Home இலங்கை என்ன செய்யப் போகின்றார்கள்? – பி.மாணிக்கவாசகம்

என்ன செய்யப் போகின்றார்கள்? – பி.மாணிக்கவாசகம்

by editortamil

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜனவரியில் வரவிருக்கின்ற நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இருந்த இழுபறிகளுக்கு முடிவேற்பட்டுள்ளதையடுத்தே தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மாகாணசபைத் தேர்தல்களைப் போலவோ அல்லது பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களைப் போன்று, ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கூற முடியாது.

இருந்தபோதிலும், உள்ளுராட்சி சபைகளிலும் அரசியல் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு போக்கே நாட்டில் நிலவுகின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தமது இருப்பின் மகிமையையும், தமது அரசியல் இருப்பின் பலத்தையும் பரீட்சித்துக் கொள்வதற்குரிய அடிமட்டத்திலான ஒரு பரீட்சைத் தளமாகவே இந்தத் தேர்தல்கள் திகழ்கின்றன.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், அரசியல் கட்சிகள் மத்தியில் அரசியல் அதிகார பலத்திற்கான போட்டி நிலைமை அதிகரி;த்திருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே இந்த நிலைமை தூக்கலாகத் தோன்றுகின்றது.

யுத்தகாலத்திலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், யுத்த வெற்றியின் மிதப்பில் ஆட்சி நடத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்திலும் இருந்த கெடுபிடிகள் காரணமாக அரசியலில் ஈடுபடுவதற்குரிய ஆர்வம் சமூகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அரசியலில் ஈடுபடுவதற்கான சூழலும் ஊக்குவிப்பும்

நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள், கெடுபிடிகள் நீங்கியுள்ள சூழல் என்பன பலரையும் அரசியலில் ஈடுபடத் தூண்டியிருக்கின்றது. இந்த நிலையிலேயே மாகாணசபை தேர்தல்களிலும் பார்க்க 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பல புது முகங்கள் பல கட்சிகளிலும் களத்தில் இறங்கியிருந்தன.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஜனநாயக இடைவெளி விரிவடைந்திருக்கின்றது. இந்த நிலையில் வரப்போகின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்திருக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்க முடியும்.

பொது அமைப்புக்களிலும் மற்றும் சமூக மட்டத்திலான செயற்பாடுகளிலும் ஈடுபாடு கொண்ட பலரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் பங்கெடுப்பதற்காக முண்டியடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய இடமளிக்க வேண்டும் என தேர்தல் சட்டவிதிகளின் மூலம் நிபந்தனை விதித்திருப்பதையடுத்து, பெண்களும் இம்முறை அதிக அளவில் களமிறங்குவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளுராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சமூக மட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், பெண்கள் எவ்வாறு பொதுவாக அரசியலில் ஈடுபடலாம், குறிப்பாக உள்ளுராட்சி சபைகளில் எத்தகைய பங்களிப்பைச் செய்யலாம், அதற்கு அரசியல் ரீதியாக என்னென்ன விடயங்களில் எவ்வாறு கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்பது போன்ற விடயங்களில் இந்த நிறுவனங்கள் பரவலாகப் பயிற்சிகளை வழங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும்

இத்தகைய பின்னணியில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ள வடகிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் சவால்கள் மிகுந்ததொரு சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அனுமானிக்க முடிகின்றது.

குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த உள்ளுரர்டசி சபைத் தேர்தலை கூட்டு அமைப்பாக எதிர்கொள்ளுமா அல்லது தனித்தனி கட்சிகளாக தனித்து களமிறங்கி தேர்தலில் பங்கேற்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளே நிலவுகின்ற கருத்து வேற்றுமைகளும், கூட்டமைப்பை வலிமையானதொரு அரசியல் அமைப்பாகக் கட்டியெழுப்பத் தவறியிருப்பதுவும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறலாம்.

கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக்கட்சி கூட்டமைப்புக்குள்ளே தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வலுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே முன் வைக்கப்பட்டு வருகின்றது. தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதன் ஊடாக, அந்தக் கட்சி மக்கள் மத்தியில் தனக்குள்ள ஆதரவை படிப்படியாக அதிகரித்து, இறுதியாக தான் மட்டுமே எஞ்சியிருப்பதற்கான ஓர் அரசியல் இலக்கை நோக்கி காய்களை நகர்த்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளைக் கொண்டதொரு கூட்டே தவிர, தனித்துவமான அரசியல் அடையாளததையோ அல்லது கட்டமைப்பையோ அது கொண்டிருக்கவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது மக்கள் மத்தியிலும் சர்வதேச அளவிலும் வெறுமையானதோர் அடையாளம் என்பதற்கு அப்பால், அதற்கென தனித்துவமானதோர் அடையாளத்தைக் கொண்டதல்ல.

