலில் மட்டுமல்லாமல், யாழ்நகர வீதிகள், நகரின் சுற்றயல் பிரதேசங்கள் என்பவற்றிலும் வன்முறைத் தாக்குதல்களும் வர்த்தக நிலையங்கள் வீடுகளுக்கு எரியூட்டலும் இடம்பெற்றன. பொது மக்கள் பலர் கொல்லப்பட்;டனர். நூலகப் பிரதேசத்தில் வசித்த நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அவருடைய துணைவியாரும் காடையர்களின் தாக்குதல்களில் இருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பினர். ஆவரைத் தேடிச் சென்றவர்களினால் அவருடைய வீடு தீயிட்டு அழிக்கப்பட்டது. கட்டுக்கடங்காத இந்த நிலைமைகளினால் யாழ்ப்பாணமே தீப்பற்றி எரிந்தது.

இரவிரவாக சுவாலைவிட்டு எரிந்த நூலகத் தீயை அணைப்பதற்கு எவருமே முன்வரவில்லை. அப்போது அரசாங்க அதிபாராக இருந்த யோகேந்திரா துரைசாமி கடற்படையினருடன் தொடர்பு கொண்டு தீணை அணைப்பதற்கு முயற்சி செய்திருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்படை அதிகாரி ஒருவரை, தீயை அணைக்க முயற்சிக்க வேண்டாம் என உயர் மட்டத்தில் இருந்து அறிவுறுத்தலையடுத்து, அவர் திரும்பிச் சென்றார்.

யாழ்ப்பாணம் எங்கும் பரவியிருந்த இந்தத் திடீர் வன்முறை நிலைமைகளினால் அரசாங்க அதிபர் நிலைகுலைந்து போனார். என்ன நடக்கின்றது, என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாற நேர்ந்திருந்தது.

இந்த வன்முறைச் சூழலில்தான் ஜுன் மாதம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாவட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் எப்பாடுபட்டாவது யாழ் மாவட்ட சபையில் குறைந்;தது ஒரு ஆசனத்தையாவது ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்ற வேண்டும் என்று தீர்க்கமாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முடிவெடுத்திருந்தார்.

வாக்குத் திணிப்பு தேர்தலுக்கான தயாரிப்புக்கள்

தேர்தல் கால வழக்கப்படி, வாக்களிப்பு நிலையங்களை வாக்களிப்புக்குத் தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அதற்கமைய வாக்குப் பெட்டிகள், காகிதாதிகள் மற்றும் உரிய ஆளணிகளை பொலிசாரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகள் 3 ஆம் திகதி காலையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அந்த நேரம் திடீரென யாழ் கச்சேரிக்கு வருகை தந்த அரச உயரதிகாரிகள் தேர்தலுக்காகச் செய்யப்பட்டிருந்த நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். தேர்தல் நடவடிக்கை என்ற காரணத்தினால் தேர்தல் ஆணையாளரிடம் இருந்து பணிப்புரை வராமல் தமது பணிகளை நிறுத்த முடியாது என்று உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் அமைச்சரவையின் சிரேஸ்ட அமைச்சர்களான காமினி திசாநாயக்க மற்றும் சிறில் மத்தியு ஆகிய இருவரும் தமது அதிகாரிகள் அடங்கிய பரிவாரங்களுடன் வருகை தந்தனர். அவர்களுடைய வருகை தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த யாழ் செயலக அதிகாரிகளை வியப்படையவும் அதிர்ச்சி அடையும் செய்திருந்தது.

அமைச்சர்கள் இருவரும் வந்த வேகத்தில் ஏற்கனவே தேர்தல் கடமைகளுக்காகப் பயிற்றப்பட்டு தயாராக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கடமைக்கு அனுப்ப வேண்டாம் என உத்தரவிட்டனர். அவர்களுக்குப் பதிலாக கொழும்பு உட்பட நாட்டின் தென்பகுதிகளில் இருந்து தங்களுடன் வருகை தந்துள்ளவர்களையே வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்புமாறு பணித்தனர்.

