Home இலங்கை நிலைமாறு கால நீதி சறுக்கியதா? செல்வரட்னம் சிறிதரன்

நிலைமாறு கால நீதி சறுக்கியதா? செல்வரட்னம் சிறிதரன்

by admin

இறுதி யுத்தத்தின் போது யுத்த மோதல் பிரதேசங்களில் பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கும். நீதி வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார்கள். அது இப்போது கானல் நீராகியிருக்கின்றது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை யுத்தம் முடிவுக்கு வந்த சூட்டோடு இலங்கைக்கு விஜயம் செய்த முன்னாள் ஐநா மன்றச் செயலாளர் பன் கீ மூன் அவர்கள், யுத்த மோதல்களின்போது மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று சுட்டிக்காட்டி, அவற்றுக்கு சர்வதேச தரத்தில் பொறுப்பு கூற வேண்டும் என நேரடியாக வலியுறுத்தியிருந்தார்.
அப்போது அதனை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச பின்னர் சர்வதேச விசாரணையை முற்றாக மறுதலித்திருந்தார். இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பிரேரணையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி அதனை முழுமையாக நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளித்துவிட்டு பின்னர் படிப்படியாக அதனை மறுத்து இப்போது முழுமையாக சர்வதேச விசாரணை என்ற கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு இடமே இல்லை என கூறியிருக்கின்றது,
நிலைமாறு கால நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகக் கூறியிருந்த அரசாங்கம் அதனைச் செயற்படுத்துவதில் காட்டியுள்ள மந்த நிலையிலான செயற்பாடானது, பாதிக்கப்பட்;டவர்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டைத் தடம்புரளச் செய்கின்ற நடவடிக்கைக்கு ஒப்பானது என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயி;ட் ரா அத் ஹுசெயின் இந்த வருட மனித உரிமைப் பேரவைக்கான தனது அறிக்கையில் கவலை வெளியிட்டிருந்தார்.
ஒப்புக்கொள்ளப்பட்டவாறு கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அவருடைய அறிக்கை வெளிவந்த சூட்டோடு சூடாகக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் பணியில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என உறுதியாகக் கூறியிருப்பதன் மூலம் ஐநா மனித உரிமை ஆணையாளரின்; புதிய அறிக்கையை நிராகரித்திருக்கின்றார்.
அது மட்டுமல்ல. தவறிழைத்த படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிசாய்க்கப் போவதில்லை என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறியிருக்கின்றார்.மக்கள் தமது குறைகளை ஜனாதிபதியிடம் நேரடியாகத் தெரிவிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மக்கள் குறை கேள் செயலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதற்காக அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலாலியில் படையினர் மத்தியில் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் அபிப்பிராயங்கள் கருத்துக்களை ஏற்று நாட்டை நிர்வகிக்கப் போவதில்லை என கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புப் படையினருக்கு எதிராக எந்தவிதமான குற்றப்பத்திரங்களும் கொண்டு வரப்படமாட்டாது என இராணுவத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.
சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இராணுவத்தினருக்கு எதிரான குற்றப்பத்திரங்கள் முன்வைக்கப்பட மாட்டாது என்ற இரண்டு விடயங்களும் சிங்கள மக்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கலாம். ஜனாதிபதியின் அந்த நிலைப்பாட்டை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொருத்தமட்டில் இந்த இரண்டு விடயங்களுமே மேலும் பாதிப்பை ஏற்படுத்தத்தக்கவையாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும், அரச தலைவராகிய மைத்திரிபால சிறிசேன மீதும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் வைத்திருந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் சிதறடித்திருக்கின்றன.
