Home இலங்கை விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் பந்து விளையாட்டாக மாறியுள்ள காணி விவகாரம் – செல்வரட்னம் சிறிதரன்

விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் பந்து விளையாட்டாக மாறியுள்ள காணி விவகாரம் – செல்வரட்னம் சிறிதரன்

by admin
தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை என்பது பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்ற ஒரு விவகாரமாகும். வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்ற கோரிக்கை எழுவதற்கு இந்தக் காணிப் பிரச்சினையே மூல காரணமாகும்.
தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை படிப்படியாகக் குறைப்பதற்காகவே, வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின் காணி உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற அரசியல் உத்தியை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. ஆனால் ஆயுதப் போராட்டமானது, இந்த சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது.
யத்தத்திற்கு முந்திய காலப்பகுதியில் மகாவலி திட்டம் என்ற பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இலகுவாக தமிழ் பிரதேசங்களை சிங்கள அரசுகள் கபளீகரம் செய்து வந்துள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்களின் இன விகிதாசாரம் வீழ்ச்சியடைய நேர்ந்தது என்று துணிந்து கூற முடியும்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் சிங்களக் குடியேற்றங்களை முன்னரைப் போன்று பெரிய அளவில் அரசாங்கங்கள் முன்னெடுக்கவில்லை. சிங்களவர்களையே கிட்டத்தட்ட முழுமையான அளவில் கொண்டிருந்த படையினரையே அரசாங்கங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்தியிருந்தன. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும், யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினர் யுத்த தேவைக்காகக் கைப்பற்றி நிலைகொண்டிருந்த காணிகளிலேயே இன்னும் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.
யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள் மற்றும் தலைவர்களையும் படிப்படியாக யுத்த நடவடிக்கைகளின் மூலமாகவும், மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு உரிமை மீறல் நடவடிக்கைகளின் மூலமாகவும் அரசாங்க படைகள் அழித்தொழித்திருக்கின்றன. இதனால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டமானது, திட்டமிட்ட வகையிலான சதித்திட்டத்தின் கீழ் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் பயங்கரவாதம் நாட்டில் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது என்று யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் பெருமையடித்துக் கொண்டது. ஆனால் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில்  இருந்து இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்கவோ அல்லது அவர்களால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுத்து அவர்களை மீள்குடியேறச் செய்யவோ அந்த அரசு ஆர்வம் காட்டவில்லை.
யுத்தம் முடிந்துவிட்டதுதானே, இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்கள் நிலைகொண்டுள்ள காணிகளைப் பொதுமக்களிடம் திருப்பிக் கையளிக்க வேண்டும் என கோரியபோது, இராணுவத்தினர் தேசிய பாதுகாப்பை முன்னிட்டே அங்கு இன்னும் நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று அரசு நொண்டிச் சாட்டைக் கூறியது.
அது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி, நாட்டு மக்களை பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டு, சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததாக இராணுவத்தினரை மேன்மைப்படுத்தி, அவர்களை அனைத்துத் துறைகளிலும் முன்னிலைப்படுத்தியது. அவர்கள் உள்ளுர் அரச நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடவும், மீள்குடியேற்றம், மீள் கட்டுமாணப் பணிகள் என்பவற்றில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கவும் முன்னைய அரசு வழிவகுத்து அதற்குரிய அதிகாரங்களை வழங்கியிருந்தது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர், சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினருடைய செயற்பாடுகளைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ள போதிலும், யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினரை விலக்கிக்கொள்வதற்கு அது விரும்பவில்லை.
இராணுவத்தினரைத் தமிழ்ப்பிரதேசங்களில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மகிந்த பின்பற்றி வந்த அதே கோள்கையையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமும் இராணுவத்தினருக்கு மிகுந்த விசுவாசத்துடன் கடைப்பிடித்து வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருவதிலும், அது தொடர்பில் பொறுப்பு கூறுவதிலும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மிகுந்த பொறுப்போடு மனிதாபிமானம் மேலோங்கிய வகையில் நடந்து கொள்வார்கள் என்று தமிழ் மக்களி மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் இந்த மூன்று விடயங்களிலும் முன்னைய அரசாங்கத்தைப் போலவே நல்லாட்சி அரசாங்கமும் பாராமுகமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பாதிக்கப்பட்ட மக்கள் அறிந்து மிகுந்த கவலையடைந்திருக்கின்றார்கள். அத்துடன் அவர்களுடைய கவலை, அரசியல் ரீதியான சீற்றமாகவும் மாற்றம் பெற்றிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு முன்னின்று உழைத்ததுடன் நின்றுவிடாமல், அந்த அரசுக்கு தென்னிலங்கையில் உள்ள பௌத்த சிங்கள தீவிரவாத அரசியல் சக்திகளிடமிருந்து தமிழ் மக்களுடைய விவகாரங்களினால் அரசியல் ரீதியாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறையோடு செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.
