அமெரிக்காவை சேர்ந்த ரிச்சட் எச். தேலருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்துக்கான முடிவுகளை உளவியலுடன் ஒருங்கிணைத்து எப்படி தீர்வு காண்பது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆய்வுக்காக ரிச்சட் இந்த விருதைப் பெறுகின்றார்.
சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி அல்பிரட் நோபல் நினைவாக பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
72 வயதான ரிச்சட் எச். தேலரின் பொருளாதாரம் – உளவியல் தொடர்பான ஆய்வுகள், சுய கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, தனிப்பட்ட முடிவுகள் பொருளாதார சந்தை விளைவுகளை எவ்வாறு பாதிக்கின்றன போன்றவற்றை விளக்குவதாக அமைக்கின்றன.
“நடத்தையியல் பொருளாதாரம்” என்ற துறையில் இவரது கண்டுபிடிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பொருளாதார முகவர்கள் மனிதர்கள், எனவே பொருளாதார மாதிரிகள் இதனை தன்னகத்தே கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடும் ரிச்சட் எச். தேலர் பொருளாதாரம் தொடர்பில் ஆறு நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.