தமிழ் மக்கள் விடயத்தில் கடும் போக்கைக் கடைப்பிடித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகத் துணிச்சலோடு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, நாட்டில் அழிந்து சென்றுகொண்டிருந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றி நல்லாட்சியை நிறுவுவதாக உறுதியளித்து, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன் என்ற உத்தரவாதத்தை முன்வைத்து அதிகாரத்திற்கு வந்ததன் பி;ன்னர், முன்னைய நிலைப்பாடுகளுக்கு நேர் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படத் துணிந்துள்ளமையானது, அவர் மீது தமிழ் மக்கள் முற்றாக நம்பிக்கை இழக்கும் நிலைமையையே உருவாகியிருக்கின்றது.
குற்றப்பத்திரம் இல்லையென்றால் நீதி விசாரணையும் இல்லை
இராணுவத்திற்கு எதிராக் குற்றப்பத்திரங்கள் கொண்டு வரப்படமாட்டாது என்று ஜனாதிபதி உறுதியளித்திருப்பதன் ஊடாக நிலைமாறு கால நீதிக்கான விசாரணையே நடைபெறுமா என்பதே கேள்வியாகியிருக்கின்றது.
சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசாங்கம் உள்ளக விசாரணையை உறுதிப்படுத்தியிருந்தது. சில வேளைகளில் சர்வதேச நீதிபதிகள் இல்லாவி;ட்டாலும்கூட ஐநா மனித உரிமை அலுவலகம் அல்லது சர்வதேசத்தின் தொழில்நுட்பம் அல்லது ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் சில தரப்பினரிடம் காணப்பட்டது.
சர்வதேச விசாரணைகளை நிராகரித்துள்ள அரசாங்கத்தை அத்தகைய உள்ளக விசாரணையொன்றுக்கு இணங்கச் செய்யலாம் என்ற எண்ணப்பாடும் அவர்களிடம் காணப்பட்டது,  ஆனால் இப்போது இராணுவத்தினருக்கு எதிராகக் குற்றப்பத்திரங்கள் வருவதை அனுமதிக்கப் போவதில்லை அல்லது அதற்கு இடமில்லை என்றால் நீதி விசாரணைக்கான அவசியமே இல்லையென்றாகிவிடும்.
ஏனெனில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதில் இருந்து, தீவிரமான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்கள் எல்லாமே இராணுவத்தினருக்கு எதிரானவைகளாகவே இருக்கின்றன. இந்த நிலையில் இராணுவத்திற்கு எpராகக் குற்றப்பத்திரங்கள் முன்வைக்கப்படாவிட்டால் யாருக்கு எதிராக விசாரணைளை உள்ளகப் பொறிமுறை நடத்தப் போகின்றது என்பது தெரியவில்லை.
வெள்ளைவான் தொடக்கம் பல்வேறு வடிவங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல் நடவடிக்கைகள் எல்லாமே இராணுவத்திற்கும் இராணுவ புலனாய்வாளர்களுக்கும் தெரியாமல நடத்திருப்பதற்கு சந்தர்ப்பமே கிடையாது. இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டிருந்த ஆயுதக் குழுவினரே இந்தக் கடத்தல்களைச் செய்திருந்தனர் என கூறினாலும்கூட அவ்வாறு கடத்தி வருமாறு உத்தரவிட்டதும், அத்தகைய கடத்தல்களை அனுமதித்திருந்ததும் இராணுவமே அல்லது இராணுவ புலனாய்வாளர்களே என்பதை மறுக்க முடியாது.
அதேவேளை கடத்திச் செல்லப்பட்டவர்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களே தடுத்து வைத்திருந்தனர் என்பதையும் மறுக்க முடியாது. ஆக கடத்தியது யாராக இருந்தாலும், கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைத்திருந்த பொறுப்பு இராணுவத்தையே சார்ந்திருக்கின்றது என்பது தெளிவு..
அது மட்டுமல்ல. இறுதி யுத்தத்தின்போது அரசாங்கம் இராணுவத்தினரின் ஊடாக விடுதலைப்புலி உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பொது மன்னிப்பளிக்கப்படும் என பகிரங்கமாக உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழியை நம்பி, முன்னாள் விடுதலைப்புலிகள் பலபேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.