தேர்தல் கடமைகளைச் சுட்டிக்காட்டி, நூற்றுக்கணக்கான பொலிசாரும் உயர் அதிகாரி ஒருவரின் பொறுப்பில் அமைச்சர்களுடன் யாழ்ப்பாணத்திற்கு விசேட உத்தரவுகளுக்குக் கீழ் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் வாக்களிப்பு நிலையங்களுக்கு அன்றைய தினம் காலை முதல் அனுப்பி வைக்கப்பட வேண்டிய அதிகாரிகள், ஊழியர்கள் வாக்குப் பெட்டிகளுடன் அன்று மாலை அளவிலேயே யாழ் செயலகத்தில் இருந்து புறப்பட்டனர். தேர்தல் கடமைகளுக்காக அமைச்சர்கள் அழைத்து வந்திருந்தவர்கள் மூக்கைப் பிடித்தால் வாயைத் திறக்கத் தெரியாத வகையில் தேர்தல் கடமைகள் குறித்து எதுவுமே அறியாதவர்களாக இருந்தனர்.

சிங்கள மொழியைத் தவிர ஆங்கிலமோ தமிழோ தெரியாத அவர்களே தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு அரசாங்க கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்குத் திணிப்புக்கு அவசியமான களநிலை உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான தேர்தல் பணிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்று யாழ் தேர்தல் திணைக்கள அதிகாரிகளும் அரச அதிபர் உள்ளிட்ட தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளும் திகைப்படைந்திருந்தனர். ஆனால் யாழ் மக்கள் யாழ்;ப்பாணத்தில் நடைபெற்ற அட்டூழியங்களினால் உள்ளுக்குள்ளேயே ஆத்திரமடைந்து அரசாங்கத்திற்குப் பாடம் புகட்டும் வகையில் வாக்களித்திருந்தனர்.

குழப்ப நிலைமையிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அரசுக்குச் சார்பான வாக்களிப்பு நிலையச் சூழலில் கட்டுக்கட்டாக வாக்குகள் பெட்டிகளில் திணிக்கப்பட்டன. வாக்குப் பெட்டிகளும் சில இடங்களில் மாற்றப்பட்டன. முறைகேடுகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் சில இடங்களில் வாக்குப் பெட்டிகளுக்கு என்ன நடந்தது என தெரியாத ஒரு குழப்ப நிலைமையும் உருவாகி இருந்தது. இதனால் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாகிய யாழ் அரசாங்க அதிபரும் தேர்தல் உதவி ஆணையாளரும் நிலைமைகளை தேர்தல் ஆணையாளருக்குத் தெளிவுபடுத்தி தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாதுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஆனால் அரச மட்டத்திலும், அரசியல் மட்டங்களிலும் இடம்பெற்ற கலந்தாலோசனைகள் வேண்டுகோள்கள், முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாவட்ட சபைகளை எப்படியாவது செயற்படச் செய்ய வேண்டும். தமிழ் மக்கள் அதனை ஏற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தேர்தலின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.
அந்த முடிவுகளின்படி, தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தது. ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அது தோல்வியைத் தழுவியிருந்தது.

அரசியல் உரிமைகளுக்கான தமிழ் மக்களின் கோரிக்கை ஐக்கிய தேசிய கட்சிக்கு விருப்புடையதாக இருக்கவில்லை. அந்த உரிமைக் குரலைத் தணித்து அடக்குவதிலேயே அது ஆர்வமாக கொண்டிருந்தது. அதுவே அதன் அரசியல் தேவையாகவும் இருந்தது.

தனிநாட்டுக்காகப் போராடுவதைத் தேர்தல் ஆணையாக முன்வைத்து 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றியை ஈட்டியிருந்தது. அந்தத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் யாழ் நிலைமைகள் அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை என்பதை அவர் நன்குணரந்திருந்தார்.