தேர்தல்களில் போட்டியிடுகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது வெறுமையானதோர் அரசியல் போர்வையாகவே தோற்றம் கொண்டிருக்கின்றது. அந்தத் தோற்றத்தை வைத்துக் கொண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் அந்த கூட்டு அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றன.

மக்களுக்கான அரசியலா கட்சிக்கான அரசியலா…..?

அதிகாரபூர்வமாகப் பார்த்தால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வரையறைக்குள்ளேயே அடங்குகின்றார்கள். அவர்கள் தங்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அழைத்துக் கொண்டாலும், சட்ட ரீதியாக அந்த அந்தஸ்து அவர்களுக்குக் கிடையாது என்றே கூறவேண்டும். இந்த நிலையில் தமிழரசுக் கட்சியே பலம் வாய்ந்த கட்சியாகத் திகழ்கின்றது.

தேர்தலுக்கான நடைமுறையில் அதிகார அந்தஸ்தும் பலமும் வாய்ந்ததாகத் திகழ்கின்ற ஒரே காரணத்திற்காகவே, தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தமிழரசுக் கட்சி உயர்வான ஓரிடத்தில் இருந்து செயற்படுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற பெயருக்காக ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேட்பாளர் பட்டியலில் அது இடம்கொடுத்து வருகின்றது. அவ்வாறு இட ஒதுக்கீடு செய்யும்போது, வாக்குவாதங்களும், இழுபறிகளும் நிறையவே இடம்பெறுவது வழக்கம். இறுதியில் தலைமைக்கட்சி என்பதற்காக மட்டுமல்லாமல், அதிகாரம் வாய்ந்த கட்சி என்ற ரீதியிலும், ஏனைய கட்சிகளிலும் பார்க்க தமிழரசுக் கட்சியே அதிக எண்ணிக்கையிலான வேடபாளர்களை தேர்தல்களில் களமிறக்கி வருவதைக் காண முடிகின்றது.

பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு அமைப்பாகச் செயற்படும்போது, அந்த அமைப்பின் பங்காளிகள் என்ற ரீதியில் அனைத்துக் கட்சிகளும் சமமானவைகளாக இருப்பது அவசியம். குறிப்பாக ஓரு மோசமான யுத்தத்தில் பேரழிவைச் சந்தித்து, அந்த அழிவில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் இதய சுத்தியான நடவடிக்கைகளின்றி கலங்கி நிற்கின்ற மக்களைப் பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள், அந்த மக்களின் நன்மைக்காக ஒன்றிணைந்துள்ள போதிலும், இறுக்கமான ஒரு கட்டமைப்பின் கீழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தொடர்ச்சியாகப் பின்னடைவையே சந்தித்து வருகின்றன.

இதற்கு அந்தக் கட்சிகள் மத்தியில், அந்த கூட்டமைப்புக்கு உள்ளே இருக்க வேண்டிய ஒன்றிணைந்த செயற்பாட்டுத் தன்மை இல்லாமையே இதற்கான முக்கிய காரணமாகும். யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அரசியல், சமூக நிலைமைகளுடன், அவர்களுடைய சுபிட்சமான எதிர்காலத்திற்கு அவசியமான, வாழ்வதாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் முக்கிய அம்சங்களில் இந்த கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்துவதைக் காண முடியவில்லை. மாறாக அந்தக் கூட்டமைப்புக்குத் தலைமையேற்றுள்ள தமிழரசுக் கட்சி மக்களுக்கான அரசியலிலும் பார்க்க தனது கட்சி அரசியல் செயற்பாடுகளிலேயே அதிக நாட்டம் கொண்டு செயற்பட்டு வருவதைக் காண முடிகின்றது,

இந்தப் போக்கு கூட்டமைப்பின் அரசியல் வலிமையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அதனை பலமிழக்கச் செய்வதற்கே வழிவகுத்திருக்கின்றது. சமூக ஊடகங்கள் சமூகத்திற்குள்ளே ஆழமாக வேரூன்றி பல துறைகளிலும் இளைஞர்களை மட்டுமல்லாமல் மூத்தவர்களையும் விழிப்படையச் செய்துள்ள ஒரு காலப் போக்கில் வரப்போகின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.