அவ்வாறு சரணடைந்தவர்களை இராணுவம் என்ன செய்தது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு அரசாங்க்திடம் இன்று வரையில் பதில் இல்லை. இவ்வாறு சரணடைந்தவர்களில் சிலர் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைத் தெரிவிக்குமாறு கோரியும், அவர்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துமாறு கேட்டும், ஆட்கொணர்வு மனுக்கள் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கூட சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்களை வெளியிட இராணுவம் மறுத்து சாட்டுக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றது.
சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு முதல் எத்தனை பேர் சரணடைந்தார்கள் என்ற விபரம் நிச்சயமாக இராணுவத்திடம் இருக்க வேண்டும். ஏனெனில் இராணுவம் என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்குச் சொந்தமான பொறுப்புள்ள அரச படைகளாகும்.
ஆகவே அவர்களுக்கென கட்டுப்பாடுகள் நிர்வாகச் செயற்பாடுகள் நடைமுறைகள் பொறுப்பு கூறுவதற்குரிய அலுவலக நிர்வாக நடைமுறைகள் என்பன நிச்சயமாக இருக்க வேண்டும். அவற்றை இராணுவத்தினர் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.  அந்த வகையில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை இராணுவம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குக் கடமைப்பட்டிரக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அமைக்கப்படுகின்ற செயலகத்தின் செயற்பாடு என்னவாக இருக்கப் போகின்றது, அதனால் ஏதேனும் பயன் கிடைக்குமா என்ற கேள்வி எழுகின்றது.
ஆகவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பற்றியும் பொறுப்பு கூற வேண்டிய கடமையும் பொறுப்பும் இராணுவத்தையே சார்ந்திருக்கின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில், இராணுவத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் கொண்டு வரப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்ற நிலையில் உள்ளக விசாரணையில் யாருக்கு எதிராகக் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என்பதும் யாருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படும் என்பதும் கேள்விக்குறியாகியிருக்கின்றது.
காணாமல் போனோருக்கான அலுவலகம்
நிலைமாறு கால நீpதிக்கான செயற்பாடுகளில் காணாமல் போனோருக்கான செயலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதற்கான பொறிமுறை இன்னும் சில மாதங்களில் உருவாக்கப்பட்டுவிடும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான செயலகத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளே முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நடைபெற்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகளில் பெரும்பான்மையாக  இராணுவத்தினர் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. இராணுவத்தினரே ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்குப் பொறுப்பு எனக் கூறுவதற்கான ஆதாரங்களும் முன்னைய விசாரணைகளின்போது சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
எனவே, இனிமேல் நடக்கப் போகின்ற விசாரணைகளிலும் இராணுவத்தினர் சம்பந்தப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கமைவாக இராணுவத்திற்கு எதிராகக் குற்றப்பத்திரம் கொண்டுவரப்பட மாட்டாது என்றால், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அமைக்கப்படுகின்ற செயலகத்தின் செயற்பாடு என்னவாக இருக்கப் போகின்றது, அதனால் ஏதேனும் பயன் கிடைக்குமா என்ற கேள்வி எழுகின்றது.
சர்வதேச நீதிபதிகளை விசாரணை பொறிமுறையில் உள்வாங்குவதாயின், சட்டத்திருத்தங்கள் அவசியம் என கூறப்படுகின்றது. ஆனால் சட்டத்தில் அத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கு இடமில்லை என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே உள்ளக விசாரணைகள் தான் நடத்தப்படும் என்பது இரட்டிப்பாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
உள்ளக விசாணையென்றால், விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படுமா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. விசேட நீதிமன்றங்கள் விசேட சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்பட்டு அதற்கென விசேட அதிகாரங்கள் வழங்கப்படுமா என்பதும் தெரியவில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக மன்னார், அனுராதபுரம், கொழும்பு என பல இடங்களில் விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. ஆனால், அவர்களின் வழக்குகள் இதுவரையிலும் துரிதப்படுத்தப்படவில்லை.
