Home இலங்கை புத்தூர் மயானத்தில் சடலம் எரியூட்ட யாழ்.மேல் நீதிமன்றம் இடைக்கால தடை

புத்தூர் மயானத்தில் சடலம் எரியூட்ட யாழ்.மேல் நீதிமன்றம் இடைக்கால தடை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புத்தூர் கலைமதி இந்து சிட்டி மாயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்து உள்ளது. புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என ஒரு பகுதியினர் மல்லாகம் நீதிமன்றினை நாடி இருந்தனர். அதனை விசாரித்த மல்லாகம் நீதவான் அ.யூட்சன் மயானத்தை சூழ பத்தடி உயர மதிலினை கட்டி , சடலங்களை எரியூட்டுமாறும் , ஒரு வருடகாலத்திற்குள் மின்தகன மயானமாக அதனை மாற்றுமாறும் உத்தரவு இட்டு இருந்தார்.
குறித்த உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்.மேல் நீதிமன்றில் மயானத்தை சூழவுள்ள மக்கள் வழக்கு தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளபப்ட்டது. அதன் போது மயானத்தை சூழவுள்ள மக்களும் மன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
மயானத்தை அகற்ற கோரி வழக்கு தாக்கல் செய்த மக்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். அதன் போது , குறித்த மயானத்தை சூழ 300 குடும்பங்கள் வரையில் வசிக்கின்றார்கள். அந்த மயானத்தில் சடலங்கள் எரியூட்டப்படுவதனால் , சுகாதார ரீதியாகவும் சுவாச ரீதியாகவும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
அவ்வாறாக குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மயானத்தை சூழ பத்தடி உயர மதிலினை அமைந்து சடலங்களை எரியூட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க தமக்கு ஆட்சேபனை இல்லை என அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி ,மல்லாகம் நீதவானின் கட்டளைக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தார். அதேவேளை அந்த மயானத்தை அகற்ற கோரி சூழ வாழும் மக்கள் தொடர் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள். அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து உள்ளார். அதன் போது , இந்த பிரச்சனை நீதிமன்றில் உள்ளதனால் அது தொடர்பில் தன்னால் தலையீடு செய்ய முடியாது என கூறி இருக்கின்றார். இவ்வாறான நிலையிலையே   நேற்றைய தினம் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது , மயானத்தை சூழ வாழும் மக்கள் மன்றுக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த மயானம் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தி இயங்குகின்றதா ? இல்லையா என்பதனை அரச நிர்வாகம் பார்க்க வேண்டியது. மயானம் தொடர்ந்து இயங்க வேண்டுமா ? இல்லையா என்பது உள்ளூராட்சி அமைச்சுடன் தொடர்புடைய விடயம். அது தொடர்பில் அதிகாரம் உள்ளவர்களிடமே அதனை மன்று விடுகின்றது.

உள்ளுராட்சி அமைச்சராக வடமாகாண முதலமைச்சரே உள்ள நிலையில் அவரது அமைச்சுடனும் இது தொடர்பாக தொடர்புகொண்டு அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். யாழ்.மாவட்ட அரச அதிபருடைய பங்களிப்புக்கள் இதில் எவ்வாறு உள்ளனஇ அவரால் வழங்கப்படக்கூடிய தகவல்கள் தொடர்பாகவும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் மயானத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அது பாதிக்குமாயின் அது நிரந்தரமாக கைவிடப்பட வேண்டுமா என்பது தொடர்பான தகவல்கள் அனைத்தும் மன்றுக்கு அரச சட்டவாதியால் சமர்பிக்கப்பட வேண்டும். இந்த மக்கள் கடந்த 68 நாட்களாக போராடி வருகின்றார்கள். நீதி என்பது அனைவருக்கும் சமனானது. அது பாதிக்கப்பட்ட எந்த தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டியது.

அத்துடன் நீதிகோரி வீதியிலே நின்று போராடும் போது அதனை பார்த்துக்கொண்டு நீதி தேவதை கண்களை மூடிக்கொண்டு இருந்துவிடவும் முடியாது. அவ் போராட்டத்திற்கு முடிவு முற்றுமுழுதாக உடனடியாக வழங்கப்பட முடியாவிட்டாலும், இடைக்கால முடிவேனும் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையிலேயே இவ் கட்டளையானது பிறப்பிக்கபபடுகின்றது.

அதன்படி மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்குஇ யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் வழக்கானது முடிவுறுத்டப்படும் வரையில் மேல் நீதிமன்றானது இடைக்கால தடை உத்தரவு விதிக்கின்றது.

அதேபோன்று இவ் வழக்கு தொடர்பாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காணப்படும் மூல வழக்கேடானது யாழ்.மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட வேண்டும். இவற்றைவிட மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த மயானத்தை சுற்றி கட்டப்படும் மதில்கள் கட்டுமானங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டயதுடன் இவ் வழக்கு முடியும் வரை அவை அமைக்கப்பட கூடாது எனவும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனவே நிர்வாக ரீதியான நடவடிக்கைள் மேற்கொள்வதற்கு நீதிமன்றில் உள்ள தடை உத்தரவு காரணமென கூறப்பட்ட நிலையில் தற்போது அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அவ் உத்தரவுகளுக்கு தடை உத்தரவானது வழங்கப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்தார்.

மேலும்  இவ் தடை உத்தரவு தொடர்பான பிரதிகளை வடக்குமாகாண முதலமைச்சர், வடக்குமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு அணுப்பி வைக்க பதிவாளருக்கும், குறித்த தரப்பினர் அம் மயானம் காணப்பட வேண்டிய அல்லது அது நீக்கப்பட வேண்டிய காரணங்கள் தொடர்பாக அரச சட்டவாதிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More