‘ஒருமித்த நாடு’ உருவாக்கியுள்ள நிலைமை

வரப்போகின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, கூட்டமைப்பாகப் போட்டியிடுமா அல்லது அதன் கட்சிகள் தனித்தனியே பிரிந்து தனிக் கட்சிகளாகப் போட்டியிடப் போகின்றனவா என்பது முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியமான செயற்பாடுகளில் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடாமல், தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றது என்பது குற்றச்சாட்டாக இருந்தாலும், நடைமுறையில் அனைவரும் அதனைத் தெளிவாகக் காண முடிகின்றது.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதில் அரசாங்கம் அக்கறையற்ற ஒரு போக்கில் செயற்பட்டு வருகின்ற போதிலும், அதற்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையாகிய தமிழரசுக்கட்சியே தனித்து முடிவெடுத்திருந்தது.

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தனும் சுமந்திரனுமே அங்கம் வகிக்கின்றார்கள். ஆனால், அந்த வழிநடத்தல் குழுவில் இடம்பெறுகின்ற விடயங்கள் தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதுமில்லை. கலந்தாலோசிப்பதுமில்லை.

ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட்டு, சமஸ்டி முறையிலான ஆட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் நிலைப்பாடாகும். ஆனால், எந்த வகையிலும் பிரிக்கப்பட முடியாது என்பதை நிலைநாட்டும் வகையில் ஒற்றையாட்சியை மேலும் உறுதிப்படுத்தி நிலை நிறுத்துகின்ற ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொல்லுக்கு ‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதம் தமிழ் மக்கள் சார்பில் வழிநடத்தல் குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இது, சமஸ்டி ஆட்சி முறைக்கு மட்டுமல்லாமல், அனைத்து இனங்களையும் ஐக்கியப்படுத்துகின்ற இலங்கைக்குள் அதிகாரங்களை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கும்கூட ஆப்பு வைக்கின்ற ஒரு தீர்மானமாகவே நோக்கப்படுகின்றது. தனிநாட்டுக் கோரிக்கைக்குப் பதிலாக மீளப் பெற முடியாத வகையிலான அதியுச்ச அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் காண்பதற்கான வழியாகும் என கூறுபவர்களே அதற்கு எதிரான ஒரு நிலைப்hபட்டிற்குத் துணை போயிருக்கின்றார்கள் என வழிநடத்தல் குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கின்ற தலைவர்கள் மீது குறை கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அவர்கள் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்களுடனும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடனும் கலந்தாலோசிக்காமையே இதற்கு முக்கிய காரணமாகும். அது மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் நலன்கள் சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய அம்சங்கள் என்னென்ன உள்ளடக்கப்பட வேண்டும் என்பது குறித்து இதுவரையிலும், கூட்டமைப்புக்குள் கலந்தாலோசனை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் ரீதியான பின்னடைவு

எனவே, நல்லாட்சி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாகத் தார்மீக அடிப்படையில் ஆதரவளித்துச் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முக்கியமான அரசியல் விவகாரங்களான விடயங்களில் கூட்டமைப்புக்குள்ளேயே ஒத்திசைவான முடிவுகளை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் செயற்படுவதில்லை. கூட்டமைப்பின் தலைமை என்ற ரீதியில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஒருசிலரே முடிவுகளை மேற்கொண்டு செயற்பட்டுச் செல்கின்ற போக்கு கூட்டமைப்புக்குள் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கின்றது. இந்த நிலைமையே, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஐக்கியத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டுள்ள கடந்த இரண்டரை வருடங்களாக அரசாங்கத்திற்குப் பல வழிகளிலும் ஒத்துழைத்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை சாதித்துள்ள விடயங்கள் என்ன, என்ற கேள்விக்கு அர்த்தமும், ஆழமும் கொண்ட பதில்களைக் காண முடியவில்லை என்றே கூற வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு ஒரு வருட காலத்திற்குள்ளேயே ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்று கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் உறுதியாகக் கூறி வந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தாமதமாகியதனாலும், வேறுபல காரணங்களினாலும், அரசியல் தீர்வு விடயத்தில் அவர் எதிர்பார்த்த வகையில் காரியங்கள் நடைபெறவில்லை. அது மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்புக்கான வரைபில் உள்ளடக்கப்படுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள அடிப்படை விடயங்கள் குறித்து வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் நலன்களைக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை. இவை இரண்டும், அரசியல் ரீதியான செயற்பாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்ட மிகவும் முக்கியமான ஒரு பின்னடைவாகும்.

