152
இந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதரத்தை மேம்படுத்தி ஏழ்மைய இல்லாமல் செய்ய வேண்டும். அதற்காக என்னுடன் கலந்துரையாட வாருங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தனது உரையில் தெரிவிக்கையில் ,
யாழ்.வருகை தந்த போது சில போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. நான் பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயக உரிமை என்பது எனக்கு தெரியும்.
என்னை எல்லோருமாக வாக்களித்தே ஜனாதிபதி ஆக்கினீர்கள். அது எனக்கு நன்றாகவே தெரியும். உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று தான் ஜனாதிபதி ஆக்கினீர்கள். அதுவும் எனக்கு தெரியும்.
இந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதரத்தை மேம்படுத்தி ஏழ்மைய இல்லாமல் செய்ய வேண்டும். அதற்காக என்னுடன் கலந்துரையாட வாருங்கள் என உங்களிடம் அழைப்பு விடுக்கிறேன்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போது எனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். நான் எனது வாகனத்தை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று அவர்களின் பிரச்னையை கேட்டேன். அவர்கள் தமது கோரிக்கையை என்னிடம் கூறினார்கள்.
அதன் போது நான் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தேன். அவர்கள் அதற்கு வர தயாராக இல்லை. தமது கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள் என என்னிடம் கோருகின்றார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் , பேசித்தான் தீர்க்க முடியும். வன்முறையால் தீர்க்க முடியாது.
முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வன்முறைகளை ஏற்படுத்த வேண்டாம். இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுத்த முடியாது. யுத்தத்தால் பலவற்றை இழந்து அனுபவங்களை பெற்று உள்ளோம். யுத்தம் ஏற்பட்டால் செல்வந்தர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுவார்கள் ஏழைகளே கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மீண்டும் யுத்தம் ஏற்பட அனுமதிக்க முடியாது.
இங்கே கறுப்புக்கொடி உயர்த்த தேவையில்லை. சமாதனத்திற்கான வெள்ளைக்கொடிகளையே உயர்த்த வேண்டும். எமக்கிடையில் விரோதங்கள் வன்முறைகள் ஏற்பட்டால் , சக்தி பெறுவது வேறு நபர்கள் தான்.
எல்லா இன மத மக்கள் மத்தியில் , சகோதரத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும் என செயற்பட்டு வருகிறேன். அந்நேரத்தில் என்னை பலவீனப்படுத்தினால் , பேய்களுக்கு தான் பலம் கூடும். உங்கள் வாழ்வினையும் நாட்டினையும் ஒளிமயமாக்க ஒன்று பட்டு செயற்படுவோம். என மேலும் தெரிவித்தார்.
Spread the love