கிளிநொச்சியில் உள்ள ஏழு பெரிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழான பெரும் போக நெற்செய்கை விதைப்பு எதிர்வரும் 31ந்திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என கிளிநொச்சி விவசாயக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழு கூட்டம் நேற்று செவ்வாய் கிழமை மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், கரியாலைநாகபடுவான்குளம், குடமுருட்டிக்குளம், கல்மடுக்குளம், புதுமுறிப்புக்குளம் ஆகிய குளங்களின் கீழ் பெரும்போக நெற்செய்கை தற்போது தொடங்கியுள்ளது. புழுதி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதன்படி இம்மாத 31ந் திகதிக்குள் நெல் விதைப்புகள் நிறைவு செய்யப்பட வேண்டும். குளங்களின் நீர் மட்ட உயர்விற்கேற்ப நீர் விநியோகம் இடம் பெறும். குறிப்பாக இரணைமடுக்குளம் பத்தடி நீர்மட்ட உயர்விற்குப் பின்னரே முதலாவது நீர் விநியோகம் இடம் பெறும் எனத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் விதை நெல்லிற்கான நெருக்கடி இருப்பதாக விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டது. கடந்த சிறுபோகத்தில் வறட்சி காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல் விதை நெல்லாக பயன்படுத்த முடியாதிருப்பதாகவும் விவசாயிகளினால் சுட்டிக் காட்டப்பட்டதுடன் விதை நெல்லினைப் பெற்றுத் தருவதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கால்நடைகள் கட்டுப்படுத்துவதற்கான கால அட்டனையும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி15-10-2017 தொடக்கம் 28-02-2018 வரை கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் விவவாயக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் கரைச்சி, பளை பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர் கமநல உதவி ஆணையாளர் கமக்கார அமைப்புகளின் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.