Home அரசியல் கேள்விக்குறியாகும் தீர்வு -செல்வரட்னம் சிறிதரன்

கேள்விக்குறியாகும் தீர்வு -செல்வரட்னம் சிறிதரன்

by admin
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் அடுத்த மாதம் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவைகள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அறிக்கைகளை அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தற்குழு ஆய்வு செய்து, புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஜனவரி மாதம் 9, 10 ஆம் திகதிகளில் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து, புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் பெரும்பாலும் வெளிப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது.
இருப்பினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்று வெளியிடப்படும் என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆயினும் அந்த இடைக்கால அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்றும், புதிய அரசிலயலமைப்பின் உள்ளடக்கம் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுவதும்கூட தாமதமடையலாம் என்றும்  தகவல்கள் கசிந்திருக்கின்றன.
புதிய அரசியலமைப்பு, ஒற்றையாட்சியையே பிரதானமாகக் கொண்டிருக்கும். அதில் பௌத்த மதத்திற்கு இப்போது உள்ளவாறே முதன்மை இடமளிக்கப்பட்டிருக்கும் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
இதனால், தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள வகையில் இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையில் ஓர் அரசியல் தீர்வைத் தரவல்லதாக புதிய அரசியலமைப்பு அமைந்திருக்குமா என்பது கேள்விக்குறியாகியிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழர் தரப்பு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இந்த விடயத்தில் மிகுந்த
நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஊட்டி வந்துள்ளது.
அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம். இதனைக் கைவிட்டால் இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் மக்களுக்குக் கூறி வருகின்றது.
அரச தரப்பினரும் அரசியல் தீர்வு காண்பதற்கு இப்போதுள்ளதைவிட நல்லதொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்க மாட்டாது என்ற நிலைப்பாட்டிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கிய வகையிலான ஒரு தீர்வை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று கூறும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த முயற்சிகள் என்ன என்பதுபற்றிய துல்லியமான விபரங்களை வெளியிடவில்லை.
வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையிலான சமஸ்டி முறையிலானதோர் அரசியல் தீர்வையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இந்த விடயங்கள் குறித்து மக்கள் மத்தியில் கூட்டமைப்பினர் அடித்துக் கூறி வந்துள்ளனர். இத்தகைய தீர்வு இல்லையேல் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர்கள்; தெரிவித்திருக்கின்றனர். .
நல்லாட்சியை உருவாக்குவதற்கான பொதுத் தேர்தலின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் இந்த விடயங்களையே வலியுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையிலேயே ஆணை பெற்றிருக்கின்றது. இதனை கூட்டமைப்பு அடிக்கடி நினைவூட்டி வருவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
தீர்வு குறித்த இறுதி முடிவு
புதிய அரசியலமைப்பின் ஊடாக ஓர் அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றால், எத்தகைய அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பதற்கான உத்தேச முன்மொழிவுகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் வலியுறுத்தப்பட்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை..
ஆயினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு எதனையும் தமிழ் மக்கள் மத்தியில் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. தீர்வு தொடர்பான ஆலோசனைகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுவிட்டன என்ற ரீதியிலேயே, கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதேநேரம், தமது நிலைப்பாடு குறித்து 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான  அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றோம். அதற்கான ஆணையை நாங்கள் மக்களிடம் பெற்றிருக்கின்றோம். அதன் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, அரசியல் தீர்வுக்கான மொழிவுகளை முன் வைக்க  வேண்டும் என்று கோரியவர்களுக்குப் பதிலளித்து வந்தது.
இந்தச் சூழ்நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாகி, தமிழ் மக்களின் பங்களிப்புடன் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகளை முன் வைத்திருந்தது. இந்த முன்மொழிவுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிடமும் கையளிக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆயினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு .இந்த முன்மொழிவுகள் பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.
ஆனால், அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகள் பற்றி கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அரசியல் தீர்வுக்குரிய முன்மொழிவுகளை யாரும் முன் வைக்கலாம். ஆனால் இறுதி முடிவை நானே எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். அரசியல் தீர்வு தொடர்பில் அவர் இறுதியாக என்ன முடிவெடுத்திருக்கின்றார் என்பது இன்னும் தெரியவில்லை.