யுத்தமோதல்கள் தீவிரமடைந்திருந்தபோது விடுதலைப்புலிகளின் வலிமையான ஆயுதப் போராட்டம் தங்களுக்கு ஓர் அரசியல் தீர்வைக் கொண்டு வரும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்பினார்கள். அதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்குப் பல்வேறு நெருக்கடிகள், உயிரச்சறுத்தலான நிலைமைகளுக்கு மத்தியிலும் அவர்களுக்குத் தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்கள். அந்த நம்பிக்கை 2009 ஆம் ஆண்டு ஆயுத ரீதியாக விடுதுலைப்புலிகள் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக சுக்கு நூறாகச் சிதைந்து போனது.

என்ன செய்யப் போகின்றார்கள்?

அதன் பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தலைமை தாங்கியது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் உடனடியாக உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். யுத்தம் காலத்தில் பலவந்தமாக சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பல வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த அந்த மக்கள் அனைவரும் அவர்களுடைய கிராமங்களில் சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்குரிய தொழில் வசதிகள் வாழ்க்கை வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் அடிப்படை உரித்தான இந்த விடயங்கள் இன்னுமே முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இராணுவமும், சிங்களவர்களும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகளை அபகரித்திருப்பது இன்னும் தொடர்கின்றது. சிங்களவர்களாலும், இராணுவத்தினராலும் அபகரிக்கப்பட்டுள்ள அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் இன்னும் மீளளிக்கப்படவில்லை. தங்களுக்குச் சொந்தமான வடபகுதி கடலோரங்களில் தமிழ் மீனவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த முடியவில்லை. தென்பகுதி மீனவர்களினதும் இந்திய மீனவர்களினதும் அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை எனவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை காணி உரிமை உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்பதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பின்னடைவையே சந்தித்துள்ளது.

யுத்தமோதல்களின்போது இடம் பெற்றது மட்டுமல்லாமல், அதன் பின்னரும்கூட இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறும் விடயத்தில் ஐநா மனித உரிமைப் பேரவையின் ஊடாக சர்வதேசம் தலையீடு செய்திருக்கின்ற போதிலும், அந்த நிலைமையை உருவாக்கியதாக அதற்கு உரிமை கோருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது, பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் மீது உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை.

நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகளையும் காண முடியவில்லை.

காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் மந்தகதியிலேயே ஊர்ந்து கொண்டிருக்கின்றது. இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தங்களுக்கு சம்பந்தமே கிடையாது என்ற பதிலே அரசாங்கத்திடம் இருந்தும் இராணுவத்திடம் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர்களை அழித்துவிட்டதாகவும், பயங்கரவாதத்தை இல்லாமல் ஆக்கிவிட்டதாகவும் கூறுகின்ற அரசாங்கம், விடுதலைப்புலிகளுக்கு நிர்ப்பந்தம் மிக்க சூழலில் உதவி செய்தார்கள் என்பதற்காக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கின்றது. இந்த விடயத்திலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால் எதையுமே செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை கூட்டு அமைப்பாக எதிர்கொள்ளப் போகின்றதா அல்லது உதிரிக் கட்சிகளாக எதிர்கொள்ளப் போகின்றதா என்பதற்கும் அப்பால், கூட்டமைப்பாக இருந்தாலும்சரி, தனிக்கட்சிகளாக இருந்தாலும்சரி தமிழ் மக்களுக்கு எவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கப் போகின்றன என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

அரசியல் தீர்வு காணப்போகிறோம் என கூறப்போகின்றார்களா? உள்ளுராட்சி சபைகளின் மூலம் கிராம மட்டங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கப் போகின்றோம் என உறுதியளிக்கப் போகின்றார்களா? அல்லது இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவித்துத் தருவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்கப் போகின்றார்களா? அல்லது காணாமல் போயிருப்பவரகளைக் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருவோம், சிறைச்சாலைகளில் எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கப் போகின்றார்களா, அல்லது சர்வதேசம் தமிழ் மக்கள் பக்கமே இன்னும் நிற்கின்றது. நாங்கள் தமிழர்கள் ஓரணியில் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். ஓரணியில் திரண்டிருக்கின்றோம். உறுதியான அரசியல் தலைமையைக் கொண்டிருக்கின்றோம் என சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக ஒன்றிணைந்து எங்களுக்கு வாக்களியுங்கள் என பழைய பல்லவியையே புதிய மெட்டில் பாடப் போகின்றார்களா?

இவற்றில் என்ன செய்யப் போகின்றார்கள் அதனை தமிழ் மக்கள் எந்த வகையில் ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More