எதிர்ப்பு அரசியல் போக்கைக் கைவிட்டு, நட்பு அரசியல் உத்தியைக் கடைப்பிடித்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, அதனையோர் இராஜதந்திர நடவடிக்கையாக அல்லது இராஜீய ரீதியிலான அரசியல் நகர்வாகக் கடைப்பிடித்து, தங்களுடைய பிரச்சினைகளுக்குப் படிப்படியாக தீர்வு காண்பதற்கான முயற்சிகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்ளும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை, அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறோம் என்ற போர்வையில் பெரும்பான்மையினராகிய சிங்கள பௌத்தர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படத்தக்க வகையில், அவர்களுக்கு அளவுக்கு மிஞ்சிய அளவில் சலுகைகளையும் அதிகாரங்களையும் அரசு வழங்க முயற்சிக்கின்றது என்று வெளிப்படையாகவே கூறி வருகின்ற பௌத்த சிங்கள அரசியல் தீவிரவாத சக்திகளினால் அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலேயே கூட்டமைப்பின் தலைமை தீவிர கவனம் செலுத்தி வருகின்றது என்ற கருத்துருவாக்கம் – தங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தினால் – பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.
இத்தகைய ஒரு நிலையில்தான், தமது பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது காணிகளில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் என  கோரி, வீதிகளில் இறங்கி போராடி வருகின்றார்கள். கேப்பாப்பிலவு போன்ற இடத்தில் இராணுவ முகாம்களின் வாயிலில் அமர்ந்து மக்கள் துணிவுடன் தமது போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு, முள்ளிக்குளம், பரவிப்பாஞ்சான், பன்னங்கண்டி என்று பல இடங்களிலும் இந்த வீதிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்திற்குப் பலன்கள் கிடைத்தன.
பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவம் மீளக் கையளித்தது. ஏனைய இடங்களில் மாதக்கணக்கைக் கடந்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
காணிகளுக்கான போராட்டத்தைப் போலவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும். விடுதலையோ விசாரணைகளோ இன்றி பல வருடங்களாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி, திருகோணமலை போன்ற இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
இந்தப் பின்னணியிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுமந்திரனுடன் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஏற்கனவே படையதிகாரிகளுக்கு தன்னால் பணிப்புரை விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், தனது உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கூறியிருக்கின்றார்.
இதேபோன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திலும் தனது உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி தங்களிடம் கவலை வெளியிட்டதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, தாங்கள் இராணுவ தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, இந்த இரண்டு விடயங்களிலும் அதிகாரிகளை, உடனடியாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாகவும் தங்களுக்கு முன்னாலேயே சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தனுடைய தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு காணிப் பிரச்சினைகள் குறித்துப் பேசியிருக்கின்றார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, தமிழ் மக்களுடைய காணிகளைப் பிடித்து வைத்திருப்பது தவறான விடயம் என்பதை படையதிகாரிகளுக்குத் தாங்கள் எடுத்துரைத்து, இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும். அவற்றைப் பொதுமக்களிடம் கையளிக்க வேண்டியது படையதிகாரிகளின் கடமை என்பதை வலியுறுத்தியதாக சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.
காணிகளை விடுவிப்பது தொடர்பில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடைய தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அந்தந்தப் பிரதேசத்து இராணுவ அதிகாரிகளும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்திலான இந்தக் கூட்டங்களில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு, பாதுகாப்பு அமைச்சில் மீண்டும் ஓர் உயர் மட்டச் சந்திப்பில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும், இத்தகைய பேச்சுவார்த்தைகள் தொடர்நது மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஆக்கபூர்வமான வகையில் பேச்சுக்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்ற பின்னணியில் காணி விடயங்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுநடத்தியதன் பின்னர், முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய முன்னணியில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு, இது விடயத்தில் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
எனினும் முப்படைகளின் தளபதிகளுடனான சந்திப்பின்போது, பொதுமக்களுடைய காணிகளை இராணுவம் கைவிட்டு வெளியேறிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டபோது, இராணுவ தளபதி அளித்த பதில் சீரிய சிந்தனைக்குரியது. காணி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கையாளப்பட்டுள்ள வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.
ஏனெனில் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஜனாதிபதி பந்தை இராணுவ தரப்பினரிடமும், பாதுகாப்புத் தரப்பினர் அந்தப் பந்தை மீண்டும் அரசாங்கமாகிய ஜனாதிபதியிடமும் மாறி மாறி அடித்தருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
‘இராணுவம் பலாத்காரமாக எந்தக் காணியையும் பிடித்து வைத்திருக்கவில்லை. அவ்வாறு காணி பிடிப்பதற்கு இராணுவத்திற்கு அதிகாரமில்லை.
இராணுவத்திடம் உள்ள காணிகளை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் கூறுமாக இருந்தால் நாங்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிடுவோம். காணிப் பிரச்சினையில் சிவில் முறையில் ஜனாதிபதியும் அதிகாரிகளுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது’ என்று மிகுந்த அதிகாரத் தொனியில் அழுத்தம் திருத்தமாக இhணுவத் தளபதி கூட்டமைப்பினரிடம் கூறியிருக்கின்றார்.