ஆனாலும் அரசியல் தீர்வு பற்றி பேசப்படும்போதெல்லாம், வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறையாண்மை, சமஸ்டி என்ற விடயங்கள் இயல்பாகவே அவரிடமிருந்து வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
அத்துடன், அரசியல் தீர்வு காண்பதற்காக ஏற்பட்டுள்ள இந்த  நல்ல சந்தர்ப்பத்தைக் குழப்பிவிடக்கூடாது, தென்பகுதியின் கடும் போக்காளர்களாகிய மகிந்த ராஜபக்ச அணியினரை உசுப்பிவிடக் கூடிய வகையில் கருமங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது.
பொறுமை காக்க வேண்டும் என்று ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களிடமும் தமிழ் மக்களிடமும் அவர் கோருவதற்குத் தவறுவதில்லை.
இத்தகைய பின்னணியில்தான், ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசியலமைப்வு உருவாக்கப்படவுள்ளது என்ற கருத்து வெளியாகியிருக்கின்றது. அந்த அனுமானம் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக வயிற்றில் புளியைக் கரைத்ததற்கு ஒப்பான உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஏதாவது ஒரு தீர்வை எப்படியாவது பெற்றுவிட வேண்டும்…
ஒற்றையாட்சி முறையைக் கைவிடுவதற்குரிய சமிக்ஞைகள் புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற முயற்சிகள், பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்களில் இதுவரையில் காணப்படவில்லை.
சுயாட்சி, சமஸ்டி என்ற சொற்தொடர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையே புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல்கள், விவாதங்களின் போது முன்வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களிடமும் இதனை வலியுறுத்தி இருந்ததை விசேடமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது.
அரசியல் ரீதியான சொற்தொடர்களில் அல்லது சொற்களில் கவனம் செலுத்துவதிலும்பார்க்க, பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணலாம் என்பது பற்றியே கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டிருந்ததைக் காண முடிகின்றது.
பிரச்சினைக்கு என்ன தீர்வு அல்லது எத்தகைய தீர்வைக் காணலாம் என்ற தீர்மானத்தின் அடிப்படையிலல்லாமல், எந்த வகையிலாவது தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும் என்ற வகையிலேயே, அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளில் வழிகாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பல தசாப்தங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு இப்படித்தான் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையிலாhனதோர் நிலைப்பாடில்லாமல், எப்படியும் தீர்வு காணலாம் என்று செயற்படுவதன் மூலம், சரியான – நிரந்தரமான ஒரு தீர்வை எட்ட முடியும் என்று கூறுவதற்கில்லை.
அரச தரப்பில் குறிப்பாக பேரினவாத அரசியல் தரப்பின் உணர்வுகளை சீண்டிவிட்டுவிடக் கூடாது. அவர்களை உணர்ச்சி வசப்படச் செய்தால், நிலைமைகள் மோசமாகிவிடும். ஆகவே, அவர்களுக்கு நோகாத வகையில் செயற்பட்டு ஒரு தீர்வை எட்டிவிட வேண்டும் என்ற வகையிலான முயற்சிகளிலேயே தமிழ் அரசியல் தலைமை செயற்பட்டு வருவதைக் காண முடிகின்றது.
இந்த நிலைப்பாடானது, நியாயமாக தமிழ் மக்களுக்கு – சிறுபான்மை இன மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்கின்ற அரசியல் நகர்வைவிட, அவர்களின் மனம் கோணாமல் பேச்சுக்கள் நடத்தி, அவர்களிடம் இருந்து எப்படியாவது ஒரு தீர்வைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்திலான போக்காகவே தோன்றுகின்றது.
முப்பது வருடகால சாத்வீகப் பேரராட்டத்தையும், அந்தப் போராட்டத்தில் அடைந்த தோல்வியையடுத்து, இன்னுமொரு முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு, பல்வேறு பின்னடைவுகளையும், இழப்புக்களையும் சந்தித்துள்ள மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்வை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற போக்கில் எட்டப்படுகின்ற தீர்வு திருப்தியளிக்கத்தக்கதாக அமைய முடியாது. அத்தகைய தீர்வை, நியாயமான தீர்வாகக் கருதவோ ஏற்றுக்கொள்ளவோ எவரும் முன்வரமாட்டார்கள்.