குற்றம் சுமத்தப்படாமலும், உரிய விசாரணைகளின்றியும் இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் வாடுகின்றார்கள். இந்த நிலையில்; காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் எப்படி இருக்கப் போகின்றது என்பது தொடர்பில் நம்பிக்கையான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை. சந்தேகங்களே பெரிதும் தலைதூக்கியிருக்கின்றன.
அதேவேளை மற்றுமொரு முக்கிய விடயமாகிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் இது வரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்தச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. புதிய சட்டம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பி;ல் வெளியாகியிருக்கின்ற தகவல்கள் உற்சாகமளிப்பதாக இல்லை.
சுமார் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அரசாங்கம் ஐநா மன்றத்தில் கூறியிருக்கின்றது. ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும், அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களும் அந்தச் சட்டவிதிகளின் ஆளுகையில் இன்னும் சிக்கியிருக்கின்றார்கள் அவர்களுக்கு விமோசனம் கிட்டவில்லை.
இது அந்தச் சட்டம் தற்போது நடைமுறையில் இல்லை என்ற கூற்றை சந்தேகிக்கச் செய்திருக்கின்றது.ஐநா பிரேரணையின் ஊடாக இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு 2018 ஆம் ஆண்டு இறுதி வரையில் அரசாங்கம் கால அவகாசம் குறித்திருக்கின்றது.
இதன் மூலம் காணிவிடுவிப்பதையும் அரசாங்கம் மேலும் காலம் கடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதையே தெளிவாகக் காண முடிகின்றது.சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஐநா பிரேரணை பரிந்துரைத்திருந்தாலும், அது குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.
ஐநா மனித உரிமைப்பேரவையின் கூட்டத் தொடரில் நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டிருக்கின்ற போதிலும், அரசாங்கம் ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டாத நிலைமையையே பிரதிபலித்திருக்கின்றது,
காலம் கடத்துவதையும் பிரச்ச்னைகளைப் பின்போட்டு பின்போட்டு அவற்றை மழுங்கடிக்கச் செய்வதிலும் அரசாங்கம் தீவிரமாகவும் துணிகரமாகவும் செயற்பட்டு வருவதையே காண முடிகின்றது.
மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் தீவிரம் காட்டிச் செயற்பட்டிருக்கின்ற போதிலும், பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் அலட்சியமான ஒரு நிலையில், விட்டுக் கொடுக்காத தன்மையுடன் பிடிவாதப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் நிலைமைகள் சீரடையும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்குத் தொடர்ச்சியான ஏமாற்றங்களே பரிசாகக் கிடைத்து வருகின்றன. அதன் அறிகுறியாகவே தமது அரசியல் தலைமைகளையும் தூக்கி எறிந்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் காணாமல் போயுள்ள தமது உறவுகளுக்கு பொறுப்பு கூறுமாறு கோரி வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் பல இடங்களிலும் வீதிகளில் இறங்கி வலிந்து போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதேபோன்று இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும எனக் கோரி காணி உரிமையாளர்களும் இராணுவ முகாம்களுக்கு எதிரில் இரவு பகலாகக் குவிந்திருந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களின் காணிகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து ஐநாவில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்க நேர்ந்திருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்துடன் நிபந்தனையின்றி ஒத்துழைத்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களினால் இத்தகைய அழுத்தம் ஒன்றை அரசியல் ரீதியாகக் கொடுக்க முடியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்துடன் கொண்டுள்ள நல்லறவும் ஆதரவும்கூட காணி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவவில்லை.
அந்த மக்கள் விடாப்பிடியாக நடத்திய போராட்டமே அரசாங்கத்தை வழிக்கு வரச் செய்திருந்தது.
எனவே, நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மீதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள தற்போதைய அரசியல் போக்கும் அரசியல் நிலைப்பாடும், அடுத்த கட்ட அரசியல் நிலைமை என்னவாகும்? அரசியலில் அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்ற வினாக்களையே எழுப்பியிருகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More