இந்தியாவின் கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றம், பாடசாலை மற்றும் கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சினையில் கல்லூரி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், பாடசாலை மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்காக மாத்திரமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
அத்துடன் அவை கற்றலுக்கான இடமே தவிர போராடும் இடமல்ல எனக் கூறியுள்ள உயர்நீதிமன்றம், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடாலம் என்றும் தெரிவித்தது.
இதேவேளை பாடசாலை மற்றும் கல்லூரிக்கு மாணவர்களின் போராட்டத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம், மீறி போராட்டம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.