இதனைக் குறிப்பிடுதவற்குக் காரணம் உண்டு. அரசியல் தீர்வில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டியது அடிப்படையில் மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். இந்த வகையிலேயே அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களிடம் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான ஓர் அரச நிர்வாகக் கட்டமைப்பே 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த மாகாண அரசு நியாயமான ஒரு காலப்பகுதியில் அரசோச்சி வந்துள்ளது. அத்தகைய அரச நிர்வாகச்செயற்பாடுகளை மேலும் முன்னேற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொண்டிருந்ன என்றும் கூறலாம்.
அத்தகைய ஒரு நிலைமையிலேயே நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் பின்னர் இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் துண்டாடி, வேவ்வேறு மாகாணங்களாக்கி, இரண்டு வௌ;வேறு மாகாண சபைகளும் உருவாக்கப்பட்டன.
‘வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை’
இந்த நிலையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த இணைப்புக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.
ஆனால் அந்த நிலைமை படிப்படியாக வளர்ச்சி பெற்று, வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடாது என்று பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு மாற்றம் அடைந்திருக்கின்றது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவான தரப்பும் முஸ்லிம் தரப்பில் இருக்கத்தான் செய்கின்றது.
சிறுபான்மையினராகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் நியாயமானதோர் அரசியல் உரிமை உடையவர்களாக இந்த நாட்டில் வாழ வேண்டுமானால், வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டியது அவசியமாகும். இதனை, அதன் அரசியல் தார்ப்பரியத்துடன் உண்மையாக உணர்ந்து செயற்படுகின்ற முஸ்லிம்களின் குரல்கள் சக்தி மிக்கதாக இல்லை என்பது துரதிஸ்டமாகும்.
இந்த நிலையில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும். அது அவசியமானது என கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து, கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் வடக்கு கிழக்கு இணைவு என்பது சாத்தியமற்றது என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார்.
வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ்லிம் மக்களுடன் பேசி வருகின்றோம். எனினும், யுத்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் அவர்களின் மனங்களில் காணப்படுகின்றன. அந்த உணர்வுகள் முஸ்லிம் மக்களிடமிருந்து களையப்படவேண்டும்.
இதனால் புதிய அரசியலமைப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கான பொறிமுறை முன்வைக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதே, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதென்பது கடினமான காரியமாக அரசியல் தரப்புக்களில் உணரப்பட்டிருந்தது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது வடக்கு கிழக்கு இணைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. எனவே, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு முக்கியமாக தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே வலுவானதோர் ஓர் இணக்கப்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் தேவை ஏற்கனவே உருவாகியிருந்தது.
ஆனால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்க காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் கல்லில் நார் உரிக்கின்ற காரியமாக இருந்ததென்னவோ உண்மைதான்.
ஆனால், அதேவேளை, தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இணைப்பு விடயத்தில் ஓர் இணக்கப்பாட்டையும் கருத்தொருமிப்பையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கப்படவில்லை என்றே கூற வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகப் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தன்னாட்சி கொண்ட சமஸ்டி முறையிலான தீர்வு குறித்து பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதேயொழிய, அத்தகைய தீர்வுக்குரிய தளத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
நிவாரணமுமில்லை அரசியல் ரீதியான ஆற்றுப்படுத்தலுமில்லை. 
கடந்த 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் விடுதலைப்புலிகளனால் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தார்கள். அதனால் ஏற்பட்ட பாதிப்பு மிக மிக மோசமானது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளைப் பொருத்தமட்டில் அது ஒரு சமூகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் இராஜதந்திர வியூக நடவடிக்கையாக இருந்திருக்கலாம்.
ஆனால் வடக்கையே தமது தாயகமாகக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களுக்கு அது, தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான அன்னியோன்னியமான உறவில் ஏற்பட்டதொரு மாறாத வடுவாக அமைந்துவிட்டது.
