நல்லாட்சியை பலப்படுத்த அரசு தடுக்கும் முயற்சிகளில் கோபமடையும் கோத்தாபய மற்றும் மஹிந்த தரப்பினர் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த இராணுவப்புரட்சி வரையில் செல்லலாம் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவருக்கு விசுவாசமான இராணுவத்தினர் இன்றும் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்து பாதயாதிரைகளையும் பிரச்சாரங்களை செய்துகொண்டு உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தினருக்கு எதிராக நாம் செயற்படுகின்றோம், இராணுவத்தை நாம் தண்டிக்க முயற்சித்து வருகின்றோம். இராணுவத்தினரை சிறைகளில் அடைக்கப்போகின்றோம், சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்போகின்றோம் என்ற தவறான கருத்துகளை மஹிந்த ராஜபக் ஷவும் கோத்தபாய ராஜபக் ஷவும் நாட்டில் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல் குற்றம் செய்த பௌத்த பிக்குவை சிறையில் அடைத்தால் நாம் பௌத்த மதத்தையும் சிங்கள இனத்தையும் அழிக்க முயற்சிப்பதாக மஹிந்த தரப்பு பொய்யான கதைகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
தமது அரசியல் நலனுக்காக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாகவும் எனினும் இராணுவம் செய்த குற்றங்களுக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அவர்களை தண்டிக்க இடமளிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.