185
புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு.
விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்’ தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன தலைமையில் இன்று (14) ஆரம்பமானது.இன்று காலை புத்தூர், நிலாவரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பழ மரக்கன்றுகள் மற்றும் உணவுப் பயிர் கன்றுகளை ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கிவைத்தார்.
உணவுப் பயிர்களை நாட்டுகின்ற முறையை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், ‘சிதமு கான்தா’ விவசாய அமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 4000 பெண்களுக்கு உணவுப் பயிர் விதைகளை வழங்கிவைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
விவசாயத்துறை அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயக் கினறுகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நிதிக்கான காசோலையையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
விவசாயத்துறைக்கு குறைந்த செலவில் சூரிய சக்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் வாழைக்குலைகளை வெட்டும் நவீன இயந்திரமொன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய சமூகத்தினருடன் ஜனாதிபதி சுமுகமாகக் கலந்துரையாடினார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் கந்தையா சிவநேசன், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர் சிவகுமார், யாழ் மாவட்ட அதிபர் என். வேதநாயகம் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Spread the love