Home இலங்கை வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நீண்ட உரையாடல்

வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நீண்ட உரையாடல்

by admin


02.04.2017 அன்று மக்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக காணாமற் போனோர் பற்றியும் காணிகள் திரும்பவும் உரித்தாளர்களுக்குக் கையளிப்பது பற்றியும் வேலையற்ற பட்டதாரிகள் சம்பந்தமாகவும் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதிலளளிக்கும் முகமாக இன்றைய தினம் என்னை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தமது வாசஸ்தலத்திற்கு அழைத்திருந்தார். அங்கு பல அமைச்சர்களும் சட்டத்துறை தலைமையதிபதியும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களும் வேறு பலரும் சமூகமளித்திருந்தனர். எம் சார்பில் கௌரவ அமைச்சர் குருகுலராஜா அவர்களும் ஆலோசகர் திரு.நிமலன் கார்த்திகேயன் அவர்களும், காணி ஆணையாளர் திரு.குகநாதன் அவர்களும் காணித்திணைக்கள  அலுவலர்கள் இருவரும் பங்கு பற்றியிருந்தார்கள்.

முதலில் காணமற் போனோர் சம்பந்தமாக பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன –  பரணகம விசாரணைக்குழுவின் அறிக்கை உடனே பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என்பது. இரண்டாவது ஏதேனும் பத்திரிகைகளில் அல்லது தொலைக்காட்சியில் அல்லது வேறு விதமாக காணாமற் போனோர் உயிருடன இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டால் அவை சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் சில குழந்தைகள் ஒரு கூட்டத்தின் போது இருந்ததாக அடையாளப்படுத்தப்பட்டார்கள் அல்லவா என வினவிய போது அவர்களை அவர்களது கல்லூரியில் தாம் சந்தித்ததாகவும் அவர்கள் சம்பந்தமாக வேறு எவையும் தமக்குத் தெரியாது எனவும் கூறினார். அவர்கள் காணாமற் போயிருந்தால் அவர்கள் தம் முன்னிலையில் இருந்து படம் எடுத்த பின்னர் காணாமற் போயிருக்க வேண்டும் எனவும் கூறினார். அக்குழந்தைகளின் பெற்றோர்கள் அத்தினத்திற்கு முன்னரேயே அவர்கள் காணாமற் போயிருப்பதாகக் கூறினால் அவை தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்.

தடுப்புக் காவலில் இருப்போர் சம்பந்தமாக ஏற்கனவே விவரங்கள் பெற்றுக் கொண்டதாகவும் தற்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஐம்பத்து ஏழு தமிழ்க் கைதிகளே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வேறு எந்த கைதிகளும் நீதிமன்றில் பாரப்படுத்தப்படாது இருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது என சட்டத்துறை தலைமையதிபதி திரு.ஜெயசூரிய அவர்கள் கூறினார். அவ்வாறு இருந்தால் உடனே தனக்குத் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

காணாமற் போனோர் காரியாலயம் நடைமுறைப்படுத்தப் படாது இருக்க சில சட்ட திருத்தங்களே காரணம் என்றும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுப்பதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் உறுதிமொழி அளித்தார். அத்துடன் தவறான வழியில் எவரேனும் கைது செய்யப்பட்டிருந்தாலோ அவர்கள் தடுப்புக் காவலில் வைத்திருக்கப்பட்டாலோ உடனே மனித உரிமை ஆணைக்குழுவிற்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் திரு.ராஜபக்ச அவர்கள் கேட்டுக் கொண்டார்.

