பெங்களூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய இறைச்சி கூடம் தொடர்பாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்த மென்பொறியாளர் மீது இனம் தெரியாத குழு ஒன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகின்ற பெங்களூரின் கோரமங்களாவை சேர்ந்த 45 வயதுடைய நந்தினி என்பவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர் கடந்த சனிக்கிழமை மாலை தலகாட்புராவுக்கு சென்ற போது அங்கு ஒதுக்குப்புறமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சி கூடம் செயல்பட்டதைக் கண்ட அவர் அங்கு அடைக்கப்பட்டுள்ள 14 மாடுகளை மீட்குமாறு தலகாட்புரா காவல் நிலையத்தில் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தான் காவல்துறையினரிடம் முறையிட்ட போது அந்த இறைச்சி கூடத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 15 காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர் எனவும் தேவைப்பட்டால் நீங்களும் நேரில் சென்று பாருங்கள் என தெரிவித்ததாகவும் பாதுகாப்புக்காக 2 காவலர்களுடன் இறைச்சி கூடத்தின் உள்ளே தான் நுழைந்த போது அங்கு காவல்துறையினர் யாரும் இருக்கவில்லை என நந்தினி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே 30 பேருக்கும் அதிகமானோர் கொண்ட ஒரு குழு தங்களை கற்களால் தாக்கியது எனவும் இதைக் கண்ட காவலர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தானும் எனது நண்பர் செஜிலும் ஓடி போய் காரில் ஏறிக் கொண்டதாக தெரிவித்த நந்தினி தம்மை வழிமறித்த குழு சரமாரியாக தாக்கியதில் தனக்கு கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் தனது நண்பர் செஜிலுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தலகாட்புரா காவல்துறையினர் இனம்தெரியாத குழுவின் மீது சட்ட விரோத இறைச்சி கூடம் நடத்தியது, பெண் பொறியாளர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறைச்சி கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.