தமிழகத்தில் பெரும் நாச வேலை நடத்தும் திட்டத்தோடு கடையநல்லூருக்கு சுபுஹானி காஜா மைதீன் திரும்பினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி கனகமலை வனப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் ரகசியமாக கூட்டம் நடத்துவதாக கொச்சி தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த 2ம் தேதி அப்பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுற்றிவளைப்பு சோதனை நடத்தி இருந்தனர்.
கண்ணூர் அணியாரம் பகுதியைச் சேர்ந்த மன்சீத், கோவையை சேர்ந்த அபு பஷீர், சென்னையில் வசிக்கும் திருச்சூரைச் சேர்ந்த சாலிஹ் முகமது, மலப்புரம் மாவட்டம் திரூரைச் சேர்ந்த சப்வான், கோழிக்கோடு குற்றியாடியை சேர்ந்த ஜாசிம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அளித்த தகவலின்பேரில் கோழிக்கோட்டிலிருந்து ரம்ஷாத் என்பவரையும், நெல்லை மாவட்டம் கடையநல்லூரிலிருந்து சுபுஹானி காஜா மைதீன் என்பவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். காஜா மைதீனிடம் நடத்தப்பட்ட விசராணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு அதன் பொறுப்பை காஜா மைதீனிடம் கொடுத்ததாகவும், தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறி, தமிழகம் திரும்ப தீவிரவாத தலைமையிடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் அனுமதிக்காத தீவிரவாதிகள் தன்னை மோசமாக நடத்த தொடங்கியதாகவும் காஜா மைதீன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், காஜா மைதீன், யாருக்கும் சொல்லாமல், தனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டதாக கூறியுள்ளார். சொந்த ஊருக்கு சென்ற காஜா மைதீன், நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பொறியியல் படித்த காஜா மைதீன் எதற்காக, நகைக்கடையில் பணியாற்றினார் என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
தீவிரவாதிகளுக்கு தெரியாமல் வந்துவிட்டதாக காஜா மைதீன் கூறினாலும், 6 மாதங்கள் முன்பும் இவர் தமிழகத்திலிருந்து இணையத்தின் ஊடாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை தொடர்பு கொண்ட ஆதாரம் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இப்படி அவர் தொடர்புகொள்ள என்ன காரணம்? தமிழகத்தில் ஏதேனும், சதி செயல்களுக்கு திட்டமிட்டனரா என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நாச வேலைகள் நடத்துவதுவதே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நோக்கம். எனவும், இதற்காக தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் மிகவும் ரகசியமாக 3 தலைமை பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தகவலும் வெளியாகியுள்ளதாகவும், அந்த அடிப்படையில் காஜா மைதீனிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.