தனிநாட்டு கோரிக்கையை முதலீடாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் செய்வதையும் அத்தகைய போக்கில் அரசியல் கொண்டு செல்லப்படுவதையும் அவர் விரும்பவில்லை. அப்போது முளைவிட்டிருந்த தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி மறைமுகமாக முழு ஆதரவு வழங்கியிருந்ததாகவே அவர் கருதினார். அதனை ஆயுத முனையில் முறியடிப்பதற்காகவே விசேட இராணுவப் படையணி ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

‘வடக்கில் அழுத்தங்களைப் பிரயோகித்தால் தெற்கு மகிழ்ச்சியடையும்’

அதேவேளை அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் எழுச்சியை திசை திருப்பி முறியடிக்க வேண்டும். அவர்களின் உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். அதற்கான ஓர் அரசியல் உத்தியாகவே மாவட்ட சபை முறைமை என்ற அதிகாரப் பரவலாக்கல் தந்திரோபாயம் கடைப் பிடிக்கப்பட்டது.

மாவட்ட சபைத் தேர்தலின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியை தேர்தல் களத்தில் எதிர்கொண்டு முறியடித்து, வெற்றி பெறுவதுடன், அதன் ஊடாக மாவட்ட சபை நிர்வாகத்திற்குள் தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கல் வேட்கையை சிறைப்பிடித்து தக்க வைப்பது என்ற இருமுனை செயற்பாடுகளை அரசு கடைப்பிடித்திருந்தது.

ஆனால், எதிர்பார்த்த வகையில் ஆயுதப் போராட்டம் கட்டுக்கடங்கவில்லை. தனது வேட்பாளரையே தீர்த்துக்கட்டி ஐக்கிய தேசிய கட்சியை நேரடியாக ஆயுத மேந்திய தமிழ் இளைஞர்களின் மூலம் தமிழர் தரப்பு சீண்டியதாக அவர் கருதினார். அதனைத் தொடர்ந்து பொலிசார் மீதான தாக்குதலும் அரசாங்கத்தைப் பாதித்திருந்தது.

இவற்றுக்குப் பதிலடியாக இடம்பெற்ற யாழ்நகர வன்முறைகள் அரசுக்கு சாதகமாக அமையவில்லை. யாழ் நூலக எரிப்பு என்பது சர்வதேச அளவில் ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு பெரும் பாதகமான நிலைமயையே ஏற்படுத்தி இருந்தது. ஆயினும் ஜே.ஆர் துவண்டுவிடவில்லை. தமிழ்த்தரப்புக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.

அவருடைய மன உணர்வுகளை டெயிலி டெலிகிராவ் என்ற பிரித்தானிய நாளேட்டிற்க அவர் வழங்கிய செவ்வி புலப்படுத்துவதாக அநை;திருந்தது. கறுப்பு ஜுலை கலவரத்திற்கு முன்னர் ஜுலை 11 ஆம் திகதி அவர் அந்த செவ்வியில் தெரிவித்திருந்த கருத்து பிரசுரமாகி இருந்தது.

‘யாழ்ப்பாணத்து மக்களின் அபிப்பிராயங்கள் குறித்து நான் அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை. நாங்கள் அவர்களைப் பற்றியோ அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அவர்களுடைய கருத்தக்கள் பற்றியோ நாங்கள் கவலைப்பட முடியாது. வடக்கில் எந்த அளவுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றோமோ, அந்த அளவுக்கு இங்கே சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் தமிழர்களை நான் பட்டினி போட்டாலும் சிங்கள மக்கள் சந்தோஷமடைவார்கள்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய நிலைமையின் பின்னணியில்தான் கறுப்பு ஜுலை கலவரம் பரவலாக பல இடங்களிலும் ஒரே நேரத்தில் மிக மோசமான முறையில் அரங்கேற்றப்பட்டிருந்தது.

கறுப்பு ஜுலை கலவரத்தின் பின்னணி
கறுப்பு ஜுலை கலவரம் பாகம் – 02

பி.மாணிக்கவாசகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More