கும்பகோணம் பாடசாலை தீ விபத்து சம்பவத்தில் இறந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 8 முதல் 8.7 சதவீத வட்டியுடன் 4 வாரங்களில் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் தனியார் பாடசாலையில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்ததுடன் பல குழந்தைகள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாகவும், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 25 லட்சம் ரூபாவும் காயமடைந்த குழந்தைகளுக்கு 20 லட்சம் ரூபாவும் இழப்பீடு வழங்க வேண்டுமென தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கம் சார்பி்ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் இடம்பெற்ற வேளையில் 4 வாரங்களில் வட்டியுடன் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்து விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.