பெங்களூரில் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு மாதம் கடந்தும் கொலையாளிகளை கைது செய்ய முடியாமல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கடந்த மாதம் 5ம் திகதி இனம் தெரியாதவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன் மேலும் கொலையாளிகளை கைதுசெய் சிறப்பு விசாரணை குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுரி லங்கேசை சுட்டுக் கொன்ற ஒரு நபரின் உருவம் அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகி இருந்த போதும் அந்த காட்சிகள் தெளிவாக இல்லாத காரணத்தால் கொலையாளிகளை கைது செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக லட்சக்கணக்கான செல்போன் அழைப்புகளையும் காவல்துறையினர் ; ஆய்வு செய்துள்ளனர்.
இதேவேளை கவுரி லங்கேசை நக்சலைட்டுகள் இலக்கு வைத்தார்களா?, அவரது பத்திரிகையில் சிலருக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களிலும் சிறப்பு விசாரணை குழுவினர் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.