அதேநேரத்தில் கிழக்கில் பல்வேறு புறக்காரணிகளினாலும், பல்வேறு அரசியல் தூண்டுதல்களினாலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே, ஏற்பட்டிருந்த மோதல்களும், இரத்தம் சிந்திய கசப்பான நிகழ்வுகளுமே இரு தர்பபினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதற்கு வழிகோலியிருந்தன.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்திற்கு சரியான நிவாரணமோ அரசியல் மற்றும் சமூக ரீதியான ஆற்றுப்படுத்தலோ கிடைக்காமையும், கிழக்கு மாகாணத்தில் இரு சமூகங்களிடையேயும் ஏற்பட்டிருந்த முரண்பாடான நிலைமைகள் உரிய முறையில் தீர்க்கப்படாமையும், வடக்கு கிழக்கு இணைப்புக்குக் குந்தகமாகியிருக்கின்றன.
இந்த குந்தகமான நிலைமையை சீர் செய்வதற்கு தமிழ் அரசியல் தரப்பில் உரிய கவனம் செலுத்தப்படாததைப் போலவே முஸ்லிம் தரப்பிலிருந்தும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூற வேண்டும்.
இத்தகைய பின்னணியில்தான் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதில் இரு சமூகங்களிடையேயும் சரியான அரசியல் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இல்லாத நிலையில் சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன.
அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற அதேநேரத்தில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் முஸ்லிம் தாயகக் கோட்பாடு என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்தவதற்கு தீர்க்க தரிசனத்துடன் தமிழ் அரசியல் தலைவர்கள் முன்கூட்டியே செயற்படத் தவறிவிட்டார்கள்.
நாட்டின் இருபெரும் அரசியல் கட்சிகளும் ஆட்சியதிகாரத்தில் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, அரசியல் தீர்வுக்கான முன் நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற சூழலிலேயே வடக்கும் கிழக்கும் இணைவதற்கு முஸ்லிம் சமூகம் ஒத்துழைக்க வேண்டும். வடக்கும் கிழக்கும் இணையாவிட்டால், கிழக்கில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிக்கு உள்ளாகிவிடும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசியல் ரீதியான இந்த ஞானோதயம் எற்கனவே உதயமாகியிருக்க வேண்டும். காலம் பிந்திய இந்த ஞானோதயம் வெறும் எச்சரிக்கைக்காக மட்டுமே பயன்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மட்டுமல்ல. கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பும் என்னவாகப் போகின்றதோ என்ற அச்சம் கொள்ளத்தக்க நிலைமையே இப்போது ஏற்பட்டிருக்கின்றது.
வடக்கு கிழக்கு இணைப்பு மட்டுமல்ல. சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையிலான சமஸ்டி முறை என்பனவும் இப்போது கேள்விக்குறியதாகவே தோன்றுகின்றது.
தமிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசமாகிய வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிப்பதற்கு பேரின அரசுகளினால், பல ஆண்டுகளாகவே திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும், மகாவலி அ;பிவிருத்தித் திட்டம் என்ற விசேட விவசாய மேம்பாட்டுத் திட்டம் ஆசியவற்றின் ஊடான நகர்வுகள் கிழக்கில் திருகோணமலையை  ஊடறுத்து, வடக்கில் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் கால் பதித்திருக்கின்றன.
இந்த நிலையில் வடக்கையும் கிழக்கையும் தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் இணைப்பதற்கு அரச தரப்பில் உடன்பாடு எட்டப்படும் என்று சொல்வதற்கில்லை.
அத்தகைய நிலையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்திற்கான சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையிலான சமஸ்டி என்பவற்றுக்கு இரண்டு பேரின அரசியல் கட்சிகளும் இணைந்த அரச தரப்பினர் இணங்கி வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
மொத்தத்தில் இறுதி வடிவம் பெறப்போகின்ற புதிய அரசியலமைப்பு தொடர்பில் இப்போது வெளிப்பட்டுள்ள நிலைமைகளும், கருத்துக்களும், புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தரப்பு எதிர்பார்க்கின்ற வகையிலானதோர் அரசியல் தீர்வு விடயத்தை கானல் நீராகவே காட்டுகின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More