காணி சம்பந்தமாக

யாழ்ப்பாணக் குடா நாட்டில் 3800 ஏக்கர் மட்டுமே இராணுவத்தினர் வசம் இருப்பதாகவும் பாதுகாப்பு அளிப்பதற்காகத் தேவையானவற்றை மட்டும் இராணுவத்தினர் வைத்துக் கொண்டு மிகுதியை மக்களுக்குத் திரும்பக் கொடுக்கவுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். கேப்பாப்பிலவில் மக்களின் காணிகளுக்குப் பதிலாக வேறு காணிகளை இராணுவம் தரவிருப்பதையும் அதற்காக ஐம்பது இலட்சம் கௌரவ சுவாமிநாதன் அவர்களால் இராணுவத்தினருக்குக் கொடுக்கப்பட விருப்பதையும் கூறி மக்களின் காணிகள் சம்பந்தமாக குறித்த பணம் கொடுக்கப்படவில்லை என்றும் வேறு காட்டுப் பகுதிக்கே இந்தப் பணத்தை இராணுவத்தினர் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் என்னால் தெரிவிக்கப்பட்டது. அது பற்றி ஆராய்வதாக ஜனாதிபதி அவர்கள் கூறினார். தற்போது மொத்தம் 170000 அளவில் தான் இராணுவத்தினர் நாடுமுழுவதும் இருப்பதாகவுங் கூறப்பட்டது. புதிதாக எவரும் உள்ளீர்க்கப்படவில்லை எனவும் சிறிது சிறிதாக அவர்கள் குறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் இன்னும் சில மாதங்களில் கையளிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் திரு.ஹெற்றியாராச்சி அவர்கள் கூறினார். வடமாகாணத்திலிருந்து இராணுவத்தினரை முழுமையாக அப்புறப்படுத்த முடியாதென்றும் பிராந்திய, தேசிய பாதுகாப்பிற்காக அவர்களை அங்கு வைத்திருக்க வேண்டும் எனவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூறினார்.  இராணுவத்தினரிடம் இருக்கும் நீர் நிலைகள் விரைவில் திரும்பக் கையளளிக்கப்படும் என திரு.ஹெட்டியாராச்சி அவர்கள் கூறினார்.

வேலையில்லாப் பட்டதாரிகள்
வேலையில்லா பட்டதாரிகள் சம்பந்தமாக 1500 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கூறினார். பொலிஸ் சேவையிலும் ஆட்களை உள்ளீர்க்க முடியும் எனவும் அதற்காக மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக் கொண்டார். சுற்றுலாத்துறையில் நபர்களை உள்ளீர்க்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்கள் கூறினார்.

வடமாகாணத்தில் கிரவல், மணல் தட்டுப்பாடு இருப்பதை குறிப்பிட்ட போது முன்னர் தனியார் துறைக்கு இருந்த உரித்துக்களை திரும்பவும் அவர்களுக்கு கொடுப்பது சம்பந்தமாகத் தான் ஆராய்வதாக மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கூறினார். தற்போது ஒரு டிப்பர் மணலின் விலை ரூபா 40000, 50000 ஆக உயர்ந்திருப்பதை அவருக்கு எடுத்து கூறி இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவுங் கேட்டுக் கொண்டேன். அத்துடன் மணலைப் பொதி செய்து வழங்குவது சம்பந்தமாகக் கூறியிருந்தேன். இதன்மூலம் மணல் வீண்விரயமாகாமல் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தேவையான மணல் சந்தையில் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளலாம் எனவும் மணல் அகழ்வு சம்பந்தமாக அரசாங்கம் கண்காணித்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டேன். அது பற்றி ஆராய்வதாக மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்தார்.

விவசாயப் பண்ணைகளைத் திரும்ப மக்களுக்கு எடுத்துத் தருவது பற்றி கேள்வி கேட்ட போது திரு.ஹெட்டியாராச்சி அவர்கள் ஆறு மாதத்திற்குள் சகல பண்ணைகளையுந் திரும்பவும் கையளிக்க முடியும் எனவும் அங்கு தொழில் புரியும் 11000 மக்களுக்கு வேலைவாய்ப்பை வடமாகாண அரசு வழங்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

அவர்களை இராணுவத்தினரே பணிக்கமர்த்தியதால் தகுந்த சன்மானத்துடன் அவர்களை வெளியேற்ற முடியும் எனக் கூறினேன். திரும்ப எமது சேவையில் இணைவதானால் அவர்கள் நாம் கொடுக்கும் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறினேன்.

இது தவிர நிர்வாகம் சம்பந்தமான விடயங்களும் நிதி சம்பந்தமான விடயங்களும் அதிகாரப் பரவலாக்கம் சம்பந்தமான விடயங்களும் உள்ள10ராட்சி சம்பந்தமான விடயங்களும் உட்கட்டுமானம் சம்பந்தமான விடயங்களும் வேறு சில விடயங்களும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. வேறு கூட்டத்திற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் செல்லவேண்டியிருந்ததால் பல விடயங்களையுங் குறிப்பிட்டு ஆவணமாக அவரிடம் கையளித்திருந்தேன். அவை தொடர்பாக விரைவில் கவனம் எடுப்பதாகக் கூறியிருந்தார்.

விரைவில் அனைத்து அமைச்சுக்களையுங் கொண்ட நடமாடும் செயலகத்தை அழைத்து வடமாகாணத்திற்குக் கொண்டு வருவதாகவும் மற்றைய விடயங்கள் சம்பந்தமாக விரைவில் அங்கு தீர்வு எடுக்கலாம் எனவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஒன்பது  மணியளவில் கூட்டம் முடிவுற்றது.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More