எனவே, காணிகளை விட்டு வெளியேறுமாறு நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய ஜனாதிபதி கூறினாலே போதும். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினர் பொதுமக்களுடைய காணிகளில் இருந்து வெளியேறிவிடுவார்கள். இதற்கான உத்தரவு ஜனாதிபதியிடம் இருந்து வரவேண்டும். தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையே அவ்வாறு  உத்தரவிடுவதற்கு ஜனாதிபதியைத் தூண்ட வேண்டும்.
அது அந்தத் தலைமையின் பொறுப்பாகும். அத்றகுரிய பேச்சுவார்த்தைகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அந்தத் தலைமையின் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும்.
எனவே, தலையை விடுத்து வாலைப் பிடிப்பது போன்று மாவட்ட மட்டத்தில் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபருடைய தலைமையில் காணிகள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் பொருத்தமானதொரு நடவடிக்கையாகத் தோன்றவில்லை.
யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாகின்றன. இராணுவத்தினர் வசம் எத்தனை ஏக்கர் காணிகள் இருக்கின்றன. இதுவரையில் இராணுவத்தினரால் எத்தனை ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் – தரவுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. அத்தகைய தரவுகள் இருந்தால், மாவட்ட மட்டத்திலான இராணுவ தளபதிகள் கலந்து கொள்ளவுள்ள கூட்டத்தில் தரவுகள் சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க மாட்டாது.
வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர்கள் மாவட்டந்தோறும் இருக்கின்றார்கள். அதற்கு மேலதிகமாக மாகாண சபை உறுப்பினர்களும்ட இருக்கின்றார்கள். அதையும்விட, பிரதேச சபைகளின் பிரதிநிதகளும் இருக்கின்றார்கள்.
இவ்வாறு பரந்துபட்ட அளவில் இருக்கின்ற மக்களுடைய பிரதிநிதிகள் முக்கியமான பிரச்சினைகளாகிய இராணுவத்தின் வசமுள்ள காணிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய துல்லியமான விபரங்கள் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்தத் தரவுகள் நாளாந்தம் இற்றைப்படுத்தப்பட்டிருக்கவும் வேண்டும்.
பிரச்சினைகள் பற்றிய இத்தகைய தரவுகள் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வல்ல நிறைவேற்று அதிகார பலமுள்ள ஜனாதிபதியுடன் பேச்சுக்கள் நடத்தி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்தக்க வகையிலான உத்தரவுகளை .இடச் செய்ய வேண்டியதே மக்கள் பிரதிநிதிகளினதும், குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினதும் பொறுப்பாகும்.
மக்கள் தலைவர்களைப் புறந்தள்ளி வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தம்முடன் பேரராட்டத்தில் ஈடுபடுமாறு தலைவர்களுக்கு அழைப்பு விடுகின்றார்கள். மக்களை தலைவர்களே வழிநடத்த வேண்டும் என்ற நடைமுறைக்கு முரணாக பாதிக்கப்பட்ட மக்களோ தலைவர்களை வழிநடத்துகின்றார்கள் என்று சிந்திக்கத்தக்க வகையில் தமிழ் மக்களுடைய அரசியல் கள நிலைமைகள் மாறியிருக்கின்றன.
இதனையோர் ஆரோக்கியமான அரசியல் நிலைமையாகக் கொள்ள முடியாது. அபிவிருத்தி நடவடிக்கைகளாயினும்சரி, அரசியல் நடவடிக்கையாயினும்சரி, கீழிருந்து மேல் நோக்கிச் செல்ல வேண்டும். களத்தில் இருந்து தலைமையை நோக்கி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே நவீன நடைமுறைக் கோட்பாடாகக் கருதப்படுகின்றது.
ஆனால் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிப் பிரச்சினை விவகாரத்தில் நிiவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடனான சந்திப்பு முதலில் நடந்திருக்கின்றது. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தனது உத்தரவுகளை படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்றிச் செயற்படவில்லை என்று கவலை வெளியிட்டதன் பின்னர் முப்படைகளின் தளபதிகளையும் பாதுகாப்பு அசைம்சின் செயலாளரையும் சந்தித்துப் பேச்சக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் பேச்சுக்களின்போது காணி விடயம் தொடர்பாக இராணுவ தளபதியே கறாரான முறையில் தகவல்களைக் கூறியிருக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெறுமனே பார்வையாளராக இருந்திருக்கின்றார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் மாவட்ட மட்டச் சந்திப்பும் அதன் அடிப்படையில் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடனான சந்திப்பும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்ற ரீதியில் முப்படைகளின் தளபதிகளும் அரசாங்கமும் இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றி, மாறி மாறி பந்தை மற்றவர் பக்கமாகத் தள்ளிவிட்டு விளையாடிக்கொண்டிருக்கின்ற சூழலில் – காணிப் பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வைப் பெற்றுத் தர முடியும் என்பது தெரியவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More